உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டு குறித்த வழக்கில் தீர்ப்பு கூறாத
காரணத்தினால் தமிழகத்தில் சட்டரீதியாக ஜல்லிக்கட்டை நடத்த முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது. ஆனால் எந்த வருடமும் இல்லாமல் தமிழகம் முழுவதும்
ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கிளர்ச்சியோடும், ஜல்லிக்கட்டை எப்படியாவது
நடத்தியே தீருவது என்ற வைராக்கியத்தோடும் செயல்பட்டு வருகிறார்கள். சில
இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெறுவதை தடுக்கும் விதமாக திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ளவாடிவாசல்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும் வகையில் மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட, அதற்கு தடை விதித்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இதனால் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், சூரியூர், ஆவாரங்காடு உட்பட பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இதனால் அதிருப்தியடைந்த கிராம மக்கள் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம், சாலைமறியல், உண்ணாவிரதம், ரேஷன் கார்டு ஒப்படைத்தல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த ஆண்டும், ஜல்லிக்கட்டு வழக்கு உச்சநீதிமன்றதில் நிலுவையில் உள்ளதால் சட்டரீதியாக ஜல்லிக்கட்டை நடத்த வாய்ப்பில்லாமல் போய்விட்டது. எனவே மேற்கண்ட கிராம மக்கள் ஜல்லிக்கட்டை எப்படியாவது இந்த ஆண்டு நடத்தியே தீருவது என்று உறுதியாக இருக்கிறார்கள். உச்ச நீதிமன்ற தடையை மீறி எந்த கிராமத்திலும் ஜல்லிக்கட்டு நடைபெறாமல் தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை மேற்கொள்ளுமாறு டிஜிபி அலுவலகத்திலிருந்து காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
இதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்த வாய்ப்புள்ள கிராமங்கள் குறித்து காவல் நிலையம் வாரியாக போலீஸார் கணக்கெடுப்பு நடத்தியிருக்கிறார்கள். அதனடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் கூத்தைப்பார், நவலூர் குட்டப்பட்டு, சூரியூர், ஆவாரங்காடு உட்பட கிராமங்களிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் திருநல்லூர், நார்த்தாமலை, செங்கலாக்குடி, நல்லூர், பூங்குடி, ராப்பூசல், வடவாளம் உட்பட 66 கிராமங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்த வாய்ப்பு இருப்பதாக தெரியவந்தது. எனவே, முன்னெச்சரிக்கையாக இக்கிராமங்களில் உள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தின் வாடிவாசல் முன் இரும்பு தடுப்புகளைக் கொண்டு காவல் துறையினர் வேலி அமைத்துள்ளனர். மேலும், அந்த கிராமத்திலுள்ள முக்கிய பிரமுகர்கள், காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்களை அழைத்து, தடையை மீறி யாரும் வாடிவாசலுக்குள் நுழையக் கூடாதென எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இத்தனை கட்டுப்பாடுகளையம் மீறி இன்று காலையில் மதுரையை அடுத்த கரிசல்குளத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இந்நிலையில்தான், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவினியாபுரம், பாலமேடு ஆகிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டிருப்பதோடு, அப்பகுதிகளில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ள மதுரை எஸ்.பி விஜேந்திர பிதாரி, ‘மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கும் எண்ணம் ஏதும் இல்லை’ என தெரிவித்துள்ளார்.
Thatikeka than vaku ila , vedikai pakalam la state gov and police
ReplyDelete