நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31–ஆம் தேதி தொடங்குவதாக
அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று நடைபெறும் இரு அவைகளின் கூட்டு
கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்துகிறார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 4–வது வாரத்தில் தொடங்கும். முதலில் ரெயில்வே பட்ஜெட்டும், அடுத்து பொருளாதார ஆய்வு அறிக்கையும், தொடர்ந்து பொது பட்ஜெட்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
பொது பட்ஜெட்டைப் பொறுத்தமட்டில், அது பிப்ரவரி மாதத்தின் இறுதி நாளில் தாக்கல் செய்யப்படும். இதன் காரணமாக பட்ஜெட் தொடர்பான பணிகள் மே மாதம் மத்தியில்தான் முடியும்.
ஆனால், பாஜக அரசு, ஏப்ரல் 1–ஆம் தேதி நிதி ஆண்டு தொடங்குகிறபோது, பட்ஜெட்டும் அமலுக்கு வந்துவிடுகிற விதத்தில் பட்ஜெட்டை முன்கூட்டியே தாக்கல் செய்து, அது தொடர்பான பணிகளை மார்ச் மாதத்துக்குள் முடித்து விட திட்டமிட்டுள்ளது. அதற்காக பட்ஜெட் கூட்டத்தொடரை வழக்கத்துக்கு மாறாக ஜனவரி 31–ஆம் தேதி கூட்ட மத்திய அரசு முடிவு செய்தது.
பிப்ரவரி 1–ஆம் தேதி ரெயில்வே பட்ஜெட்டுடன் இணைத்து பொது பட்ஜெட்டை தாக்கல் செய்து விடவும் திட்டமிட்டது. இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் கடந்த 3–ஆம் தேதி டெல்லியில் கூடி முடிவு எடுத்தது. இது தொடர்பான பரிந்துரை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்நிலையில் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட்டில் வாக்காளர்களை கவருகிற வகையில், கவர்ச்சித் திட்டங்கள் இடம்பெற வாய்ப்பு உண்டு என்பதால், அது மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு சாதகமாக அமைந்து விடும் என கருதி, பட்ஜெட் கூட்டத்தொடரை தள்ளிப்போட வேண்டும் என்று காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, திமுக, ராஷ்டிரீய ஜனதாதளம் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள், தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
இது தொடர்பாக மத்திய அமைச்சரவை செயலாளர் பி.கே.சின்கா பதில் அளிக்குமாறு தேர்தல் கமிஷன் கேட்டுக்கொண்டுள்ளது. ஆனாலும், திட்டமிட்டபடி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், 31–ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிக்கையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று வெளியிட்டார்.
நாடாளுமன்றம் புதிய ஆண்டில் முதல் முறையாக கூடுவதால், அன்று (31–ஆம் தேதி) நாடாளுமன்ற மக்களவை, மேல்–சபை கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசுகிறார். அவர் அரசின் திட்டங்கள் பற்றி தனது பேச்சில் விரிவாக எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.தொடர்ந்து பட்ஜெட் பிப்ரவரி 1–ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அதில் தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படும் என்றும், புதிய சலுகைகள் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...