நாடு
முழுவதும் பள்ளிகள் அளவிலேயே மனித உரிமைக் கல்வியை அறிமுகம் செய்ய
வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி
டி.முருகேசன் தெரிவித்தார்.
புதுச்சேரி மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மீதான மனித
உரிமை மீறல்கள், பிரச்னைகள் தொடர்பான புகார்கள் குறித்து தேசிய மனித
உரிமைகள் ஆணையம் சார்பில் நேரடி விசாரணை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை
நடைபெற்றது. தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவரும், ஓய்வு பெற்ற
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுமான எச்.எல்.தத்து தலைமை தாங்கினார்.
உறுப்பினர்கள் சிரியாக் ஜோசப், டி.முருகேசன், எஸ்.சி.சின்ஹா உள்ளிட்டோர்
கொண்ட குழு ஆணையத்திடம் அளிக்கப்பட்ட புகார்கள் தொடர்பாக விசாரணை
மேற்கொண்டது.
இதில் தலைமைச் செயலர் மனோஜ் பரிதா, டிஜிபி சுனில்குமார் கெளதம், அரசுச்
செயலாளர்கள், காவல் துறை உயரதிகாரிகள், பல்வேறு துறை இயக்குநர்கள், தொண்டு
நிறுவன பிரதிநிதிகள், மனித உரிமை மீறல் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள்
கலந்து கொண்டனர்.
பின்னர், ஆணைய உறுப்பினர் நீதிபதி முருகேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 17 மனித உரிமை மீறல் புகார்கள்
பெறப்பட்டன. இவற்றில் கடந்த மாதம் மட்டுமே 15 புகார்கள் வந்துள்ளன.
புகார்கள் தொடர்பாக பாதிக்கப்பட்டோர், எதிர்தரப்பினரிடம் விசாரணை
செய்துள்ளோம். இதன் மீது பெறப்படும் அறிக்கையின் அடிப்படையில் இறுதி முடிவு
எடுக்கப்படும்.
புதுச்சேரியில் ஆணையம் வேண்டும்: அனைத்து மாநிலங்கள், யூனியன்
பிரதேசங்களில் தனியாக மனித உரிமை ஆணையங்கள் இருக்க வேண்டும் என்பது ஆணையச்
சட்டத்திலேயே உள்ளது. புதுச்சேரியில் தற்போது மனித உரிமைக் குழு தான்
உள்ளது. அதன் செயல்பாடும் சரிவர இல்லை எனத் தெரிகிறது. புதுச்சேரியிலும்
முழு மனித உரிமை ஆணையத்தை அமைக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளோம்.
கூடுதல் அதிகாரம் தேவை: தேசிய, மாநில மனித உரிமை ஆணையங்களின் உத்தரவுகள்
பெரும்பாலும் சட்ட ரீதியில் கட்டுப்படுத்தப்படுபவையாக இல்லாத நிலை உள்ளது.
எனவே, ஆணையத்துக்கு கூடுதல் அதிகாரங்களை மத்திய அரசு தர வேண்டும். மனித
உரிமை மீறல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பள்ளிக் கல்வி அளவிலேயே மனித
உரிமைகள் தொடர்பான பாடப்பிரிவை இடம் பெறச் செய்ய வேண்டும். ஒருவருக்கு
தனக்கான உரிமைகள், பாதிக்கப்பட்டால் எவ்வாறு அணுகுவது என்பது தொடர்பாக
விழிப்புணர்வு தேவைப்படுகிறது. மாணவ, மாணவியருக்கு தவறாமல் மனித உரிமைக்
கல்வியை கற்பிக்க வேண்டும்.
மனித உரிமை ஆர்வலர்கள் தாக்கப்படும் சம்பவங்களை ஆணையம் தீவிரமாக
கருதுகிறது. அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய அரசிடம் வலியுறுத்தி
வருகிறோம்.
புதுச்சேரியில் சாதி மோதல்களால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.18 லட்சம்
இழப்பீடு அரசு சார்பில் தரப்பட்டுள்ளது. இத்தொகை போதுமானதில்லை என கோரிக்கை
வந்துள்ளது. அதை பரிசீலிக்குமாறு அரசிடம் தெரிவித்துள்ளோம். வழக்கம் போல
காவல் துறை மீது தான் அதிக மனித உரிமை மீறல் புகார்கள் வந்துள்ளன. ஒரு நபரை
5 காவல் துறையினர் தாக்கியதாகப் புகார் வந்துள்ளது. அதுதொடர்பாகவும்
தீவிரமாக விசாரித்துள்ளோம் என்றார் முருகேசன்.
ஆணையச் செயலர் சத்திய நாராயண மொகந்தி, செயலர் சிகே.சதுர்வேதி, இணைச் செயலர் எஸ்.கோச்சர், டிஐஜி சாயா சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...