திருநெல்வேலி:நெல்லையை சேர்ந்த எழுத்தாளர் வண்ணதாசனுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் சாகித்ய அகாடமி ஒவ்வொரு மொழியிலும் சிறந்த படைப்பாளர்களை
தேர்வு செய்து ஆண்டுதோறும் விருதினை வழங்கி வருகிறது. 2016ம் ஆண்டில்
சிறந்த தமிழ் படைப்பிற்கான விருது வண்ணதாசனின் 'ஒரு சிறு இசை' என்ற சிறுகதை
தொகுப்பிற்காக வழங்கப்படுகிறது.
70 வயதாகும் இவர் திருநெல்வேலி, சிதம்பரநகரில் வசிக்கிறார். இயற்பெயர்
கல்யாணசுந்தரம், 'கல்யாண்ஜி' என்ற பெயரில் கவிதைகள் எழுதிவருகிறார்.
வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். 1962ல் இருந்து எழுதிவருகிறார்.
இதுவரையிலும் 13 சிறுகதை தொகுப்புகள், 13 கவிதை தொகுப்புகள், ஒரு
குறுநாவல், 2 கடித தொகுப்புகள் வெளியிட்டுள்ளார்.
கலைமாமணி, தமிழ்பேராயம், இலக்கிய சிந்தனை உள்ளிட்ட பல்வேறு இலக்கிய
விருதுகள் பெற்றுள்ளார். இந்த ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதுக்கும் தேர்வு
செய்யப்பட்டுள்ளார். இவரது தந்தை தி.க.சிவசங்கரனும் சிறந்த எழுத்தாளர்.
இவர் 2000ம் ஆண்டில் விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள் என்னும்
விமர்சன நுாலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றார். நெல்லை மாவட்டத்தை
சேர்ந்த எழுத்தாளர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக சாகித்ய அகாடமி விருதுக்கு
தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
2012ல் டி.செல்வராஜ் (தோல்), 2013ல் ஜோ டீ குரூஸ் (கொற்கை), 2014ல்
பூமணி(அஞ்ஞாடி), 2015ல் மாதவன் (இலக்கிய சுவடிகள்) ஆகியோரை தொடர்ந்து இந்த
ஆண்டு வண்ணதாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சாகித்ய அகாடமி 1954ல்
துவக்கப்பட்டது. 1955ல் வழங்கிய முதல் விருது, நெல்லையை சேர்ந்த
ஆர்.பி.சேதுப்பிள்ளைக்கு, தமிழ் இன்பம் படைப்பிற்காக வழங்கப்பட்டது என்பது
குறிப்பிடத்தக்கது.
விருது குறித்து அவர் கூறுகையில், ''எழுத்தாளர் வல்லிக்கண்ணனுக்கு நான்
எழுதிய கடிதங்கள்தான் என்னை மேலும் எழுதத்துாண்டின. கடிதங்களை நான்
முக்கியமானவையாக மதிக்கிறேன். 54 ஆண்டுகளாக எழுதிவருகிறேன்.
என்னோடு 1960களில் எழுதத்துவங்கியவர்கள் பலர் எழுத்தை நிறுத்திவிட்டார்கள்.
இளைய படைப்பாளிகளின் எழுத்துக்கள் எனக்கு நம்பிக்கையளிக்கின்றன.
வாசகர்கள், இளைய படைப்பாளிகள் தமிழின் குறிப்பிடத்தகுந்த படைப்பாளர்களின்
படைப்புகளை தேடிக்கண்டுபிடித்து வாசிக்கவேண்டும்.
தேசிய விருது அளிக்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தாமிரபரணி
சார்ந்து தொடர்ந்து படைப்புலகில் இயங்குவேன்,'' என்றார்.இலக்கியவாதிகளை
ஊக்குவிக்கும் விதமாக சாகித்ய அகாடமி விருது 1954ல் உருவாக்கப்பட்டது.
சிறந்த இலக்கிய படைப்புகளுக்காக (கவிதைகள், சிறுகதை, நாவல், இலக்கிய
விமர்சனம்) 1955 முதல் ஆண்டுதோறும் தமிழ் உட்பட 24 மொழிகளுக்கு விருது
வழங்கப்படுகிறது. ஒரு லட்ச ரூபாய் காசோலை வழங்கப்படுகிறது.
தமிழ் மொழி பிரிவில் 1957, 1959, I960, 1964 மற்றும் 1976 ஆகிய ஆண்டுகளில்
இவ்விருது யாருக்கும் வழங்கப்படவில்லை.இந்தாண்டு தமிழ்மொழிக்கான விருதுக்கு
சிறந்த சிறுகதைக்காக வண்ணதாசன் தேர்வாகியுள்ளார். விருது 2017 பிப்., 22ல்
வழங்கப்பட உள்ளது.
வண்ணதாசன் எழுத்துக்களில் அழகியல்:பாராட்டும் படைப்பாளிகள்
'ஒரு சிறு இசை' சிறுகதை நுாலை எழுதிய, நெல்லையை சேர்ந்த வண்ணதாசனுக்கு,
இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. இது குறித்து
எழுத்தாளர்கள் பலர் தங்களது மகிழ்ச்சியை பலவிதங்களில்
வெளிப்படுத்தியுள்ளனர்.
வண்ணதாசன் 13 சிறுகதை புத்தகங்கள், 13 கவிதைப் புத்தகங்கள் எழுதியுள்ளார்.
54 ஆண்டுகளாக தொடர்ந்து எழுதும், மூத்த படைப்பாளி. 60 வயதை கடந்த பலர்
எழுதுவதில் ஆர்வம் காட்டாத போதும், தனது 70 வது வயதிலும் எழுத்தில் அதிக
ஈடுபாடு கொண்டுள்ளார். இவரது எழுத்தை ரசித்த சில படைப்பாளர்களின்
பகிர்வுகள்.வாசகர்களுக்கு கிடைத்த வெற்றி
ஜெயமோகன், எழுத்தாளர்:
தமிழில் இன்றைக்கு, குறிப்பிட்ட ஒருவகையான நுட்பமாக எழுதக்கூடிய
எழுத்தாளர். நுண்ணிய தகவல்களை மட்டுமே கொண்டு எழுதும் ஒரு முறை உள்ளது.
அந்த எழுத்து முறையில் முதல்புள்ளி. அந்த வகை இலக்கியத்திற்கான முன்னோடி.
பெரிய சாதனையாளர்.
கடந்த 10 வருடங்களுக்கு மேலாக, அவரது பெயர் சாகித்ய அகாடமி விருதுக்கு
பரிந்துரைக்கப்பட்டு வந்தது. ஆனால் அந்த அரசியலால் புறக்கணிக்கப்பட்ட
பெயர்களில் இருந்து வந்தது. இதனால் தமிழ் வாசகர்களிடம் ஒருவகையான கோபமும்,
மனக்கிலேசமும் இருந்து வந்தது.
இப்போது விருது வழங்கியுள்ளது ஒருவகையில் சாகித்திய அகாடமிக்கான
பிராயச்சித்தம் என்று தான் சொல்ல வேண்டும். இது எல்லாவகையிலும் தமிழ்
வாசகர்களுக்கு கிடைத்த ஒரு வெற்றி. தமிழ் இலக்கியத்தில் சரியான நபர்களை
கவுரவிப்பதற்கு, தமிழ் வாசகர்களுடைய அழுத்தம் எப்போதும் இருந்து கொண்டே
இருக்க வேண்டும்.
வாழ்க்கையை கொண்டாடிய படைப்பாளி
சவுந்தரமகாதேவன், தமிழ் துறை தலைவர், சதக்கத்துல்லா அப்பா கல்லுாரி,
நெல்லை: இவரது படைப்புகள் அன்புமயமானது. நெல்லை, தாமிரபரணி சார்ந்த எளிய
மனிதர்களின் பண்பாட்டு அடையாளம், வண்ணதாசன் கதைகள். எல்லோரையும்
ஏற்றுக்கொள்கிறேன்; அவரவர் பலங்களோடும், அவரவர் பலவீனங்களோடும், என்பது
அவரிடம் பிடித்த வரிகள்.
சிறுகதைகள் மட்டுமின்றி, அதே வீச்சோடு கவிதைகளும் எழுதுகிறார்.அவரது
எழுத்தின் நடை தனித்துவமான அழகியல் நடை. தாமிரபணி, இயற்கை சார்ந்த, பூக்கள்
சார்ந்த ரசனை சார்ந்த படைப்புகள். எதையும் ரசிப்பவர். ஒரு தெருவை கூட
ரசிப்பார். வாழ்க்கையை கொண்டாடும் மாபெரும் படைப்பாளி வண்ணதாசன்.
கோபம், வக்கிரம், காமம் இப்படி ஒருவரி கூட அவரது படைப்புகளில் இருக்காது.
அவரது படைப்பை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். எல்லாரையும் கொண்டாடிய
படைப்பாளி. அவரைப்பற்றி நான் 'வண்ணதாசன்' என்ற பெயரில் புத்தகம்
எழுதியுள்ளேன். ஆய்வும் செய்துள்ளேன்.
அழகியலின் அடையாளம்
பொன்னீலன், சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்: வண்ணதாசன்
எழுத்துகள், மனித அழகியல் பற்றியது. எதை சொன்னாலும் அதில் பொதிந்திருக்கிற
அழகியல் அனைத்தையும் பூ, காற்று, இலை இப்படி எதுவாக இருந்தாலும், அதனோடு
நாம் நகர்ந்து செல்வது போன்று எழுதுவது மனதில் ஆழமாக பதிந்துவிடும்.
அவரது சிறுகதைகள் அனைத்துமே ஆழ்ந்த மனிதநேயமிக்கது. மனிதத்திற்கு எதிராக,
அவர் எந்த படைப்பையும் எழுதவில்லை.தி.க.சி.,என்ற பெரும் ஆளுமையின் மகன்.
இவர் எந்த பக்கமும் சாயாமல் நடுநிலையோடு சமூகம், இயற்கை... இப்படி அதன்
அழகை எழுத்தில் கொண்டு வந்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...