நாட்டின் தலைசிறந்த தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்க்கை பெற எழுத வேண்டிய தேசிய நுழைவுத் தேர்வான,
ஜாயின்ட் என்டரன்ஸ் எக்சாமினேஷன் (ஜே.இ.இ.,) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது! மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,) நடத்தும் இந்த பொது நுழைவுத்தேர்வின் அடிப்படையிலேயே, ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி., என்.ஐ.டி., உள்ளிட்ட மத்திய அரசின்கீழ் இயங்கி வரும் பல்வேறு தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
தகுதிகள்
பி.இ., பி.டெக்., ஆகிய படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் பிளஸ் 2வில், இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுடன் வேதியியல், உயிரியல் அல்லது தொழிற்கல்வி படிப்புகள் போன்ற ஏதேனும் ஒரு பாடத்தை முதன்மை பாடமாக பயின்றிருக்க வேண்டும்.
பி.ஆர்க்., படிப்பில் சேர்வதற்கு பிளஸ் 2வில் கணிதத்தை ஒரு பாடமாக பயின்று சேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து பாடங்களிலும் குறைந்தது, தலா 45 சதவீத மதிப்பெண்களும், ஒட்டுமொத்தமாக 75 சதவீத மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 65 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவர்களும் ஜே.இ.இ., தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
இரு நிலைகள்
ஜே.இ.இ., தேர்வு, மெயின் மற்றும் அட்வான்ஸ்டு எனும் இரண்டு நிலைகளை கொண்டது. நாட்டில் உள்ள ஐ.ஐ.டி.,களிலும் மற்றும் முக்கிய பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் சேருவதற்கு ஜே.இ.இ., மெயின் தேர்வை தொடர்ந்து ஜே.இ.இ., அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வையும் எழுத வேண்டும். மெயின் தேர்வில் மட்டும் தேர்ச்சி பெற்றவர்கள் என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற முடியும்.
மெயின் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மட்டுமே, இரண்டாம் நிலையான அட்வான்ஸ்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்ச்சி பெறும் மாணவர்களின் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, கல்வி நிறுவனங்களில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
தேர்வு முறை
தாள் 1: இளநிலை பி.இ., மற்றும் பி.டெக்.,
இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட பாடங்களிலிருந்து அப்ஜெக்டிவ் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப எழுத்து அல்லது கணினி அடிப்படை தேர்வு முறைகளை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
தாள் 2: இளநிலை பி.ஆர்க் மற்றும் பி.பிளானிங்
கணிதம், திறனறிவு தேர்வு மற்றும் வரைதல் போன்ற பகுதிகளில் இருந்து அப்ஜெக்டிவ் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் மட்டுமே தேர்வு நடைபெறும்.
குறிப்பு: ஜே.இ.இ., தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் ஆதார் எண் அட்டை வைத்திருப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 2, 2017
மேலும் விவரங்களுக்கு: www.jeemain.nic.in
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...