சில தினங்களுக்கு முன்பு தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர்கள் சீனிவாச ரெட்டி,
பிரேம் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் 131 கோடி ரூபாய் ரொக்கமும், 177 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டது. 131 கோடிரூபாய் பணத்தில் 34 கோடி புது ரூபாய் நோட்டுகள் ஆகும். ரூபாய் நோட்டுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் 34 கோடி ரூபாய் புது நோட்டுகள் எப்படி வந்தது என்று வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் வங்கி அதிகாரிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
வங்கி அதிகாரிகள் மட்டும் அல்லாமல் தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவுக்கும் இதற்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதால் தற்போது அண்ணா நகரில் உள்ள ராம மோகன் ராவ் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. அவரது மகன் வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. காலை 6 மணி முதல் இந்த சோதனை யானது நடைபெற்று வருகிறது. மேலும் ராம் மோகன் ராவ் மகனுக்கும், சேகர் ரெட்டிக்கும் தொழில் அடிப்படையில் தொடர்பிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தில் மணல் குவாரி தொழிலில் ஈடுபட்டிருந்த சேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டி மற்றும் பிரேம் ரெட்டி ஆகியோருடன் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறது என்று சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு கிடைத்த தகவலை அடுத்து தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது தமிழக தலைமைச்செயலாளர் ராம மோகன் ராவின் அலுவலக அறையிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்திவருகின்றனர்.
சேகர் ரெட்டி தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடன் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சசிகலாவின் குடும்பத்தினருக்கும் சேகர் ரெட்டிக்கும் தொடர்பிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அவசர ஆலோசனை : தமிழக தலைமை செயலாளர் ராம மோகன் ராவ் வீட்டில் சோதனை நடைபெறுவதை அடுத்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஆம் ஆத்மி கட்சி ஆர்ப்பாட்டம் : சென்னையில் தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டு முன் போராட்டம் நடத்திய ஆம் ஆத்மி தொண்டரை அப்பகுதி மக்கள் சிலர் தாக்கினர்
காவலர்கள் குவிப்பு : ராம மோகன் ராவ் வீட்டிற்கு அருகில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
நிர்மலா சீதா ராமன் விளக்கம் : வருமான வரித்துறைக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.
துணை ராணுவத்தினர் குவிப்பு: தமிழக தலைமை செயலாளர் ராம மோகன் ராவின் வீடு தற்போது துணை ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
வருமான வரித்துறை அலுவலகம் : சென்னை வருமான வரித்துறை அலுவலகமும் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. வேறு மாநில காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு : ராம மோகன் ராவின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்துவதற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் சோதனை : தமிழக தலைமை செயலாளர் ராம மோகன் ராவின் அலுவலக அறையிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தற்போது தலைமை செயலகத்தில் உள்ள ராம மோகன் ராவின் அறையில் சோதனை நடைபெற்று வருகிறது.
தலைமைச் செயலகத்தில் துணை ராணுவம் : தமிழக தலைமைச் செயலகத்திலும் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...