கோவையிலுள்ள அரசு அலுவலகங்களில்...எல்லாம் 'இ' மயம்: இனியில்லை பயம்! நேர்மை, வெளிப்படைத்தன்மைக்கு முதல்படி!
அரசு அலுவலகங்களின் பணிகள், நடவடிக்கைகள் அனைத்தையும், ஆன்லைன், டிஜிட்டல் என மின்னணு மயமாக மாற்றுவதற்கான முயற்சிகள், கோவையில் தீவிரமடைந்துள்ளன; இது வெளிப்படையான, நேர்மையான நிர்வாகத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கை துளிர் விட்டுள்ளது.
கோவையில், 53 அரசுத்துறை அலுவலகங்கள் உள்ளன. இதில், 33 ஆயிரம் அரசுத்துறை பணியாளர்கள், அதிகாரிகள் பணிபுரிகின்றனர். அரசுப்பணியாளர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்குதல், அரசு சார்ந்த பணிகளுக்கு பணம் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மாவட்டக்கருவூலம் செய்து வருகிறது.
முதல் நம்பிக்கை...
அரசின் மற்ற துறைகள் அனைத்திற்கும் உண்டான செலவுத்தொகையை வழங்குவதாலும், அரசுத்துறைகளுக்கான வருவாயை மாவட்ட கருவூலத்தில் செலுத்துவதாலும், முதற்கட்டமாக இத்துறை 'ஆன்லைன்' நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
அதனால் www. treasury.gov.in என்ற ஆன்லைன் முகவரியினுள் சென்று, கருவூலக்கிளையின் பெயரை 'கிளிக்' செய்தால், நமக்கு பல்வேறு தகவல்கள் கிடைக்கும்; அதில் நமக்கு என்ன பணிக்கான தகவல் தேவையோ அதை தேர்வு செய்து, உள்ளே நுழைந்து தெரிந்து கொள்ளலாம். ஏற்கனவே, சமர்ப்பிக்கப்பட்ட அரசுத்துறை ரீதியான ரசீதின் நிலையையும் நாம் தெரிந்து கொள்ளலாம்.
இது தவிர ஒவ்வொரு அரசுத்துறை அலுவலகங்களிலும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், கடன், பிடித்தம், ஒப்பந்தக்கூலி, தொலைபேசி மற்றும் மொபைல் பில் காகிதம், எழுதுபொருள், பிரிண்ட்டர் உள்ளிட்டவைகளுக்கான செலவுத்தொகையின் நிலையை தெரிந்து கொள்ளலாம். அரசு சார்பில் வழங்கப்படும் ஊக்கத்தொகை, போனஸ், பயணப்படி உள்ளிட்ட தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும்.
தனித்தனி ரகசியக்குறியீடு!
இதற்காக, ஒவ்வொரு துறைக்குமான ரகசியக்குறியீடு, அந்தந்தத்துறை பொறுப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாதத்தின் முதல், 15 நாட்களுக்கு செலவுத்தொகைக்கான ரசீதுகள் மாவட்டக் கருவூலத்தில் சமர்ப்பிக்கப் படுகின்றன. அடுத்த, 15 நாட்களுக்குள் அரசுப்பணியாளர்களின் சம்பளத்தொகை தொடர்பான 'பில்'களை சமர்ப்பிக்கலாம் என்று காலஅவகாசம் தரப்பட்டுள்ளது.
சமர்ப்பிக்கப்பட்ட பில்லின் நிலை, மற்றும் பணிபுரிபவர்களின் வருவாய் தொடர்பான நிலையை 'ஆன்லைன்' வாயிலாக எளிதாக தெரிந்து கொள்ளலாம். கருவூலத்துறையில் செய்யப்பட்ட 'ஆன்லைன்' நடைமுறை படிப்படியாக அடுத்தடுத்து ஒவ்வொரு துறையிலும் புகுத்தப்பட்டுள்ளது. அனைத்துத்துறைகளிலும், 'ஆன்லைன்' நடைமுறையை பின்பற்ற, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அதற்கேற்ப பயிற்சியையும் அனைத்துத்துறை அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் வழங்கி வருகிறது. அதனால் கோவையிலுள்ள பெரும்பாலான அரசுத்துறைகள் 'ஆன்லைன்' நடைமுறைக்கும், ஆவணங்களை சேமித்து வைப்பது டிஜிட்டல் தொழில் நுட்பத்துக்கும் மாறிவருகிறது.
கலெக்டர் ஹரிஹரன் கூறுகையில், ''கோவை மாவட்டத்தில், வருவாய், வழங்கல், நுகர்பொருள் வாணிபக்கழகம், கூட்டுறவு உள்ளிட்ட பெரும்பாலான துறைகளில், 'ஆன்லைன்' நடைமுறையை அறிமுகப்படுத்திவிட்டோம். பொருட்களின் இருப்பு, பொருள் வழங்குதல், பொருட்களின் தேவையை தெரிவிப்பது என்று அனைத்துமே 'ஆன்லைன்' முறையில் தான்.
அனைத்துத்துறைகளிலும், 50 சதவீதம் 'ஆன்லைன்' நடைமுறை நிறைவு செய்யப்பட்டுள்ளது.
வருங்காலங்களில் அனைத்து துறை ரீதியான பணிகளும், மின்னணு மயமாகி விடும். சேகரம் செய்து வைக்கப்படும் ஆவணங்கள் டிஜிட்டல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. திங்கள் தோறும் பெறப்படும், மக்கள் குறைதீர்ப்பு மனுக்கள் 'ஆன்லைன்' முறையிலும் பெற்றுக்கொள்ளப்படுகின்றன.
அதன் நிலையை gdp.tn.gov.in என்ற முகவரியில் நுழைந்து, கோயம்புத்துார் மாவட்டத்தை 'கிளிக்' செய்து, நம் குறைகளை ஆன்லைனில் பதிவு செய்யலாம். அவ்வாறு பதிவிட்ட மனுக்களின் நிலையையும், எடுக்கப்பட்ட நடவடிக்கையையும், மக்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதனால், பணிகள் எளிமையடைந்துள்ளன. அனைத்துத் தகவல்களையும் மக்கள் எளிமையாக தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
பல்வேறு அரசுத் துறைகளிலும் புரையோடிப் போயிருக்கும் லஞ்சத்தை, தொழில் நுட்பத்தால் மட்டுமே துரத்த முடியும். அந்த வகையில், மின்னணு மயமாக அரசுத்துறைகள் மாறும்போது, நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, நேர்மை இருக்குமென்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
இருப்பினும், லஞ்ச, ஊழலில் ஊறித் திளைக்கும் அதிகாரிகள் மாற்றப்படாத வரை, இவை எதிலும் மாற்றம் வருமா என்பது விடை தெரியாத கேள்வி.
இது தான் ஓர் உதாரணம்!
ஜாதிச்சான்றிதழ், வாரிசு சான்றிதழ், சிட்டா, பட்டா, அடங்கல், இருப்பிடச் சான்று என, மக்களுக்குத் தேவையான பல்வேறு சான்றுகளுக்கும், தற்போது 'ஆன்லைன்' முறையில் தான் விண்ணப்பிக்கப்படுகின்றன. ஆனால், அதை நேரடியாகச் சென்று வாங்கும்போது, எல்லாவற்றுக்கும் சேர்த்து, மொத்தமாய் 'பில்' போடப்பட்டு, இரட்டிப்பாக லஞ்சம் வாங்கப்படுகிறது.
அதேபோன்று, புதிய ரேஷன் கார்டுக்கு 'ஆன்லைன்' முறையில் விண்ணப்பித்தாலும், கார்டை நேரில் தான் சென்று பெற வேண்டும்; முகவரி மாற்றம், பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் செய்வது, ஒப்படைப்புச் சான்று என எல்லாமே, கையில் தான் (மேனுவல்) எழுதித் தரப்படுகிறது. இதற்கும், பெருமளவில் பணம் பறிக்கப்படுகிறது. அரைகுறை மின் ஆளுமையின் அபாயங்கள் இவை தான்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...