Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

BREAKING NEWS : முதல்வர் ஜெயலலிதா காலமானார்!! அப்பல்லோ அறிவிப்பு

05.12.2016 அன்று இரவு 11.30 மணிக்கு காலமானார் செல்வி ஜெயலலிதா
அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவருக்கு வயது 68.டிசம்பர் 5-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா காலமானதாக அப்போலோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் மாதம் 22-ம் தேதி இரவு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் என்று சொல்லி அனுமதிக்கப்பட்டவர் நுரையீரல் பிரச்னை, சுவாசக் கோளாறு, நோய்த் தொற்று என பல உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குணமடையவேண்டி தமிழகம் முழுக்க அ.தி.மு.க. தொண்டர்கள் பல்வேறு வழிபாடுகளை நடத்தி வந்தனர்.

ஜெயலலிதா உடல்நிலை தேறிவருவதாக அப்போலோ மருத்துவர்கள் சொல்லிவந்த நிலையில், டிசம்பர் 4-ம் தேதி திடீரென அவருக்கு இதய முடக்கம் ஏற்பட்டதாகச் சொன்னார்கள். இதைத் தொடர்ந்து ஜெயலலிதா தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல் தெரிவித்தார்கள். இந்நிலையில் தொடர் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் டிசம்பர் 5-ந் தேதி இரவு 11:30 மணிக்கு காலமானார் ஜெயலலிதா.

தமிழகம் கடந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியிலும் இந்திய அரசியல் அரங்கிலும் இந்தச் செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதா மறைவு, தமிழர்களுக்கு மட்டுமல்லாது உலகம் முழுக்கவே அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது.



திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜெயலலிதா, 1948-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி கர்நாடக மாநிலம், மேல்கோட்டை எனும் கிராமத்தில் பிறந்தவர். பள்ளி செல்லும் பிராயத்திலேயே நடிக்கத் தொடங்கி, தமிழர்களின் அபிமான நடிகையாக தடம் பதித்தார். அவர் மனதுக்குப் பிடித்துதான் நடிப்புத் தொழிலை தேர்ந்தெடுத்தார் என்று சொல்வதற்கில்லை... ஆனால், அதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டார். தன் முழு உழைப்பையும் கொட்டினார். ஆம், இதுதான் அவர் இயல்பே!  எதையும் அவரால் அரை மனதுடன் செய்ய முடியாது. இதை அவர் ஒரு நேர்காணலிலும் பகிர்ந்திருக்கிறார்.

இதனால்தான்  தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, கன்னட மொழி சினிமாக்களிலும் முத்திரைப் பதித்து 120-க்கும் மேற்பட்ட  திரைப்படங்களில் முன்னணிக் கதாபாத்திரங்களில், அவரால் நடிக்க முடிந்தது.



அரசியல் அரங்கில் அ.தி.மு.க உறுப்பினராக அடியெடுத்து வைத்த ஜெ. 1984-ஆம் ஆண்டு முதல் 1989-ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிலும், அவர் மிளிர்ந்தார். அவரது பேச்சாற்றலை மூத்த ஊடகவியலாளர் குஷ்வந்த் சிங் பாராட்டி இருக்கிறார். தன் தாய் சந்தியாவுக்கு அடுத்து இந்திரா காந்தியை ஜெயா மிகவும் நேசித்தார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் இறப்புக்குப் பின்னர் அவரது அரசியல் வாரிசாக தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டவர் ஜெயலலிதா. அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இறக்கும்வரை அக்கட்சியின் நிரந்தரப் பொதுச்செயலாளராக இருந்தார்.



1989-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்குக் கிடைத்த எதிர்க்கட்சி அந்தஸ்தின் மூலம் தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரானார். 1991 தேர்தலில் வெற்றி பெற்று, முதல் முறையாக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல, 2001, 2011 மற்றும் 2016 ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக தேர்வானார். 2001-’06 காலகட்டத்தில் டான்சி வழக்கு காரணமாக முதல்வர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது. மேல் முறையீட்டில் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் முதல்வரானார். அதே போல் 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சிறை செல்ல நேர்ந்ததால், முதல்வர் பதவியை இழந்தார். பின்னர் அதிலிருந்து விடுவிக்கப்பட்டதால், 2015 மே மாதம், மீண்டும் தமிழக முதல்வரானார்.

2016 தேர்தலில் மீண்டும் தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக அரசியலில், எம்.ஜி.ஆர் காலத்துக்குப் பின்னர், ஒரு தலைவர் தொடர்ச்சியாக இருமுறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது என்றால், அது ஜெயலலிதாதான்!  தன்னம்பிக்கையும், மிகுந்த துணிச்சலும் கொண்ட ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக 6 முறை பதவி வகித்தவர். தற்போது முதல்வராக இருக்கும்போதே மரணமடைந்துள்ளார்.

‘புரட்சித் தலைவி’ என்றும், ‘அம்மா’ என்றும் அ.தி.மு.க-வினரால் கொண்டாடப்படும் செல்வி. ஜெ.ஜெயலலிதா உயிரிழந்தது அ.தி.மு.க. தொண்டர்களுக்கு நிச்சயம் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive