பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி. பிறப்பித்த உத்தரவு ரத்து ஐகோர்ட்டு தீர்ப்பு.
சென்னை,சென்னை கொன்னூர் சார்–பதிவாளராக பணிபுரிந்து கடந்த 2011–ம் ஆண்டு ஓய்வு பெற்றவர் எஸ்.பிரேமகலா. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘நான் சார்–பதிவாளராக பணி செய்தபோது, ஒரு சொத்து பத்திரத்தை பதிவு செய்தபோது, அரசுக்கு ரூ.4 லட்சத்து 97 ஆயிரம் இழப்பு ஏற்படுத்தியதாக என் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்த குற்றச்சாட்டை விசாரித்த பதிவுத்துறை ஐ.ஜி., என்னுடைய பணி கொடையில் இருந்து ரூ.48 லட்சத்து 78 ஆயிரத்தை பிடித்தம் செய்யவேண்டும் என்றும், 2 ஆண்டுகளுக்கு என்னுடைய ஓய்வூதியத்தில் இருந்து ரூ.2 ஆயிரம் பிடித்தம் செய்யவேண்டும் என்றும் கடந்த 2013–ம் ஆண்டு உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், ‘நீதிமன்றம் விட்ட ஏலத்தில் எடுக்கப்பட்ட சொத்தை பத்திரப்பதிவு செய்யும்போது முத்திரை கட்டணம் செலுத்தவேண்டியது இல்லை. இதை பின்பற்றித்தான் மனுதாரர் பத்திரப்பதிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால், அவர் அரசுக்கு இழப்பை ஏற்படுத்திவிட்டார் என்று கூறி, அவரது பணிக்கொடை மற்றும் ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்ய பத்திரப்பதிவு ஐ.ஜி. பிறப்பித்த உத்தரவை ஏற்கமுடியாது. அந்த உத்தரவை ரத்து செய்கிறேன்’ என்று உத்தரவிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...