சென்னை: சென்னை துறைமுகம் அருகே அதிதீவிர வர்தா புயல் கரையை கடந்து வழுவிழந்தது.
பின்னர் அது படிப்படியாக குறைந்து புயல் வலுவிழந்து 60 முதல்
70 கிமீ வேகத்தில் வீசத் தொடங்கியது. அப்போது காற்றுடன் சேர்ந்து பலத்த
மழையும் பெய்தது. காற்றின் வேகத்தில் வீடுகளின் கூரைகள் பறந்தன. கடைகள்,
வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகைகள், பேனர்கள் அனைத்தும் காற்றில் அடித்து
செல்லப்பட்டன. சாலைகளில் சுமார் 20 ஆயிரம் மரங்கள் வேரோடு பெயர்ந்து
விழுந்தன.
இதில் 7 பேர் பரிதாபமாக பலியாகினர். மரங்கள் விழுந்ததால்
சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன. சாலையில்
விழுந்த மரங்களை அகற்றும் பணியில் தீயணைப்பு படையினர் மற்றும் மாநகராட்சி
ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், சென்னையில் பல இடங்களில் மின் கம்பங்கள்
சாய்ந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் விநியோகம்
நிறுத்தப்பட்டுள்ளது.
மின்சார ரயில் தடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால்
ரயில்களும் நிறுத்தப்பட்டன. விமான சேவையும் ரத்து செய்யப்பட்டன. நகரில்
அனைத்து வகையான போக்குவரத்தும் முடங்கியதால் மக்கள் எங்கும் செல்ல
முடியாமல் திணறினர். சென்னை மற்றும் புறநகரில் தாழ்வான குடியிருப்பு
பகுதிகளில் மழை நீர் தேங்கியது. நேற்று காலை முதல் பல இடங்களில் மின்சாரம்
துண்டிக்கப்பட்டது.
புயல் கரையை கடந்ததையடுத்து சென்னையில் காற்றின் வேகமும்,
மழையும் குறையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் கனமழை
நீடிக்கும் என்றும், அடுத்த 24 மணிநேரத்தில் வடதமிழகத்தில் கனமழை பெய்யும்
என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்தா புயல் கரையை கடந்த போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ வேகத்தில் காற்று வீசியது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...