ஏடிஎம்களுக்கு 9,000 கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளதால், பணத்தட்டுப்பாடு
இரு வாரங்களில் நீங்கி விடும் என ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர்
தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 8 ஆம் தேதி, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி
அறிவித்தார். அதைத் தொடர்ந்து, பணப்புழக்கம் வெகுவாக குறைந்து, நாட்டில் கடும் பணத்தட்டுப்பாடு உருவானது.
அதைத் தொடர்ந்து, ஜனவரி 1 ஆம் தேதி முதல், ஏடிஎம்களில் 4,500 ரூபாய் எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான ஏடிஎம்கள் வேலை செய்யவில்லை. ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டு 65 நாட்கள் கடந்து விட்ட நிலையில் பெரும்பாலான இடங்களில் ஏடிஎம்களிலும், வங்கிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலையே நீடிக்கிறது.
”நாடு முழுவதும் 2 லட்சத்து 24 ஆயிரம் ஏ.டி.எம்.கள் உள்ளன. பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு பிறகு, ரூபாய் நோட்டுக்கள் பற்றாகுறையால் 30 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் ஏடிஎம்கள் மட்டுமே இயங்கி வந்தன.
இப்போது, ரிசர்வ் வங்கியில் இருந்து அதிக அளவில் பணம் அனுப்பப்பட்டு வருவதால், 1 லட்சத்து 10 ஆயிரம் ஏடிஎம்கள் இயங்கி வருகின்றன. வழக்கமாக ஏடிஎம்களுக்கு நாள் ஒன்றுக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் அனுப்பப்படும். ஆனால், கடந்த 2 மாதமாக ஏடிஎம்களுக்கு 2 ஆயிரம் கோடியில் இருந்து 3 ஆயிரம் கோடி வரை மட்டுமே அனுப்பப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக பணம் அதிகமாக அனுப்பப்படுகிறது. இப்போது, 9000 கோடி வரை அனுப்பப்பட்டு வருகிறது. எனவே, பிப்ரவரி மாதத்தில் பணத்தட்டுப்பாடு முற்றிலும் நீங்கி விடும்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பணத்தட்டுப்பாடு பிப்ரவரி மாத இறுதியில்தான் சரியாகும் என ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும், இதுபோல் பல அறிவிப்புகளை கேட்டு சலித்துப் போன பொதுமக்கள் இந்த அறிவிப்பையும் அப்படியே தான் பார்க்கிறார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...