கோவை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக அனுப்பப்பட்ட மிரட்டல் கடிதத்தால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
ஜனவரி மாதம், புத்தாண்டு, பொங்கல் விழா மற்றும் குடியரசு தின விழா என தொடர்ச்சியாக விழக்கள் கொண்டாடப்படும். இதுபோன்ற விழாக்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதைத் தொடர்ந்து, ஜனவரி ஒன்றாம் தேதி முதல் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இந்நிலையில், கோவை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அண்ணாநகர் முதல் தெரு என்னும் முகவரியில் இருந்து அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில், ‘நாங்கள் அடிப்படையில் போஸ்ட் ஆஃபிஸ், எல்.ஐ.சி. ஏஜண்டாக பணிபுரிகிறோம். எங்களைப் போன்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு முக்கியக் கோரிக்கையான மத்திய அரசுக்கு இணையான ஊதியம் தரவும் பங்களிப்பு CPS ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தைத் தொடர எங்கள் இயக்கம் சார்பில் வலியுறுத்துகிறோம். இக்கோரிக்கையை மாநில அரசு ஏற்கணும். இல்லையேல் எங்களுக்கு இருக்கும் கோபத்தில் மத்திய, மாநில அரசு அமைப்பான கோவை விமான நிலையத்தை குண்டுகள் வைத்து தகர்த்துவோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், 4 நபர்களுடைய வாக்காளர் அடையாள எண்களைக் குறிப்பிட்டு, ‘எங்கள் இயக்கத்தின் அடையாள அட்டைகளை திருப்பி ஒப்படைப்போம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்தக் கடிதத்தில் பாஸ்கரன், சந்திரசேகரன், கவுரி என்னும் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. அதில் குறிப்பிடப்பட்ட செல்பேசி எண்ணை தொடர்புகொள்ள முயற்சி செய்தபோது அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
இந்த மிரட்டல் கடிதம் குறித்து, விமான நிலைய முதன்மை பாதுகாப்பு அலுவலர், பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பயணிகள், பார்வையாளர்கள் உட்பட அனைவரும் தீவிர சோதனைக்குப் பின்னரே விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
கடந்த நவம்பர் மாதம் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களிலும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் வெடிகுண்டு வெடிக்கும் என அடையாளம் தெரியாத நபர் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செல்பேசி மூலம் 2 முறை எஸ்எம்எஸ் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...