மக்கள் நியாயமாக சம்பாதித்த பணத்தை எடுக்கும் விதமாக வாரம் ரூ.24,000 வரை எடுக்கும் வாக்குறுதியை காப்பாற்றுமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்த விசாரணையின் போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
டி.எஸ்.தாக்குர், அரசுதரப்பு அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கியிடம்
கூறியபோது, “வாரம் ரூ.24,000 வரை பணம் எடுக்கலாம் என்று அரசே
கூறியிருந்தது. மக்களுக்கு இந்தத் தொகையை அளிக்க வங்கிகள் மறுக்கக் கூடாது
என்ற உத்தரவாதத்தை அரசு வழங்குமா? வாரம் ரூ.24,000 எடுக்கலாம் என்று கூறிய
பிறகே அரசு தன் வாக்குறுதியை காப்பாற்றுவது அவசியமாகிறது” என்றார்.
டி.எஸ்.தாக்குர், கன்வில்கர் மற்றும் சந்திராசூட் ஆகியோர்
அடங்கிய அமர்வு மேலும் கூறும்போது, “பணமதிப்பு நீக்கத்திற்குப் பிறகு
நோட்டுத்தட்டுப்பாடு இருந்தால் அரசு அதனை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
மக்கள் ரூ.24,000 எடுக்கலாம் என்று வங்கிகளுக்குச் சென்றால் ரூ.2,000,
அல்லது 5000 அல்லது 8000 மட்டுமே கிடைக்கிறது. குறைந்தது ரூ.10,000 தொகையை
உச்ச வரம்பாக நிர்ணயித்தால் நலல்து” என்று அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மூத்த வழக்கறிஞர் சிதம்பரம் கூறும்போது, “ஒவ்வொரு வங்கியும்
எவ்வளவு தொகை எடுக்கலாம் என்பதை தாங்களாகவே நிர்ணயித்துக் கொள்கின்றனர்.
டெல்லி போன்ற நகரங்களில் ரூ.2000 வைத்துக் கொண்டு ஒரு குடும்பம் எப்படி
வாழ்க்கையை ஓட்ட முடியும்? இதில் பாகுபாடு இருக்கக் கூடாது” என்றார்.
இதற்கு பதில் அளித்த ரோத்கி, “ஒவ்வொரு குடும்பமும் ரூ.24,000
வாரத்திற்கு பணம் எடுக்கலாம், ஒரு குடும்பத்திற்கு அதற்கு மேலா செலவு
இருக்கப்போகிறது?” என்றார்.
இதற்கு பதிலடி கொடுத்த சிதம்பரம், “குடும்பத்தில் ஒவ்வொரு
உறுப்பினரும் வங்கிக் கணக்கு வைத்துக் கொள்வதில்லை. 5 பேர் கொண்ட
குடும்பத்தில் ஒரேயொரு வங்கிக் கணக்குள்ள சந்தர்ப்பங்களும் உள்ளன.
வங்கிகளில் அரைநாளில் பணம் தீர்ந்துவிடுகிறது. 35% ஏடிஎம்களில் ஏதோ கொஞ்சம்
பணம் இருக்கிறது. 7 வடகிழக்கு மாநிலங்களில் 5,000 ஏடிஎம் மையங்களே உள்ளன.
ஏழை குடும்பங்கள் தங்கள் சொந்தப் பணத்தை எடுக்க அனுமதிக்க வேண்டும்”
என்றார்.
இப்படியே வாதம் நீடிக்க ஒரு நேரத்தில் அட்டர்னி ஜெனரல்
ரோத்கி, ‘எந்த ஏழை மக்கள் பணமதிப்பு நீக்கத்தை எதிர்த்து கோர்ட்டிற்கு
வந்துள்ளனர்?’ என்றார். வழக்கறிஞர்கள், கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள்
தொடர்ந்த வழக்குகள்தான் நடைபெறுகின்றன என்றார் ரோத்கி.
இதற்கு எதிர்தரப்பிலிருந்து ‘91 பேர் இதுவரை பணமதிப்பு நீக்க
நடவடிக்கைக்குப் பிறகு இந்தக் காரணத்தினால் பலியாகியுள்ளனர்” என்று
கூறப்பட்டது.
இதற்கு ரோத்கி, “பணம் இல்லாததால் 91 பேர் இறக்கவில்லை” என்றார்.
வழக்கறிஞர் சிதம்பரம் மேலும் கூறுகையில், “ரூ.2000
நோட்டுத்தான் ஒரே பணமாக உள்ளது. பணமதிப்பு நீக்கம் பெற்ற ரூ.500, 1000
நோட்டுகள் ரூ.12 லட்சம் கோடி வரை வங்கிகளுக்கு திரும்பி வந்துள்ளது, ஆனால்
புதிய நோட்டுகளோ ரூ.3 லட்சம் கோடி வரைதான் புழகத்திற்கு விடப்பட்டுள்ளது.
எனவேதான் பணம் எடுப்பதற்கு ரேஷன் கொண்டு வர மத்திய அரசு
நிர்பந்திக்கப்பட்டுள்ளது. ஆர்பிஐக்கு சொந்தமான பணம் அச்சடிக்கும் இடம் 2,
அரசுக்குச் சொந்தமான நோட்டு அச்சகங்கள் இரண்டு, இதில் மாதமொன்றிற்கு ரூ.3
கோடியே அடிக்கும் திறனே உள்ளது, எனவே நோட்டுக்கு நோட்டு பதிலி அடைவதற்கு 6
மாதங்கள் ஆகும் என்கிறார்.
மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறும்போது, “தினக்கூலி
வாங்குபவர்களிடம் கறுப்புப் பணம் இல்லை. இவர்கள் எப்படி பிழைப்பு
நடத்துவார்கள்? கோர்ட் இந்த விவகாரத்தை உடனடியாக கவனிக்க வேண்டும்.
வங்கிகள் தங்களிடம் பணம் இல்லை என்கின்றனர். சட்டபூர்வமான பணத்தை
சட்டபூர்வமாக வங்கியிலிருந்து எடுக்க அரசு எப்படி கட்டுப்பாடுகளை விதிக்க
முடியும்? இது உண்மையில் நம்பிக்கை துரோகமே.
“பணம் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். எனவே பணம்
எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது” என்றார் இதற்கு பதிலாக
ரோத்கி. இதற்குப் பதில் கொடுத்த கபில் சிபல், “அப்போது, அரசின் செயல்பாடு
நியாயப்படுத்த முடியாததே” என்றார்.
இந்த நிலையில் குறுக்கிட்ட தலைமை நீதிபதி தாக்கூர்,
ரோத்கியிடம், “எவ்வளவு பணம் வங்கிகளுக்குள் வரும், எவ்வளவு நோட்டுகள்
அச்சடிக்கத் தேவை உள்ளது என்பது குறித்து அரசிடம் திட்டம் இருந்ததா,
இருக்கிறதா? திட்டம் இருக்கிறதா அல்லது உந்துதலில் செய்யப்பட்ட நடவடிக்கையா
இது?” என்றார்.
இதற்கு ரோத்கி “ஆம் திட்டமிருக்கிறது. ரூ.10 முதல் 11 லட்சம் கோடி வரை வங்கிகளுக்குள் வரும் என்று எதிர்பார்த்தோம்” என்றார்.
வாதம் கூட்டுறவு வங்கிகள் பற்றி திரும்பிய போது, ரோத்கி
கூறியதாவது, “கூட்டுறவு வங்கிகளைப் பொறுத்தவரை அரசு தளர்த்த விரும்பவில்லை.
சந்தேகத்திற்கிடமான நிர்வாகங்கள் நடத்தும் சங்கங்கள் இந்த வங்கிகளில்
கணக்கு வைத்துள்ளன” என்றார்.
இதற்கு குறுக்கிட்ட நீதிபதி தாக்கூர், “ஒன்றை முழுதும்
நிறுத்துவது ஒரு விஷயம், புத்தி சாதுரியத்துடன் கட்டுப்படுத்தும் விஷயம்
வேறொன்று. உங்களிடம், நாங்கள் நம்பும் வரையில் இந்த நிலைமைகளை சமாளிக்க
அதிகாரிகள் இருக்கவே செய்கிறார்கள் என்று கருதுகிறோம். பணமதிப்பு நீக்கம்
என்ற மிகப்பெரிய விஷயத்தைச் செய்த நீங்கள் இந்த சிறிய விஷயங்களை
கவனிக்கலாம்” என்றார் ரோத்கியிடம்.
வழக்கறிஞர் சிதம்பரம் கூறும்போது, “கூட்டுறவு வங்கிகள்தான்
கூட்டுறவுத்துறையின் முக்கிய அங்கமாகும். இதில் 97% தனி நபர் மற்றும் குழு
கணக்குகளுக்கு கே.ஒய்.சி. உள்ளது” என்றார். கபில் சிபல் கூறும்போது,
“கேரளாவில் உள்ள கூட்டுறவு வங்கிகளி மட்டும் 60 லட்சம் வாடிக்கையாளர்கள்
உள்ளனர். இங்கு டெபாசிட்களும் செய்யக் கூடாது, பணம் எடுக்கவும் கூடாது
என்றால் ஒட்டுமொத்த வங்கி நடைமுறைகளுமே சரிவடையும்” என்றார்.
இதனையடுத்து அரசு சிந்திக்கும் டிஜிட்டல் நடவடிக்கை முழுதும்
நிறைவேற காலமாகும் என்ற நிலையில் பணத்தட்டுப்பாடு சூழலை விரைவில்
தீர்க்குமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியதோடு, பணமதிப்பு
நீக்க நடவடிக்கையினால் கூட்டுறவு வங்கிகள் அமைப்பு நொறுங்காமல்
காப்பாற்றாவும் அறிவுறுத்தி வழக்கை டிசம்பர் 14-ம் தேதிக்கு தள்ளி வைத்தது.
‘15 நாட்களுக்குள் அனைத்துப் பிரச்சினையும் தீர்க்கப்படும்’
மத்திய அரசு சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், ‘‘பண மதிப்பு
நீக்க நடவடிக்கைக்கு பின், அரசு வெறுமனே அமர்ந்து நிலைமையை வேடிக்கை
பார்க்கவில்லை. உரிய நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. 10 அல்லது 15
நாட்களுக்குள் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு விடும். பிரதமர்
மோடிக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடனேயே நீதிமன்றங்களில் இவ்வழக்குகள்
தொடரப்பட்டுள்ளன. 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கும் முடிவு
மிக ரகசியமாக மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக முன்கூட்டியே நோட்டுகள்
அச்சடித்து வைக்கப்படவில்லை. புதிய நோட்டுகள் அனைவருக்கும் கிடைக்க
வேண்டும் என்பதற்காகவே பணம் பெறுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன’’ என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...