நீதிபதிகள் நியமன விவகாரத்தில் கொலீஜியம் குழுவின் நிலைப்பாட்டுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு ஆதரவு தெரிவித்துள்ளது.
புதிய நெறிமுறை
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் காலியாக இருக்கும் நீதிபதி பணியிடங்கள் மற்றும் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு, நீதித்துறை பரஸ்பரம் விமர்சித்து வருகின்றன. முன்னதாக, நீதிபதிகள் நியமனம் தொடர்பாக புதிய நெறிமுறைகளை வகுத்தளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதையேற்று, நெறிமுறைகளை உருவாக்கிய மத்திய சட்ட அமைச்சகம், அந்த அறிக்கையை கடந்த மே மாதம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
கொலீஜியம் குழு
அதிலிருந்த பல்வேறு அம்சங்களை கொலீஜியம் குழு ஏற்காமல் ஆட்சேபம் தெரிவித்தது. அதைத் தொடர்ந்து, மீண்டும் புதிய வரைவு நெறிமுறைகளை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி உச்சநீதிமன்றத்திடம் ஒப்படைத்தது. இந்நிலையில், நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மத்திய சட்டம் மற்றும் நீதித் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அளித்த அறிக்கை நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வீட்டோ அதிகாரம்
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வரைவு நெறிமுறைகளில், ‘தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுநலன் ஆகியவற்றின் அடிப்படையில், நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலீஜியம் குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரிக்க முடியும்' என்று கூறப்பட்டுள்ளது. இது, உச்சநீதிமன்றத்தின் தேர்வை நிராகரிக்கும் வீட்டோ அதிகாரத்தை மத்திய அரசுக்கு அளிக்கும்வகையில் உள்ளது. அரசியல் சாசனத்தின் ஷரத்துகளுக்கு இது எதிரானது.
அரசுக்கு உரிமை
தேசிய பாதுகாப்பு, பொதுநலன் என்றால் என்னவென்று, அரசுத் தரப்பால் விளக்கம் அளிக்கப்பட வேண்டும். மேலும் அவற்றின்கீழ் எந்தெந்த சூழ்நிலைகள் வரும் என்பதையும் பட்டியலிட்டு வரையறுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொலீஜியம் குழுவின் பரிந்துரையை நிராகரிக்க அரசுக்கு உரிமை வழங்குவது உள்ளிட்ட நீதிபதிகள் நியமனம் தொடர்பான வரைவு நெறிமுறைகளுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் குழு தனது ஆட்சேபத்தை மீண்டும் தெரிவிக்கும் என்று தெரிய வருகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...