ஐக்கிய அரபு நாடுகளில் சிங்கம், புலி மற்றும் சிறுத்தையை செல்லப் பிராணியாக வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள பணக்காரர்கள் சிங்கம், புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளை செல்லப் பிராணிகளாக வீட்டில் வைத்து வளர்த்து வருகின்றனர்.
பொதுவாக வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை போல சிங்கம், புலி, சிறுத்தை ஆகியவற்றை தெருக்களிலும், கடற்கரையிலும் மற்றும் காரிலும் தங்களுடன் அழைத்து செல்கின்றனர். அவ்வாறு அழைத்து செல்லும்போது, அவற்றுடன் செல்ஃபி எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்கின்றனர்.
சமீபத்தில், துபாய் நாட்டின் இளவரசர் ஹம்தன் பின் முகமது அல் மக்தூம் சிங்கத்துடன் இருக்கும் பல புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார். மற்றும் பல பணக்காரர்கள் தங்களின் ஆடம்பர கார்களின் முன்புறம் கூண்டுகளில் சிறுத்தைப்புலிகளை அடைத்து வைத்து நகரம் முழுவதும் சுற்றித் திரிகின்றனர்.
இயற்கை சூழ்நிலையில் வாழும் இந்த வனவிலங்குகள் சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்டு ஐக்கிய அரபு நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது.
இதனால், ஐக்கிய அரபு நாடுகளில் வன விலங்குகளை செல்லப்பிராணியாக வளர்ப்பதை தடை செய்ய வேண்டும் என விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதைத் தொடர்ந்து, வன விலங்குகளான சிங்கம், புலி, சிறுத்தையை செல்ல பிராணிகளாக வளர்க்க தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதை மீறி வளர்ப்பவர்களுக்கு 7 லட்சம் தினார் (93 லட்சம் ரூபாய்) அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் வீடுகளில் வளர்க்கப்பட்டு வரும் வன விலங்குகளை அபுதாபி வன விலங்குகள் மையத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...