நூறு சதவீத தேர்வு, 200க்கு 200 மதிப்பெண்கள் எடுக்கும்
மாணவர்கள், மாநில அளவில் முன்னிலை, மருத்துவம், பொறியியல் படிப்புக்கான
கவுன்சிலிங்கில் முன்னிலை என சில தனியார் பள்ளிகளே தொடர்ச்சியாக சாதனை
படைக்க சொல்லப்படும் காரணங்களில் முதன்மையானது ஒரே பாடத்தை இரண்டு ஆண்டுகள்
படிப்பது. அடுத்து 'மாஸ் காப்பியிங்'.
தனியார் பள்ளிகளில் ‘மாஸ் காப்பியிங்’ அடிப்பதன் மூலம் தான்
அதிக மதிப்பெண்கள் பெற முடிகிறது. ஒரே பாடத்தை இரண்டு ஆண்டுகள் படிப்பது,
காப்பி அடிப்பது ஆகிய காரணங்களால் தான் சில மாணவர்கள் மட்டும் 200/200 என
மார்க் பெற்று மருத்துவம், பொறியியல் படிக்கின்றனர் என சொல்லப்பட்டது.
ஆனால் தமிழகத்தில் மாஸ் காப்பியிங் முறை நடக்கிறதா என்பது
உறுதிப்படுத்தப்படாமலே இருந்த நிலையில் ஈரோட்டில் உள்ள ஐடியல் மற்றும்
ஆதர்ஷ் தனியார் மெட்ரிக் பள்ளியில் மாஸ் காப்பியிங் நடப்பதாக புகார்
கிளம்பி, அது உறுதிப்படுத்தப்பட்டு இப்போது பள்ளியின் அங்கீகாரமும் ரத்து
செய்யப்பட்டுள்ளது.
ஈரோட்டில் இயங்கி வரும் இந்த ஐடியல் மற்றும் ஆதர்ஷ் மெட்ரிக்
பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகிறார்கள். பிளஸ் 2 மற்றும்
எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுகளில் இந்த பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள்
மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடிப்பது வழக்கம். தமிழகத்தில் பிரபலமான
பள்ளிகளில் இந்த பள்ளிகளுக்கு முக்கிய இடம் உண்டு.
இந்த பள்ளியில் மாணவர்கள் பொதுத்தேர்வில் 'மாஸ் காப்பிங்'
எனப்படும் பிட் அடிக்கும் முறைக்கேட்டில் ஈடுபடுவதாக புகார்கள் கிளம்பியது.
இதையடுத்து கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வின் போது தற்போதைய மெட்டிக்குலேசன்
இயக்குநர் கருப்பசாமி இந்த பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது
ஆதர்ஷ் என்ற மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் பிட் அடிப்பது
உறுதி செய்யப்பட்டது.
மேலும் இயற்பியல், வேதியியல், கணக்கு ஆகிய பாடங்களில் இதே
பள்ளியைச் சேர்ந்த 5 மாணவர்கள் 200க்கு 200 மார்க் பெற்றிருப்பதும், அந்த
விடைத்தாள்களில் கையெழுத்துகள் ஒரே மாதிரி இருப்பதை அரசுத்தேர்வுத்துறை
அதிகாரிகள் கண்டுப்பிடித்தனர். அதாவது 5 மாணவர்களின் தேர்வையும் ஒரே மாணவர்
எழுதி இருந்தது உறுதியானது. இதையடுத்து குறிப்பிட்ட அந்த 5 மாணவர்களின்
தேர்வு முடிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும் அந்த
பள்ளியில் பிளஸ் 2 தேர்வு கண்காணிப்பில் ஈடுப்பட்ட அரசு பள்ளி
தலைமையாசிரியர் நசீர் உள்பட 4 அரசு ஆசிரியர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பிளஸ் 2 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட ஈரோடு
ஆதர்ஷ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியின் பிளஸ் 2 மற்றும்
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு மையத்திற்கான அங்கிகாரத்தை ரத்து செய்ய
தேர்வுத்துறை இயக்குநர் வசுந்த்ராதேவி முடிவு செய்து அதற்கான உத்தரவை கடந்த
வாரம் அந்த பள்ளிக்கு அனுப்பியுள்ளார்.
சம்மந்தப்பட்ட ஈரோடு ஆதர்ஷ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில்
படிக்கும் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு எழுதும்
மாணவர்களை அருகிலுள்ள வேறு பள்ளியில் வைத்து எழுத வைக்க அரசுத்தேர்வுத்துறை
ஏற்பாடுகள் செய்து வருகிறது.
ஈரோடு ஆதர்ஷ் பள்ளியில் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி.,
மாணவர்கள் சேர்க்கைக்கு லட்சக்கணக்கில் கல்வி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தரமான கல்வி வழங்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்பில்தான் பெற்றோர்கள்
லட்சக்கணக்கில் பணத்தை கொட்டி தங்களது பிள்ளைகளை இங்கே சேர்க்கின்றனர்.
ஆனால் அதிக பணம் கொடுத்து இங்கே படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வுகளை இந்த
பள்ளியில் எழுத முடியாது. ஏதாவது வேறு அரசு பள்ளி மற்றும் தனியார்
பள்ளிக்கு போய் எழுத வேண்டிய அவலம் இப்போது ஏற்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக ஈரோடு ஐடியல் மற்றும் ஆதர்ஷ் பள்ளியின் தாளாளரான
சிவலிங்கம் தரப்பில் விசாரித்தோம். "எங்கள் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள்
கடந்த 7 ஆண்டுகளாக பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுகளில்
தேர்வு மையங்களாக செயல்பட்டு வருகின்றன. எங்கள் பள்ளியைச் சேர்ந்த
மாணவர்கள் எங்கள் பள்ளியிலேயே பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகளை
இதுவரை எழுதினர்.
கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் காப்பி அடிப்பது போன்ற
முறைகேட்டில் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர் என்று எங்கள் மீது குற்றம்
சாட்டினர். ஆனால் அது உண்மை இல்லை. முறைகேடு தொடர்பாக அரசு தேர்வுத்துறை
விளக்கம் கேட்டது. எங்கள் தரப்பு நியாயத்தை அவர்களுக்கு எடுத்து சொன்னோம்.
ஆனால் அரசு தேர்வுத்துறை உயர் அதிகாரிகள் அதை காதில் வாங்கவில்லை.
பள்ளிக்கல்வித்துறையில் உயர் அதிகாரிகளுக்குள் நடக்கும் ஈகோ மோதலில்
எங்கள் பள்ளியை பலிகடாவாக்கி விட்டனர். 35 ஆண்டுகால கல்விப்பணியில் சிறந்து
விளங்கிய எங்கள் பள்ளி மீது கரும்புள்ளியை ஏற்படுத்தி விட்டனர். பிளஸ் 2
மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுக்கான தேர்வு மைய அங்கீகாரம் ரத்து
செய்யப்பட்டுள்ளதாக அரசு தேர்வுத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
இதற்கு மாற்று ஏற்பாடாக ஈரோடு, பவானி போன்ற இடங்களில் உள்ள
அரசு மற்றும் தனியார் பள்ளியில் எங்கள் மாணவர்களை தேர்வு எழுத அனுமதிப்பதாக
தேர்வுத்துறையினர் கூறியுள்ளனர். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை பஸ்
மற்றும் வேன்களில் பாதுகாப்பாக அழைத்துச் சென்று தேர்வு எழுத வைப்போம்,"
என்றனர்.
ஆள் மாறாட்டம், மாஸ் காப்பியிங் நடப்பதை எல்லாம்
தமிழகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது இந்த பள்ளி. இது போன்ற
ஊழலையும், முறைகேடுகளையும் முழுமையாய் ஒழிக்க வேண்டும். அதற்கு, கழிவறை
வசதியில்லை, குடி தண்ணீர் வசதியில்லை, சுற்றுச்சுவர் வசதி இல்லை,
பரிசோதனைக்கூடம் கூட இல்லை என பல 'இல்லை'களுடன் இயங்கும் அரசு பள்ளிகளை
மேம்படுத்தி தரமான கல்வியை தர வேண்டியது அவசியம்.
நன்றி
- விகடன் எம்.கார்த்தி
- விகடன் எம்.கார்த்தி
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...