ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டதை எதிர்த்த வழக்கு: மத்திய அரசுக்கு
சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி “வாடிக்கையாளர்களால் வங்கிகளில் வாரம்
ரூ.24 ஆயிரம் எடுக்க முடியாதது ஏன்.
பழைய ரூபாய் நோட்டு திரும்ப பெற்றது தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு சரமாரியாக கேள்விகளை சுப்ரீம் கோர்ட்டு எழுப்பி உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
கடந்த மாதம் 8-ந்தேதி பிரதமர் மோடி ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டு, மாநில ஐகோர்ட்டுகளில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
பல்வேறு மாநிலங்களின் 14 கூட்டுறவு வங்கிகள் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் கன்வில்கர், சந்திரசூட் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் கிராமப்புற மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை தீர்க்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அனுமதிக்கவேண்டும்
அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் வாதிடுகையில், “மத்திய அரசு இதுவரை ரூ.12 கோடி லட்சம் மதிப்பிலான பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை திரும்ப பெற்று இருக்கிறது. ஆனால் ரூ.3 லட்சம் கோடி அளவிற்குத்தான் புதிய நோட்டுகளை வெளியிட்டு உள்ளது. மேலும் பணத்தை எடுப்பதற்கு கடுமையான நிபந்தனைகளும் விதிக்கப்பட்டு உள்ளன. முழுமையாக புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விடுவதற்கும் இயல்பு நிலை திரும்புவதற்கும் குறைந்த பட்சம் 5 மாதங்களாவது ஆகும். எனவே வங்கிகளில் பணத்தை எடுப்பதற்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை தளர்த்தி கூடுதல் பணம் எடுக்க அனுமதிக்கவேண்டும்” என்று வற்புறுத்தினார்.வக்கீல் பிரசாந்த் பூஷன், “ரூபாய் நோட்டு திரும்பப் பெறப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினைகள் தீரவில்லை. ஏ.டி.எம்.களில் பணம் இல்லை. மறுசீரமைப்பு பணிகளை சரியாக செய்யவில்லை. கூட்டுறவு வங்கிகள் முடங்கிப் போய் உள்ளன” என்றார்.
15 நாட்களில் தீர்க்கப்படும்
அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி, “மக்களுக்கு ஏற்பட்டு உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அடுத்த 10-15 நாட்களில் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும். வங்கியில் பணம் எடுக்க உள்ள உச்சவரம்பு உள்ளது போல் குறைந்த அளவு உச்சவரம்பு பணம் தொடர்பாக கோர்ட்டின் கருத்தை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வேன்” என்று தெரிவித்தார்.
மேலும் பல்வேறு மாநில ஐகோர்ட்டுகளில் நடந்து வரும் ரூபாய் நோட்டு விவகாரம் குறித்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதுபற்றி அடுத்த கட்ட விசாரணையின்போது முடிவு செய்யலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு நீதிபதிகள் 9 கேள்விகளை எழுப்பினர்.
நிர்ணயித்தது எப்படி?
1. ரூபாய் நோட்டு தொடர்பான கொள்கை முடிவு எப்போது எடுக்கப்பட்டது?
2. இந்த திட்டம் அறிவிக்கப்பட்டபோது அது ரகசியமாக வைக்கப்பட்டு இருந்ததா?
3. ரூபாய் நோட்டு விவகாரத்தில் ரகசியம் காக்கவேண்டிய அவசியம் ஏன்?
4. ஒரு நபர் வாரந்தோறும் அதிகபட்சமாக ரூ.24 ஆயிரம் மட்டுமே எடுக்கலாம் என எப்படி நிர்ணயம் செய்யப்பட்டது?
5. அந்த தொகையையும் கூட வங்கிகளால் வழங்கமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது ஏன்?...
6. குறைந்த அளவு தொகையாக எவ்வளவு எடுக்கலாம் என்பது ஏன் நிர்ணயம் செய்யப்படவில்லை?
7. கூட்டுறவு வங்கிகள் ஏன் பழைய நோட்டுகளை டெபாசிட் செய்ய அனுமதிக்கவில்லை?
8. ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்ற நடவடிக்கையால் கூட்டுறவு வங்கிகள் முடங்கி இருப்பது பற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்கவேண்டும்.
9. இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு ஏன் மாற்றக் கூடாது?...
இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ஒத்தி வைப்பு
பின்னர் வழக்கு விசாரணையை வருகிற 14-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர். 5 நீதிபதிகள் பற்றி அமர்வுக்கு மாற்றுவது குறித்து வருகிற புதன்கிழமை முடிவு செய்யப்படும் என்றும் அப்போது குறிப்பிட்டனர்.
முன்னதாக இந்த வழக்கின் மீதான விசாரணை தொடங்கியபோது மனுதாரர்களின் வக்கீல்கள் சத்தம் போட்டுக் கொண்டே இருந்தனர். இதனால் அதிருப்தி அடைந்த தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், “இது மீன் கடை அல்ல. சுப்ரீம் கோர்ட்டு என்று கண்ணியம் உண்டு. அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள்” என்று எச்சரித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...