புதிய மாணவர் சேர்க்கை துவங்க உள்ள நிலையில், கல்வி கட்டண கமிட்டிக்கு,
இன்னும் தலைவர் நியமிக்கப்படவில்லை. அதனால், தனியார் பள்ளிகளில், கட்டணம்
நிர்ணயிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த, 2009ல், கட்டாய கல்வி உரிமை சட்டம் அமலுக்கு வந்ததும், நீதிமன்ற
உத்தரவுப்படி, சுயநிதி பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய கமிட்டியை, தமிழக அரசு
அமைத்தது. இதில், தனியார் நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளின்
உட்கட்டமைப்பு வசதிகள்; ஆசிரியர், மாணவர் எண்ணிக்கை ஆகியவற்றின்படி,
கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
கமிட்டியின் முதல் தலைவராக, ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் பதவியேற்றார்.
பின், உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைவரானார்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், 2012ல் விலகினார். 2012 ஜனவரியில், ஓய்வு பெற்ற
நீதிபதி சிங்காரவேலு, தலைவராக நியமிக்கப்பட்டார்.
மூன்று ஆண்டுகளாக பொறுப்பில் இருந்த அவர், 2015 டிசம்பர், 31ல் ஓய்வு
பெற்றார். அவரை தொடர்ந்து, அந்த கமிட்டியின் சிறப்பு சட்ட அதிகாரி,
மனோகரனும் ஓய்வு பெற்றார்; அதனால், கட்டண கமிட்டியின் பணிகள் முடங்கின.
இது குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானதும், மெட்ரிக் பள்ளி இணை
இயக்குனர், ஸ்ரீதேவிக்கு, கல்வி கட்டண கமிட்டியை நிர்வகிக்கும் பொறுப்பு
வழங்கப்பட்டது; ஆனால், அவர் அந்த பக்கமே செல்வதில்லை.அதையடுத்து, கட்டண
கமிட்டிக்கு தலைவரை நியமிக்க கோரி, மதுரை உயர் நீதிமன்ற கிளையில், பொது நல
வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஒரு மாதத்திற்குள், கமிட்டி தலைவரை நியமிக்க,
செப்டம்பரில் உத்தரவிட்டது. இதுவரை தலைவரை நியமிக்காமல், பள்ளிக் கல்வித்
துறை இழுத்தடித்து வருகிறது.
இது குறித்து, தனியார் நர்சரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க
பொதுச் செயலர், நந்தகுமார் கூறுகையில், ''விரைவில் மாணவர் சேர்க்கை நடக்க
உள்ளது. இந்த நேரத்தில், கல்வி கட்டண கமிட்டிக்கு தலைவர் இல்லாததால்,
கட்டணம் நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பள்ளிகள் மற்றும் மாணவர்கள் நலன் கருதி, உடனடியாக புதிய தலைவரை நியமிக்க
வேண்டும்,'' என்றார். கல்வி கட்டண கமிட்டிக்கு தலைவர் இல்லாததால், கட்டணம்
நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...