கொலை வழக்கில் சாட்சி சொல்ல வந்தவர்களை குறுக்கு விசாரணை என்ற பெயரில்
வக்கீல்கள் கொடுமை செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்து சென்னை ஐகோர்ட்டு
தீர்ப்பு அளித்துள்ளது.
அதிகாரி கொலை
கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையின் மனித வள அதிகாரியை, அந்த தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் சிலர் கடந்த 2009–ம் ஆண்டு அடித்துக்கொலை செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கொலை உள்ளிட்ட பல சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பலரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த கோவை சிறப்பு கோர்ட்டு, தொழிற்சங்க நிர்வாகிகள் சிலருக்கு ஆயுள் தண்டனையையும், பலரை விடுதலை செய்தும் கடந்த 2015–ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்களும், பலரை விடுதலை செய்ததை எதிர்த்து தொழிற்சாலை நிர்வாகமும் மேல்முறையீடு செய்தது.
காலம் மாறிவிட்டது
இந்த மேல்முறையீட்டு வழக்குகளை எல்லாம் நீதிபதி எஸ்.நாகமுத்து, என்.ஆதிநாதன் ஆகியோர் விசாரித்து, தொழிற்சங்க நிர்வாகிகள் இருவருக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்தும், சிலருக்கு தண்டனைகளை மாற்றி அமைத்தும் தீர்ப்பு அளித்தனர்.
மேலும் அந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:–
வழக்குகளை தேவையில்லாமல் தள்ளிவைக்க கோராமல், சாட்சிகளை சட்டப்படி குறுக்கு விசாரணை செய்து, விரைவாக வழக்குகளை முடிவுக்கு கொண்டுவர நீதிமன்றங்களுக்கு உதவும் வக்கீல்களின் பணியாற்றிய காலங்கள் எல்லாம் போய்விட்டன. அந்த காலங்கள் எல்லாம் மாறி விட்டன என்று தான் சொல்லவேண்டும். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இந்த மேல்முறையீட்டு வழக்குகள் உள்ளன.
வேடிக்கை பார்த்த நீதிபதி
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆஜரான வக்கீல்கள், கொலை வழக்கின் அரசு தரப்பு சாட்சிகளை குறுக்கு விசாரணை என்ற பெயரில் எப்படியெல்லாம் கொடுமை செய்துள்ளனர்? என்பதை தெளிவாக பார்க்க முடிகிறது. அதுமட்டுமல்ல அற்பமான விஷயங்களுக்கு எல்லாம் விசாரணையை தள்ளிவைக்கவேண்டும் என்று வக்கீல்கள் கோரியுள்ளனர். இந்த வக்கீல்களில் செயல் கடும் கண்டனத்துக்குரியது. இவர்களை நினைத்து உண்மையில் நாங்கள் மிகவும் வேதனைப்படுகிறோம்.
அதேநேரம் சாட்சி சொல்லவந்தவர்களை, குறுக்கு விசாரணை என்ற பெயரில் வக்கீல்கள் கொடுமை செய்யும்போது, அதை தடுக்காமல் கீழ் கோர்ட்டு நீதிபதி வேடிக்கை பார்த்து இருப்பதும் எங்களுக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...