Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மெரினா புரட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த அந்த 18 மணி நேரம்!

*ஆனந்த விகடன்  கவர் ஸ்டோரி.        2017 ஜனவரி 17-ம் தேதி தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடையை நீக்கக் கோரி சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் தொடங்கியது. அடுத்தடுத்த நாட்களில் ஆயிரக்கணக்கில், லட்சக் கணக்கில் இளைஞர்கள் கூட்டம் அதிகரித்தது. பீட்டாவுக்கு எதிராகவும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் களத்தில் இருந்தவர்கள் தீவிரமாக முழுங்கினர்.  அறப்போராட்டம் ஒரு கொண்டாட்டமாக மாறியது. இந்நிலையில்,

ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்பட்டு தமிழக அரசு சார்பில் அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதனை ஏற்க இந்த இளைஞர்கள் கூட்டம் மறுத்தது. 'எங்களுக்கு அவசரச் சட்டம் தேவையில்லை. நிரந்தரத் தீர்வே வேண்டும்' என விடாமல் போராடினார்கள். ஏழு நாட்கள் நீடித்த போராட்டம் இன்று இறுதிக்கட்டத்தை எட்டியது. நேற்று நள்ளிரவு முதல் இன்று மாலை வரை, மெரினாவில் நடந்தவை அனைத்தும் அப்படியே இங்கே...

22.01.2017

ஞாயிறு இரவு 10.30 மணி :

மறுநாள் பொழுது விடிவதற்குள் மெரினா கடற்கரையைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் எனஆளும் அரசும், அதிகார வர்க்கமும் விரும்புகின்றன என்பதை அங்குள்ள சூழல்களே உணர்த்தின. கடந்த ஆறு நாட்களாக இல்லாத அளவுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் காவல்துறையின் நடமாட்டம் மெரினா முழுவதும் அதிகரித்தது. சிலர், மஃப்டியிலும் போராட்டக்காரர்களின் மத்தியில் உலாவி மாணவர்களின் மனநிலையை மோப்பம் பிடித்தனர்.

நள்ளிரவு 12 முதல் 2 மணி வரை :

களத்தில் இருந்த மாணவர்களும் தங்களைக் காவல்துறையினர் அப்புறப்படுத்தும் சூழல் இருப்பதை அறிந்தே இருந்தனர். அதனால், வயதான பெரியவர்களையும், குழந்தைகளையும், பெண்களையும் வீட்டுக்குச் செல்லும்படி கூறினார்கள். போக விருப்பம் இல்லாதவர்களைக் கட்டாயப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

23.01.2017

திங்கள் அதிகாலை 3:30  மணி

அங்கிருந்த போராட்டக்காரர்களை அகற்ற காவல்துறையினர் தடியடி நடத்தப்போவதாக தகவல் மெள்ள மெள்ள அங்கு இருப்பவர்களிடம் பரவியது. மைக்கில் எழுச்சியாகப் பேசிக்கொண்டிருந்த மாணவர்களில் சிலர், "எல்லாரும் சுற்றி அமருங்கள். காவல்துறை நம்மை எதுவும் செய்யமாட்டார்கள். இங்கிருந்து யாரும் கலைந்து செல்லக்கூடாது" என்று பேச, கடல் அலைகளை மீறிக் கைதட்டல்கள்.

3:40 மணி

போராட்டக் களத்தில் இருந்தவர்கள்... தங்கள் நண்பர்களுக்கு எல்லாம செல்போனில் தொடர்ந்து அழைப்பு விடுத்தனர். உடனே மெரினா வரும்படி வாட்ஸ்அப் முதல் பல சமூகவலைதளங்களைப் பயன்படுத்தியும் வரச் சொன்னார்கள்.

4 மணி :

பல்வேறு இடங்களில் இருந்தும் காவல்துறையினர் மெரினாவில் உள்ள விவேகானந்தர் இல்லத்துக்கு அருகில் குவியத் தொடங்கினார்கள். அதற்கு முன் ஆறு நாட்களில் இல்லாத அளவுக்கு அவர்கள் கைகளில் லத்திகள் முளைத்திருந்தன.

4.20 மணி :

மாணவர்களுக்கும் இந்த தகவல்கள் வந்தன. "நம் மீது லத்தி சார்ஜ் நடத்தினால் கலையக்கூடாது. அப்படி தடியடி நடத்தினால், அவனைவரும் எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் பாட வேண்டும்." என மைக்பிடித்து அங்கிருந்த அனைவருக்கும் சொல்லிக்கொண்டிருந்தனர். இதற்கும் ஆதரவு தருவதாக கோஷங்கள் எழும்பின.

4.33 மணி :

"காவல்துறையினர் அடித்தால் திருப்பி அடிப்போம். அன்பால், திருப்பி அடிப்போம்" என கோஷங்கள் எழுப்பினர்.

4.40 மணி :

மெரினாவில் இருந்து கலைந்து செல்லும்படி காவல்துறையினர் சார்பாக பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டது. அதில், 'மெரினா கடற்கரையில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளீர்கள். இந்தப் போராட்டமானது மிகவும் கட்டுப்பாட்டுடனும், அமைதியாகவும் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் எவ்வித இடையூறுமின்றி நடைபெற்றது. தமிழக அரசின் முயற்சியால், ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று நடைபெற்றது. போராட்டத்தின் குறிக்கோள் நிறைவேறியுள்ளதால் அனைவரும் மெரினா கடற்கரையிலிருந்து உடனடியாக கலைந்து செல்லும்படி, சென்னை பெருநகர காவல்துறை உங்களை கேட்டுக்கொள்கிறது' என செய்தி வெளியானது. ஆனால், இந்த செய்தி மாணவர்களுக்குப் போய்ச் சேரவில்லை.

அப்போதும் போராட்டக் களத்தில் இருந்தவர்கள் "நம் பாதுகாப்புக்கு மட்டுமே காவல்துறையினர் வந்துள்ளார்கள். அவர்கள் நம் நண்பர்கள். அவர்களுக்கும் குடிக்க தண்ணீர் தாருங்கள்... உணவு தாருங்கள்..." என அன்போடு ஒருவர் மைக்கில் சொல்ல... உடனே காவல்துறையினரைத் தேடித்தேடி தண்ணீர் பாட்டில்களும், பிஸ்கட் பாக்கெட் போன்றவற்றையும் கொடுத்தார்கள். காவல்துறையினரும் அதை வாங்கிக்கொண்டார்கள்.

4.50 மணி :

மெரினா முழுவதிலும் காவல்துறையினர் சூழ்ந்தார்கள். விவேகானந்தர் இல்லம், கண்ணகி சிலை, சென்னைப் பல்கலைக்கழகம், லைட் ஹவுஸ் என அனைத்து இடங்களிலும் காவலர்களுக்கு வழிமுறைகள் தரப்பட்டன. அவர்கள் கைகளில் லத்திகளும் கொடுக்கப்பட்டன.
அந்த சமயத்தில் கூட்டத்தில் இருப்பவர்களிடம் "யாரும் எழுந்து நிற்காதீர்கள். உட்காருங்கள்" என்றவாறு நின்றவர்களை மாணவர்களே அமர வைத்தனர். மேலும், கர்ப்பிணிப்பெண்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் இருப்பதால் கூட்டத்திற்குள் போலீஸ் நுழையக்கூடாது." என காவல்துறையினருக்கு வேண்டுகோளும் விடுத்தனர்.

5 மணி :

முக்கிய காவல்துறை அதிகாரிகள் மெரினா முழுவதும் அவர்களது சைரன் வாகனத்தில் சுற்றிச்சுற்றி வந்தனர்.

5.30 மணி :

காவல்துறையினரிடம் தரப்பட்ட லத்திகள் அவர்களிடம் இருந்து திடீரென வாங்கப்பட்டன. ஆனால், பெரியார் மாளிகைக்கு எதிரில் திடீரென நான்கு காவலர்கள் வேகமாக கூட்டத்திற்குள் நுழைய மாணவர்கள் பெரும் கூச்சல் போட்டார்கள். உடனே, போலீசார் பின் வாங்கினார்கள்.

6.00 மணி :

இரண்டு குழுக்களாக மெரினாவில் மாணவர்கள் அமர்ந்திருந்தனர். விவேகானந்தர் இல்லத்திற்கு நேர் எதிரிலும், பெரியார் மாளிகைக்கு நேர் எதிரிலும் இருந்தனர். அவர்கள் முன் வைக்கப்பட்டிருந்த தடுப்பரண்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

பெரியார் மாளிகைக்கு எதிரில் அமர்ந்திருந்த மாணவர்கள் முன்தான் முதலில் காவல்துறை சென்றது. மைக் கட்டிய ஆட்டோவில் காவலர் ஒருவர், "மாணவக் கண்மணிகளே... இது உங்களுக்கு கிடைத்த வெற்றி. நீங்கள் வென்றுவிட்டீர்கள். நேற்றே ஜல்லிக்கட்டுப் போட்டி தமிழகம் முழுவதும் நடந்தது. கலைந்து செல்லுங்கள். எங்கள் கைகளில் லத்தி கூட கிடையாது." என்று சொல்லியவாறே மாணவர்களை நெருங்கினார். மாணவர்கள் வைத்திருந்த மைக்குகள் பிடுங்கப்பட்டன. மைக் செட்டுகளும் உடனடியாக அகற்றப்பட்டன. மைக் செட்காரரை மிரட்டி அகற்றினார்கள்.

6.05 மணி :

கொஞ்சம் கொஞ்சமாகக் காவல்துறையினர் கூட்டத்திற்குள் நுழைந்தார்கள். ஐந்து நிமிடம் கூட அவர்களுக்கு அவகாசம் தரவில்லை போலீஸ்காரர்கள். அதற்குள் மாணவர்கள் ஒருவருவருக்கு ஒருவர் கைகள் பற்றி இறுக அணைத்து அமர்ந்தார்கள். ஆனால் அவர்களை மூர்க்கமாகத் தரதரவென இழுத்து தூக்கி வீசினார்கள். கூட்டத்தில் அமர்ந்திருந்த பெண்கள் சிலரை பெண் காவலர்கள், தலைமுடியைப் பிடித்து இழுத்தார்கள். கன்னத்தில் அறைந்தார்கள். மீடியாகாரர்கள் இதனைப் படம் பிடிக்க முயற்சிக்க, 'அந்தப் பக்கமா போங்க...' என்று  போலீஸார் ஆக்ரோஷ குரல் கொடுத்தார்கள்.

6.15 மணி :

பெரியார் மாளிகை முன் அமர்ந்த மொத்தக் கூட்டத்தையும் கலைத்தார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் ஓடிப்போய் விவேகனாந்தர் இல்லத்திற்கு எதிரில் அமர்ந்திருந்த மாணவக் கூட்டத்துடன் சேர்ந்துகொண்டார்கள். முன்பைவிட இரண்டுமடங்கானது கூட்டம்.

6.25 மணி :

மைக் கட்டிய வேனில் ஏறிய காவலர், மொத்த பிரச்னையையும், ஆரம்பத்தில் இருந்து சொல்லி, தமிழக அரசு என்னென்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது. இது ஜல்லிக்கட்டுக்கான அவரச சட்டம் என்றாலும் நிரந்தர சட்டம்தான்' என்று பாயிண்ட் பை பாயிண்டாக பேசினார். சின்னச் சத்தம் கூட இல்லாமல் அனைத்தையும் கேட்ட மாணவர்கள். "நாங்கள் கலைந்து செல்கிறோம். ஆனால், எங்கள் சட்ட வல்லுனர்களிடம் பேச கொஞ்சம் அவகாசம் தாருங்கள். குறைந்தபட்சம் அரைநாளாவது வேண்டும் என்றார்கள். இதற்குக் காவல்துறையின் உயர் அதிகாரிகள் மறுப்பு தெரிவிக்க.. 'குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது தாருங்கள்' என கெஞ்சினார்கள். கேட்கவில்லை. அதற்குள் கூட்டத்திற்குள் காக்கிகள் சூழ்ந்தன.

கைகளில் லத்திகள் இல்லை என்றாலும் கண்மூடித்தனமாக மாணவர்களைக் கையாண்டது காவல்துறை. கர்ப்பமாக இருந்த ஒரு பெண்மணியையும் சேர்த்து கூட்டத்தில் அமர்ந்திருந்த பெண்களைக் கைகளைப் பிடித்து இழுத்து தள்ளினார்கள். அப்போது சில காக்கிகளிடம் மட்டும் லத்திகள் இருந்தன. மீடியா கவரேஜ் இல்லாத இடத்தில் அவர்கள் தங்கள் லத்திகளைப் பயன்படுத்தத் தயங்கவில்லை. மாணவர்கள் கடலை நோக்கி ஓடினார்கள். அவர்களைத் துரத்திக்கொண்டு காவல்துறையும் ஓடியது. சில மாணவர்கள் காவல்துறையின் அடுக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கதறி அழுதார்கள்.

6.30 மணி :

இதை கவரேஜ் செய்ய கடற்கரை நோக்கி ஓடிய மீடியாவை தடுத்து நிறுத்தினார் ஒரு முக்கிய காவல்துறை அதிகாரி. முக்கியமாக, ‛விகடன்’ என்றதும் கட்டாயமாக உள்ளே விட மறுத்தார்கள். வாக்குவாதம் ஆனது. வேறு மீடியாவைச் சேர்ந்தவர்கள் என்ன பிரச்னை என கேட்கவும்... அவர்கள் விலகிச் சென்றார்கள்.

6.40 மணி :

கடற்கரை நோக்கி ஓடிய மாணவர்களைப் பிடிக்க முயல... 'நாங்கள்  கடலுக்குள் சென்று தற்கொலை செய்வோம்." என அவர்கள் கூட்டமாய்க் குரலெழுப்ப, காவலர்கள் பின்வாங்கினார்கள். அதற்குள் ஒட்டுமொத்த கூட்டமும் கடற்கரைக்கு சென்றுவிட்டது. காக்கிகள் அருகில் வந்தாலே, கடலுக்குள் காலடி எடுத்து வைத்தனர்.

6.50 மணி :

மெரினாவுக்குள் நுழையும் அனைத்து வழிகளிலும் தடுப்பரண்கள் அமைத்துத் தடுத்தது காவல்துறை. ஐஸ் அவுஸ் வழியாக மெரினாவுக்கு வரும் வழியில் பலரும் குவிந்தாலும் இவர்களை மீறி ஒரு அடி கூட முன் வைக்க முடியவில்லை.

7.30 மணி :

லைட்அவுஸ் அருகில் வசிக்கும் மக்கள் கும்பலாக கடற்கரை ஓரமாக... போராட்டக்காரர்களை நோக்கி ஓடி வந்தனர். அவர்களைத் தடுக்க காவல்துறையினரால் முடியவில்லை. கூட்டம் அதிகமானது. சிலர் தள்ளுமுள்ளுவில் மயங்கி விழ... உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

8.30 மணி :

படகுகளில் உணவுகளும், குடிநீரும் போராட்டகாரர்களுக்காக வந்தன. அங்கிருந்த பெண்களுக்காக அங்கு கிடந்த தார்ப்பாய்களை எல்லாம் எடுத்து சிலர் உடனடிக் கழிப்பறைகள் அமைத்துத் தந்தார்கள்.
மெரினா கடற்கரைச் சாலைகளில் இருந்து யாராவது ஒருவர் ஓடிவந்தாலே, அவர்களைப் பார்த்து மொத்தக் கூட்டமும் "வா... வா..." என வரவேற்றது. அவர்களில் சிலரைக் காவல்துறை லத்தியால் விரட்டி அடித்தது.

9.00 மணி :

காவல்துறையினர் சென்று போராட்டக்காரர்கள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஆனால், யாரும் கேட்பதாக இல்லை. காவல்துறையினர் பின் வாங்கினார்கள்.

10.15 மணி :

அனைத்து ஊர்களிலும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் வன்முறை தூண்டிவிட்டதாக செய்தி பரவியதும்... பீட்டாவுக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் போட்டனர்.

10.30 மணி :

மாணவர்கள் அமைதியாக அமர... காவலர்களும் அவர்களைச் சுற்றி நின்றனர். சிலருக்குத் தண்ணீர் எடுத்துவர அவர்களை தடுத்தது போலீஸ். இதனால், ஆத்திரம் அடைந்தவர்கள் வெறித்தனமாக கத்தவும்... தண்ணீரை எடுத்துச் செல்ல அனுமதித்தது போலீஸ்.

11:30 மணி :

லாரன்ஸ் வர இருப்பதாக தகவல் பரவியது. அதற்குள் திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் தீ வைக்கப்பட்ட செய்தி அங்கு இருக்கும் காவலர்கள் மத்தியில் பரவியது. சிறப்பு காவல் படையினர் வந்து சேர்ந்தார்கள்... மெரினாவில் நின்று கொண்டிருந்த அனைவருக்கும் லத்திகள் வேக வேகமாகத் தரப்பட்டன. "கையில மட்டும் எவனாது சிக்கட்டும். அடி பொளந்துடுட வேண்டிதான்." என்ற ரீதியில் காவல்துறையினர் பேசுவதையும் கேட்க முடிந்தது. தண்ணீர் மற்றும் உணவு இல்லாமல் சிலர் மயங்கி விழுந்தனர். ஒருசிலர் கலைந்து சென்றனர்.

11.50 மணி :

மீண்டும் போராட்டக்கார்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது போலீஸ். "அரசின் சார்பில் யாராவது வந்து பேச வேண்டும். அல்லது ராகவா லாரன்ஸ் வந்து தங்களிடம் பேசினால் கலையத் தயார்." என நிபந்தனை வைத்தனர்.

12.30 மணி :

மெரினா வந்தார் லாரன்ஸ். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அது தோல்வியில் முடிந்தது. "போராட்டத்தில் வெற்றி அடைந்ததைக் கொண்டாட வேண்டிய நேரம் இது. தயவு செய்து போராட்டத்தைக் கைவிடுங்கள்." என்றார். ஆனால் யாரும் அசைய மறுத்தார்கள்.

1.30 மணி :

மீண்டும் காவல்துறையின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பல்வேறு இடங்களிலும் வன்முறை வெடிக்கிறது என கூறியும் கலைய மறுத்தார்கள். 'நாங்கள் இரண்டு மணி நேரம் தானே தொடக்கத்தில் கேட்டோம். தந்தீர்களா?" என்று கோபக்குரல் எழுப்பினார்கள்.


2.30 மணி :

சிலர் தண்ணீர் மட்டும் கொண்டு செல்வதற்கு காவல்துறையினர் அனுமதி தந்தனர். காவல்துறையை சேர்ந்த சிலர் மஃப்டியில் இருப்பதாக கூட்டத்தில் தகவல் பரவியதால் சின்ன சலசலப்பு ஏற்பட்டது.

3.15 மணி :

'நாம் தமிழர்' கட்சியின் சீமான் வருகை தந்தார். ஆனால், போராட்டக்காரர்கள் பேச மறுத்தனர்.

3.45 மணி :

ஆர்.ஜே.பாலாஜி வந்தார். அவருக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவரும் கிளம்பினார்.

5.15 மணி :

ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டம் முன்வடிவு சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தடையை முற்றிலும் நீக்கும் இந்த ஜல்லிக்கட்டு சட்ட மசோதா, பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

5.45 மணி :

முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன், ஜல்லிக்கட்டு பிரச்னைகளை பற்றியும், அதன் சட்டச் சிக்கல்களையும் விரிவாக விளக்கினார். 'போராட்டத்தைத் தொடர்வதா? வேண்டாமா? என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுவதாகவும் சொன்னார். அதன்பின்னரும் போராட்டக்காரர்கள் தொடர்வதாக சொன்னார்கள்.

6.15 மணி :

ஒருசிலர் அரி பரந்தாமன் கூறிய கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். ஜல்லிக்கட்டு கோரி சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மாபெரும் அறப்போராட்டம் முடிவுக்கு வந்தது.

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இளைஞர்களின்  'மெரினா புரட்சி'  வரலாற்றில் அழுந்தப் பதியப்பட்டது.

- நா.சிபிச்சக்கரவர்த்தி , விகடன்

Published Date : 23-01-2017 20:20:18




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive