சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் திருச்சி கல்லணையை சென்றடைகிறது.
காவிரி ஆற்றின் குறுக்கே செக்கானூர், நெரிஞ்சிபேட்டை, கோனேரிப்பட்டி,
ஊராட்சிகோட்டை, பவானி, தக்கலை-1, தக்கலை-2 ஆகிய 7 இடங்களில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை மின்நிலையங்கள் அமைந்துள்ளன. இந்த மின்நிலையங்கள் வழியாக தண்ணீர் வெளியேறும் போது, தலா 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேட்டூரை அடுத்த செக்கானூரில் அமைக்கப்பட்டுள்ள கதவணை மின் நிலையத்தில் மொத்தம் 18 மதகுகள் உள்ளன. இங்கு மாலை 4 மணியளவில் 7-வது மதகு(கதவு) தண்ணீரின் அழுத்தம் காரணமாக உடைந்தது.
இதையடுத்து அந்த உடைந்த கதவின் வழியாக தண்ணீர் பீறிட்டு காவிரி ஆற்றில் செல்கிறது.
இதனால் இந்த மின்நிலையத்தில் நடைபெற்று வந்த மின் உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டது. மேலும் இங்கு கதவு உடைந்த பகுதியில் அவசர கால மதகு அமைப்பதற்காக மின் நிலையத்தில் தேக்கி வைக்கப்பட்டு இருந்த 0.45 டி.எம்.சி. தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இது முழுமையாக வெளியேற்றப்பட்டவுடன் அவசரகால மதகு பொருத்தப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி நடைபெறும்.
கோல்காரனூர், கூடக்கல், பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது. காவிரி ஆற்றங்கரையோர கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டது.
இந்த மின் நிலையத்தில் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கி வைக்கப்படும் போது, மேட்டூர் அணையின் காவிரி பாலம் வரை தண்ணீர் தேங்கி நின்று கடல் போல் காட்சி அளிக்கும். மேட்டூரை அடுத்த தொட்டில்பட்டி பகுதியில் காவிரி ஆற்றின் கரையோரமாக அமைக்கப்பட்டுள்ள சேலம், வேலூர் மாநகராட்சிகளுக்கான தனி குடிநீர் திட்டங்கள், காடையாம்பட்டி குடிநீர் திட்டம் உள்பட பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் ராட்சத மோட்டார்கள் மூலம் உறிஞ்சி எடுக்கப்பட்டு பயன்பாட்டுக்கு அனுப்பப்படுகிறது.
தற்போது இந்த மின் நிலையத்தில் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்படுவதால், இந்த குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் உறிஞ்சி எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே மீண்டும் இந்த மின் நிலையத்தில் முழுமையான அளவு தண்ணீர் தேக்கி வைத்தால் மட்டுமே இந்த குடிநீர் திட்டங்களுக்கு தட்டுப்பாடு இன்றி தண்ணீர் கிடைக்கும். இது குறித்து தகவல் அறிந்தவுடன் சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத் மின்நிலையத்தில் மதகு உடைந்த பகுதிக்கு வந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் நாமக்கல், ஈரோடு மாவட்ட கலெக்டர்களுக்கும் இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செக்கானூர் கதவணை மின் நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் என்ற அளவில் நாள் ஒன்றுக்கு 9 மணி நேரத்தில் 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் மின் உற்பத்திக்காக வெளியேற்றப்படுகிறது. செக்கானூர் கதவணை மின்நிலையத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ஏற்கனவே தண்ணீரின் அழுத்தம் தாங்காமல் 3 மற்றும் 14 ஆகிய 2 மதகுகள் சில மாதங்கள் இடைவெளியில் உடைந்து சேதம் அடைந்து தண்ணீர் வீணாக வெளியேறியது. இப்போது 7-வது மதகு உடைந்துள்ளது செக்கானூர் கதவணை மின்நிலைய வரலாற்றில் 3-வது முறையாக மதகு உடைந்த நிகழ்வாகும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...