நாடாளுமன்றத்தின் நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் நாளை மறுநாள் தொடங்குகிறது.
மத்திய
அரசின் பொது நிதிநிலை அறிக்கையும், தொடர்வண்டித்துறை நிநிதிலை அறிக்கையும் 92 ஆண்டுகளுக்குப் பிறகு இணைத்து தாக்கல் செய்யப்படுவதால், இதில் வெளியாகவிருக்கும் அறிவிப்புகள் குறித்து பொதுமக்களிடம் எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.
வருமானவரி விலக்குக்கான வருவாய் உச்சவரம்பு கணிசமாக உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை மாத ஊதியம் பெறுவோரிடமிடருந்து நீண்டகாலமாக எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால், வருமானவரி உச்சவரம்பு உயர்வு என்பது அவ்வப்போது பெயரளவில் செய்யப்படுகிறதே தவிர, கள யதார்த்தத்தை பிரதிபலிக்கும் வகையில் இல்லை. 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்காக, பாரதிய ஜனதாக் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில்,‘‘ ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வரித் தீவிரவாதத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் பாதகமற்ற, சாதகமான வரிச்சூழல் ஏற்படுத்தப்படும். வரிவிதிப்பு முறை எளிமைப்படுத்தப்படும்’’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளாகியும் இவ்வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மோடி அரசு, அந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், வருமானவரி விலக்குக்கான உச்சவரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதன்பின் இன்று வரை வருமானவரி விலக்கு வரம்பு உயர்த்தப்படவில்லை. அதன்பின் பணவீக்கம் கணிசமாக உயர்ந்துவிட்டது. மேலும், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை நடைமுறைப்படுத்தப் பட்டிருப்பதால் மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசு ஊழியர்களின் ஊதியம் அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கு இணையாக வருமானவரி விலக்கு வரம்பு உயர்த்தப்படவில்லை. இதனால் மாத ஊதியம் பெறுவோரில் பெரும்பான்மையினர் தங்களது ஊதியத்தின் பெரும்பகுதியை வருமானவரியாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இது மக்களிடையே வரி மீது வெறுப்பையே ஏற்படுத்தும்.
இவை ஒருபுறமிருக்க வருமானவரியின் அளவை குறைத்து, வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் தான் வரி வருவாயை அதிகரிக்க முடியும். வருமானவரியின் அளவு அதிகமாக இருப்பதாலும், வரி விலக்குக்கான உச்சவரம்பு மிகவும் குறைவாக இருப்பதாலும் அதிக அளவு வருவாய் ஈட்டுபவர்கள் கூட வருமான வரி செலுத்தத் தயங்குகின்றனர். இந்த நிலை மாற வேண்டுமானால் வரி விதிப்பு முறை எளிமைப்படுத்தப்படுவதுடன், வருமான வரிவிலக்கு வரம்பும் அதிகரிக்கப்பட வேண்டும். எனவே, வருமானவரி விலக்கு வரம்பை இப்போதுள்ள ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். அத்துடன் வருமானவரி அளவை ரூ.10 லட்சம் வரை 10% ஆகவும், ரூ.10 லட்சம் முதல் 20 லட்சம் வரை 20% ஆகவும், அதற்கு மேல் 30% ஆகவும் மாற்றியமைக்க அரசு முன்வர வேண்டும். அதேபோல், மூத்த குடிமக்களின் ஓய்வூதியத்திற்கு முழுமையான வரிவிலக்கு அளிக்க வேண்டும்.
தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மாற்றியமைக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயமாகும். கடந்த 2012-13 ஆம் ஆண்டில் நடப்புக் கணக்கு பற்றாக்குறை கட்டுக்கடங்காமல் போனதையடுத்து தங்கத்தின் இறக்குமதியை குறைக்கும் நோக்குடன் 2% இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. பின்னர் இது படிப்படியாக 10% ஆக அதிகரிக்கப்பட்டது. அதன்பின் தங்கத்தின் இறக்குமதி குறைந்து விட்ட பிறகும், அதன்மீதான வரி குறைக்கப்படவோ, ரத்து செய்யப்படவோ இல்லை. இறக்குமதி வரி விதிப்பால் அரசுக்கு கிடைத்த லாபத்தை விட இழப்புகள் தான் அதிகமாகும். இறக்குமதி வரியால் முறைப்படியான இறக்குமதி குறைந்தாலும், தங்கம் கடத்தி வரப்படுவது பெருமளவில் அதிகரித்திருக்கிறது. இதனால் மத்திய அரசுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய சுங்க வரி வருவாய் பெருமளவில் குறைந்திருக்கிறது.
அதேநேரத்தில், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதனால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளுக்காக ஒரு குடும்பத்தினர் ரூ.5 லட்சத்திற்கு தங்கம் வாங்க வேண்டுமானால் ரூ.50,000 கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கிறது. இது ஏழை மக்கள் மீது கடுமையான சுமையை சுமத்தும். எனவே, தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை முழுமையாக ரத்து செய்யவோ, அது சாத்தியமாகாத நிலையில் 5% ஆக குறைக்கவோ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர்வண்டித்துறையை பொறுத்தவரை தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களில் ஏராளமானவை நிதி இல்லாமல் முடங்கிக் கிடப்பதால், அத்திட்டங்களை அடுத்த இரு ஆண்டுகளில் நிறைவேற்றி முடிக்கும் வகையில் அவற்றுக்கு நிதிநிலை அறிக்கையில் போதிய நிதியை அரசு ஒதுக்க வேண்டும்.’
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...