அத்தியாவசியப் பொருள்களின் கட்டணங்களைச் செலுத்துவதற்கும், மருந்துப்
பொருள்கள் வாங்குவதற்கும் ஏற்கப்பட்டு வந்த பழைய ரூ.500 நோட்டுகளை
வியாழக்கிழமை (டிச.15) நள்ளிரவு முதல் பயன்படுத்த முடியாது என்று மத்திய
நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நிதித்துறைச் செயலர் சக்திகாந்த தாஸ் தனது சுட்டுரைப் பதிவில்,
"குறிப்பிட்ட சேவைகளுக்காக, தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்த
பழைய ரூ.500 நோட்டுளின் பயன்பாடும் டிசம்பர் 15-ஆம் தேதி நள்ளிரவு முதல்
முடிவுக்கு வருகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த மாதம்
8-ஆம் தேதி அறிவித்தது. இருந்தபோதிலும், அத்தியாவசியத் தேவைகளான சமையல்
எரிவாயு, தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றுக்கான சேவைக் கட்டணங்களை
செலுத்துவதற்கும், மருந்துப் பொருள்கள், பெட்ரோல் - டீசல் ஆகியவற்றைப்
பெறுவதற்கும் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை குறிப்பிட்ட காலம் வரை
பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. பிறகு, இதற்கான கால
அவகாசமும் நீட்டிக்கப்பட்டது.
இதனிடையே, சில குறிப்பிட்ட சேவைகளுக்கு பழைய ரூ.1000 நோட்டுகளின்
பயன்பாட்டினை மத்திய அரசு கடந்த சில நாள்களுக்கு முன்பு நிறுத்தியது.
அதேபோல், தற்போது அத்தியாவசியப் பொருள்களின் கட்டணங்களைச்
செலுத்துவதற்கும், மருந்துப் பொருள்கள் வாங்குவதற்கும் ஏற்கப்பட்டு வந்த
பழைய ரூ.500 நோட்டுகளை வியாழக்கிழமை (டிச.15) நள்ளிரவு முதல் பயன்படுத்த
முடியாது என்று மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...