நாட்டின் முதன்மையான புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.,யின் தலைவரைத் தேர்வு
செய்ய பிரதமர் மோடி தலைமையிலான 3 பேர் கொண்ட குழு இன்று கூடுகிறது.
சி.பி.ஐ. அமைப்பின் தலைவராக இருந்த அனில் சின்ஹா, கடந்த டிசம்பர் 2ஆம் தேதி ஓய்வுபெற்றார். அதன்பின், இடைக்கால பொறுப்பையேற்று
குஜராத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ராகேஸ் அஸ்தானா இயக்குநராக செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், சி.பி.ஐ. அமைப்புக்கு புதிய தலைவரைத் தேர்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது அவரின் பிரதிநிதி ஆகியோர் கொண்ட குழு இன்று கூடி தேர்வு செய்யவிருக்கிறது.
இப்போதுள்ள நிலையில், ஐ.பி.எஸ். தகுதியில் 45 அதிகாரிகள் பெயர் பரிசீலனையில் இருப்பதாகவும் அதில் ஒருவர் சி.பி.ஐ. இயக்குநராக தேர்வு செய்யப்படலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
அதிலும் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியான கிருஷ்ணா சவுத்ரி, அருணா பகுகுணா மற்றும் எஸ்.சி.மாத்தூர் ஆகியோரில் ஒருவர் நியமிக்க அதிகமான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதில் சவுத்ரி, பகுகுணா கடந்த 1979ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆவார்கள். பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவரான சவுத்ரி, இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையின் தலைவராக இருக்கிறார். தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவரான பகுகுணா, ஐதராபாத் சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடெமியில் இயக்குநராகப் பணியாற்றி வருபவர்.
மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவரும், 1981ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்வானவருமான மாத்தூர், மஹாராஷ்டிரா மாநில போலீஸ் வீட்டு வசதி நலத்துறையில் பணியாற்றி வருகிறார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...