'நடா' புயலால், மாத சம்பளம் பெறுவோரின் முற்றுகையிலிருந்து, சென்னை மற்றும்
கடலோர மாவட்ட வங்கிகள் தப்பின.
செல்லாத நோட்டு அறிவிப்பால், பணப் புழக்கம்
குறைந்து, சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் பணம் எடுக்க,
உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஓய்வூதியதாரர்களும், அரசு ஊழியர்களும் சம்பள பணத்தை
முழுமையாக எடுக்க முடியுமா என பயந்தனர். நவ., 28க்குப் பின், வங்கியில்
டிபாசிட் செய்யப்படும் செல்லத்தக்க ரூபாய் நோட்டுகளை எடுப்பதற்கான
உச்சவரம்பை ரிசர்வ் வங்கி நீக்கியதால், நிம்மதி அடைந்தனர். நேற்று
முன்தினம் பணத்தை எடுக்க, அரசு ஊழியர்கள் குவிந்தனர். வங்கிகளில், போலீஸ்
பாதுகாப்பு போடும் நிலை ஏற்பட்டது. நேற்று, தனியார் நிறுவன ஊழியர்களுக்கு
சம்பளம் கிடைத்தது. அரசு ஊழியர்களோடு, தனியார் நிறுவன ஊழியர்களும்
குவிந்தால் எப்படி சமாளிப்பது என, வங்கி அதிகாரிகள் குழப்பத்தில்
இருந்தனர். 'நடா' புயல் அறிவிப்பால் நேற்று, சென்னை மட்டுமின்றி கடலோர
மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. பெரும்பாலானோர், வங்கிகளுக்கு செல்வதை
தவிர்த்தனர். வங்கிகளில் கூட்டம் குறைவாகவே இருந்ததால், வங்கி மேலாளர்கள்
நிம்மதி அடைந்தனர். பல வங்கிகள், முற்பகலிலேயே மூடிக் கிடந்தன.
ஏ.டி.எம்.,களிலும் பெரிய அளவில் கூட்டம் இல்லை.
இதுகுறித்து, பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் ஒருவர் கூறுகையில், 'வங்கிகளில்,
அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் தர, போதிய பணம்
கையிருப்பு இல்லை; அதனால், பயந்தோம். நல்ல வேளை, மழை காப்பாற்றி விட்டது.
அடுத்த நாளை எப்படியாவது சமாளிப்போம்' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...