திறந்தவெளியில் மலம் கழிப்பதால், பொதுமக்களின் உடல்நலத்துக்கு
ஊறுவிளைகிறது. எனவே, இதனை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி
வருகின்றன. அதன்படி, நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்ட
வேண்டும் என மத்திய அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், தெலுங்கானாவில் 36 மணி நேரத்தில் 820 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். ஜாகித்யாலா மாவட்ட ஆட்சியர், சரத் தசை மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுத்தார்.
அதன்படி விழிப்புணர்வு நிகழ்ச்சியாக 36 மணி நேரத்தில் 820 கழிப்பறைகள் கட்டி முடிக்கத் தீர்மானிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் கடந்த 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. கழிப்பறை கட்ட தேவையான கட்டுமான பொருட்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் விரைவாக செய்யப்பட்டன.
அதைத் தொடர்ந்து, நடிக்குடி என்னும் கிராமத்தில் ஆட்சியர் சரத், கழிப்பறைகள் கட்டும் பணியை தொடங்கி வைத்தார். மற்ற கிராமங்களில் கழிப்பறைகள் கட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். பின்னர், அவர் ஒவ்வொரு கிராமமாக சென்று கழிப்பறை கட்டும் பணியை பார்வையிட்டார். தொழிலாளர்களின் அயராத உழைப்பால் 36 மணி நேரத்தில் 820 கழிப்பறைகள் கட்டப்பட்டது. அதையடுத்து, 90 நாட்களில் ஜாகித்யாலா மாவட்டத்திலுள்ள அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
கேரள அரசு சார்பில், கடந்த இரண்டு மாதங்களில், கிராமப் பகுதிகளில் சுற்றுப்புற சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் ’சுசித்வா’ திட்டத்தின் கீழ், 1 லட்சத்து 75 ஆயிரத்து 84 கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத இந்திய மாநிலங்களில் கேரளா 3ஆவது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...