முதல்வர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையிலும் ஆளுநர் அறிவுறுத்தியுள்ள நடவடிக்கை தொடர்ச்சியாக
புதுச்சேரியில் மின்னணு பணவரிவர்த்தனை உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக நிதித்துறை செயலர் அனைத்து துறை தலைவர்களுக்கும் இன்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இச்சுற்றறிக்கையை தனது டுவிட்டர் பக்கதிலும் கிரண்பேடி வெளியிட்டு. அரசிலுள்ள ஊழலை ஒழிப்பதே நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரியில் மின்னணு பணபரிவர்த்தனை வர்த்தகம் உட்பட அனைத்து அரசு துறைகளிலும் அமல்படுத்த மத்திய அரசு தலைமை செயலருக்கு உத்தரவிட்டது. இதை முதல்வர் நாராயணசாமி எதிர்த்தார். மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் படிப்படியாகதான் செய்ய முடியும் என்று குறிப்பி்ட்டார். அவர் வரும் 23ம் தேதி டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளார். அதே நேரத்தில் ஆளுநர் கிரண்பேடியோ அதிகாரிகளை அழைத்து உடன் விவாதித்து இதை செயல்படுத்த உத்தரவிட்டார்.
இந்நிலையில் நிதித்துறை செயலாளர் டாக்டர் வி.கந்தவேலு அனைத்து துறை தலைவர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
மின்னணு பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் பொதுமக்கள், அரசு ஊழியர்களுக்கு இணையதளம் மூலம் சேவைகளை புரியும் வகையிலும், அனைத்து அரசு பணப்பரித்தனைகளும் மின்னணு மயமாக மேற்கொள்ள கீழ்கண்ட வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டுள்ளன.
அனைத்து அரசு ஊழியர்களுக்கும் மின்னணு முறையில் இசிஎஸ், நெப்ட், சிஎம்பி, ஆர்டிஜிஎஸ் முறையில் தான் பணப்பரிவர்த்தனையை செய்ய வேண்டும்.
பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும் பல்வேறு சமூக நலப்பாதுகாப்புத் திட்டங்களின் உதவித்தொகையும் மின்னணு முறையில் செலுத்தப்பட வேண்டும். இவற்றில் படுக்கையிலேயே இருக்கும் நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், வயதானோர் உள்ளிட்டோருக்கு மறு உத்தரவு வரும் வரை தற்போதைய முறையிலேயே உதவித் தொகையை வழங்கலாம்.
சிறிய அளவில் மேற்கொள்ளப்படும் அரசின் பணப்பரிவர்த்தனைகள் (Petty Expenses) வழக்கமான முறையிலேயே மேற்கொள்ளலாம்.
கருவூல கணக்குத்துறைக்கு ரசீதுகளை சமர்ப்பிக்கும் போது, பயனாளிகள் விவரங்கள் அடங்கிய தொகுப்பை ஒருங்கிணைக்க அனைத்து துறைகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த வழிகாட்டுதல்கள் தன்னாட்சி பெற்ற அரசு சார்பு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள், வாரியங்கள், கழகங்கள், மானியம் பெறும் நிறுவனங்கள், மற்றும் புதுவை அரசின் நிதி பெறும் இதர நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
டிவிட்டரில் தகவல்: நிதி செயலரின் உத்தரவு நகலை தனது டிவிட்டர் கணக்கில் ஆளுநர் கிரண்பேடி இன்று மாலை வெளியிட்டுள்ளார். அரசிலுள்ள ஊழலை ஒழிப்பதுதான் எங்களின் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...