கூட்டுறவு
நியாய விலைக்கடைகளில் ஓராண்டுக்கு நீடிக்கும் வகையிலான குடும்ப அட்டைகளில்
உள்தாள்களை இணைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
மாநிலம் முழுவதிலும் ஒவ்வொரு கூட்டுறவு நியாய விலைக்கடைகளில் ஒவ்வொரு குடும்ப அட்டையின் பயன்பாடு டிச.31-ஆம் தேதியோடு முடிந்தது. அதைத் தொடர்ந்து மேலும் ஓராண்டு நீடிக்கும் வகையில் குடும்ப அட்டைகளில் உள்தாள் இணைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில், சென்னையில் உள்ள ஐ.சி.எஃப் கூட்டுறவு நியாய விலைக்கடையில் குடும்ப அட்டையில் உள்தாள் இணைக்கும் பணி தொடங்கியது. அந்த கடைக்கு உள்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் ஆர்வத்துடன் வந்து பதிவேடுகளில் கையொப்பமிட்டு குடும்ப அட்டையில் உள்தாள்களை இணைத்துக் கொண்டனர்.
இது குறித்து நியாய விலைக்கடை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இதற்கு முன்பே போலி குடும்ப அட்டைகளை ஒழிக்கும் நோக்கத்தில் ஏற்கெனவே புதிய குடும்ப அட்டைகளுக்கு பதிலாக கையடக்க அளவில் ஸ்மார்ட் அட்டைகள் வழங்குவதற்கான முன்னேற்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக குடும்ப அட்டைதாரரின் முழுவிவரங்களுடன் ஆதார் எண், செல்லிடப்பேசி ஆகியவைகளை கையடக்க கருவி உதவியுடன் பதிவு செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரங்களில் கூட்டம் நெரிசலின்றி 100 குடும்ப அட்டைகளுக்கு உள்தாள் இணைப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது என்றார் அவர்.
இதுபோன்று சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் குடும்ப அட்டைகளில் உள்தாள் ஒட்டும் பணி நடந்தது. முதல் நாளிலேயே ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று குடும்ப அட்டைகளில் உள்தாளை இணைத்துச் சென்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...