புதுச்சேரி: 'மத்திய அரசின் பணமில்லா பரிவர்த்தனை திட்டத்தை புதுச்சேரி அரசு ஏற்காது' என்று முதல்வர் நாராயணசாமி கூறினார்.
அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
மத்திய அரசு 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த பின்னர், புதுச்சேரியில் பணப்புழக்கம் குறைந்துள்ளது. வியாபாரம் பாதித்துள்ளது. கூட்டுறவு நிறுவனங்களில் பணம் இல்லாததால் விவசாயிகள் எந்த பணியையும் மேற்கொள்ள முடியாமல் துன்பப்படுகின்றனர்.
வங்கியில் பணம் வைத்திருந்தும், வங்கி மற்றும் ஏ.டி.எம்., களில் பணம் இல்லாததால், பணத்தை எடுத்து செலவு செய்ய முடியாமல் மிகப்பெரிய பாதிப்பு எற்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கு பணத்திற்கு பதில் காசோலை தருகின்றன. தொழிலாளர்கள் காசோலையை பணமாக மாற்ற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். ரியல் எஸ்டேட் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு வரும் விற்பனை வரி, கலால் வரி குறைந்துள்ளது. சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு பணமில்லா பரிமாற்றத்திற்காக புதுச்சேரியை முன்மாதிரி மாநிலமாக மாற்ற திட்டமிட்டுள்ளது. இதனை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்று தலைமை செயலருக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்துள்ளது. ஆனால் இதற்கான கட்டமைப்பு புதுச்சேரியில் இல்லை. புதுச்சேரி கிராமப்புறங்களில் வங்கிகளும், ஏ.டி.எம்.,களும் இல்லை. எனவே பண அட்டை மூலம் தொழில் செய்வது, வியாபாரம் செய்வது, பொருட்கள் வாங்குவது முடியாத காரியம்.
மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் எந்த ஒரு புதிய திட்டத்தையும் திணிப்பதை ஏற்க மாட்டோம். மக்கள் ஏற்கும் திட்டத்தைதான் ஏற்போம். காய்கறி, பால் விற்பனை செய்பவர்கள், விவசாய கூலி தொழிலாளர்கள் ஸ்வைப் மிஷின் பயன்படுத்த முடியாது.
புதுச்சேரியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வங்கிகள் தொடங்கவும், ஏ.டி.எம்., மையங்கள் தொடங்கவும், ஸ்வைப் மிஷின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பிரதமர் ரூ.1000 கோடி நிதி கொடுத்தால் இத்திட்டத்தை அமல்படுத்தலாம்.
சிலர் மத்திய உள்துறை அமைச்சரின் பெயரைச் சொல்லி வருவதால், நானே இன்று (நேற்று) பணமில்லா பரிமாற்றத்தை புதுச்சேரியில் அமல்படுத்த மாட்டோம் என்று மத்திய உள்துறை அமைச்சரிடம் நேரிடையாக டெலிபோன் மூலம் பேசிவிட்டேன். அவர் பிரதமரிடம் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
வரும் 23ம் தேதி பிரதமரை சந்தித்து இது தொடர்பாக பேச உள்ளேன். நாளை (இன்று) மத்திய நிதித்துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளேன்.பணமில்லா பரிமாற்றத்திற்காக 5 ஆயிரம் ஸ்வைப் மிஷின் தருவதாக கூறினர். ஆனால் ஒன்றுகூட வரவில்லை. நாடு முழுவதும் டிஜிட்டலைசேஷன் திட்டத்தை கொண்டு வருவதற்காக தெலுங்கானா முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 5 முதல்வர்களின் குழு அமைக்கப்பட்டது. அதில் நானும் சேர்க்கப்பட்டு இருந்தேன். தற்போதைய சூழலில் இந்த குழுவில் இடம்பெற முடியாது என மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளேன்.
இவ்வாறு முதல்வர் நாராயணசாமி கூறினார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...