Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பினாமி சொத்துகள் விரைவில் பறிமுதல்: பிரதமர் மோடி.

        பினாமி சொத்துகள் தடைச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். 
 
       பினாமி பெயர்களில் வாங்கி குவிக்கப்படும் சொத்துகள் விரைவில் பறிமுதல் செய்யப்படும் என்பதை இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அகில இந்திய வானொலியின் "மனதின் குரல்' (மன் கீ பாத்) நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு, இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை ஆற்றிய உரை வருமாறு:
கருப்புப் பணம், ஊழலுக்கு எதிராக மத்திய அரசு போர் தொடுத்துள்ளது. இதில் மத்திய அரசு வெற்றி பெறுவதற்கு, நாட்டு மக்கள் தங்களது ஒத்துழைப்பை வழங்க வேண்டும். பதுக்கல்காரர்கள் குறித்து உறுதியான தகவலை நாட்டு மக்கள் தெரிவித்தால் மட்டுமே தவறிழைத்தவர்கள் மீது அரசால் நடவடிக்கை எடுக்க முடியும்.
மத்திய அரசின் நடவடிக்கை, இத்தோடு முடிந்து விடாது. ஊழலுக்கு எதிரான போரில் எங்களது நடவடிக்கையை தற்போதுதான் தொடங்கியுள்ளோம். கருப்புப் பணம், ஊழலுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெற வேண்டும். இந்தப் போரில் இருந்து நாம் பின்வாங்கிச் செல்வது அல்லது போரை நிறுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை.
நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிலவிய முட்டுக்கட்டைகளுக்கு குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் ஆகியோர் தங்களது அதிருப்தியைத் தெரிவித்தனர். நாடாளுமன்ற அலுவல் பாதிக்கப்பட்டதைக் கண்டு, நாட்டு மக்களும் ஆத்திரமும், கோபமும் அடைந்தனர். நாடாளுமன்றத்தில் ஆரோக்கியமான விவாதம் நடைபெற வேண்டும்; இரு அவைகளும் சுமுகமாக நடைபெற வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.
அனைத்து விதமான சலுகைகளையும், வரி விலக்குகளையும் அரசியல் கட்சிகள் அனுபவிப்பதாக சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். அதில் உண்மையில்லை. அவர்கள் தெரிவிப்பது தவறு. சட்டத்தின் முன்பு அனைவரும் சமம். அது தனிநபராகவோ, அமைப்பாகவோ அல்லது அரசியல் கட்சியாகவோ இருந்தாலும் சரி, சட்டத்துக்கு அனைவரும் கட்டுப்பட்டவர்கள்தான்.
உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறும் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு, அதுதொடர்பான விதிகள் தொடர்ந்து மாற்றங்கள் செய்யப்படுவதில் எந்தத் தவறுமில்லை. மக்களின் பிரச்னைகளை குறைக்கவும், கருப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான அரசின் நடவடிக்கையை பல்வேறு தந்திரமான முயற்சிகளின் மூலம் தோற்கடிக்க முயற்சிக்கும் சக்திகளைத் தோற்கடிக்கவே விதிகளில் இவ்வாறு அடிக்கடி மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்தப்படும் சோதனைகளில் நாள்தோறும் புதிய நபர்கள் ஏராளமானோர் பிடிபடுகின்றனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ரொக்கத் தொகையும் பறிமுதல் செய்யப்படுகிறது. செல்வாக்குமிக்க நபர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதில் ரகசியம் என்னவெனில், மேற்கண்ட நபர்கள் குறித்த தகவல்களை எனக்கு அளிப்பதே நாட்டு மக்கள்தான்.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் அதிகமாக அத்தகைய தகவல்களை அரசுக்கு மக்கள் அளித்து வருகின்றனர். வரும் காலத்திலும், அரசு வழங்கியுள்ள மின்னஞ்சல் முகவரி வாயிலாகவும், மை-கவ் செயலி மூலமாகவும் இத்தகைய தகவல்களை மக்கள் அளிக்க வேண்டும்.
பினாமி சொத்துகள் தடைச் சட்டம் கடந்த 1988-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது. ஆனால், அதன் விதிகள் வகுக்கப்படவில்லை; அது அறிவிக்கையாக வெளியிடப்படவுமில்லை. பல ஆண்டுகளாக செயலற்றதாக (கிடப்பில்) கிடக்கிறது. அந்த சட்டத்துக்கு நாங்கள் புத்துயிர் கொடுக்கப் போகிறோம். பினாமி சொத்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில், கூர்மையான சட்டமாக அதை மாற்றப் போகிறோம். வரும் நாள்களில், அந்தச் சட்டம் செயல்படுத்தப்படும்.
நாடு மற்றும் நாட்டு மக்களின் நலன்களுக்காக எந்தெந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமோ, அதை நாங்கள் நிச்சயம் எடுப்போம். அதற்கே நாங்கள் முக்கியத்துவம் கொடுப்போம் என்றார் பிரதமர் நரேந்திர மோடி.

நாள்தோறும் 15,000 பேருக்கு ரூ.1,000 பரிசு

நுகர்வோர்கள், வர்த்தகர்களை ஊக்குவிக்க "லக்கி கிரஹக் யோஜனா', வியாபாரிகளை ஊக்குவிக்க, "டிஜி தன் வியாபார் யோஜனா'ஆகிய இரு பரிசுத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மின்னணு முறையில் பரிவர்த்தனை மேற்கொள்ளும் நுகர்வோர்களில் குலுக்கல் முறையில் 15 ஆயிரம் பேர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களது வங்கிக் கணக்கில் தலா ரூ.1,000 டெபாசிட் செய்யப்படும். அடுத்த 100 நாள்களுக்கு இப்பரிசு வழங்கப்படும். செல்லிடப் பேசி வங்கி முறை, ரூபே அட்டை, யுபிஐ, யுஎஸ்எஸ்டி போன்ற மின்னணு முறைகள் மூலம் பரிவர்த்தனை மேற்கொள்ளும் நுகர்வோர்களுக்கே இத்திட்டம்
பொருந்தும்.

வியாபாரிகளுக்கு தனித் திட்டம்

"டிஜி தன் வியாபார் யோஜனா' திட்டம், வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கானதாகும். வியாபாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களை ரொக்கமில்லா பரிவர்த்தனையை மேற்கொள்ளும்படி ஊக்குவிக்க வேண்டும். இத்தகைய வியாபாரிகளுக்கு தனியாக பரிசு அளிக்கப்படும். இந்த திட்டத்தின்கீழ் வியாபாரிகவியாபாரிகள் பரிசு பெற வேண்டுமெனில், வாடிக்கையாளர்களை ரூ.50-க்கும் அதிகமாகவும், ரூ.3,000-த்துக்கும் குறைவாகவும் மின்னணு முறையின்மூலம் ரொக்கமில்லா பரிவர்த்தனையில் ஈடுபடச் செய்ய வேண்டும். ரூ.3,000-க்கும் அதிகமாக பொருட்களை வாங்கச் செய்வோர்கள், பரிசுத் தொகைக்கு தேர்வு செய்யப்பட மாட்டார்கள்.

30 கோடி பேரிடம் ரூபே அட்டைகள்

இந்தியாவில் தற்போது 30 கோடி பேரிடம், ரூபே அட்டைகள் உள்ளன. அதிலும் ஜன்-தன் வங்கிக் கணக்குகள் வைத்துள்ள 20 கோடி ஏழை மக்களிடம் ரூபே அட்டைகள் இருக்கின்றன.

வியாபாரிகளுக்கு வருமான வரியில் சலுகை

நாட்டில் ரொக்கமில்லா பரிவர்த்தனை 300 சதவீதம் அதிகரித்துள்ளது. தங்களது வணிக நடவடிக்கைகளில், ரொக்க பரிவர்த்தனையைத் தவிர்த்து, மின்னணு பரிவர்த்தனையை ஏற்றுக் கொண்ட வியாபாரிகளுக்கு, வருமான வரியில் சலுகை வழங்கப்படும் என்றார் பிரதமர் மோடி.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive