தஞ்சாவூர்: லண்டனில் படிக்கும், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த, 14 வயது
மாணவி, கும்பகோணம் அரசு பள்ளி மாணவர்களுக்கு சுத்தம் பற்றிய விழிப்புணர்வை
ஏற்படுத்தினார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்த யசோதன் - உமா மகேஷ்வரி
தம்பதியின் மகள் சுருதி, 14. இவரது தாய், பிரிட்டனில் டாக்டராக பணியாற்றி
வருகிறார்.லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பள்ளியில், சுருதி, ஒன்பதாம் வகுப்பு
படித்து வருகிறார். இவர் பிறந்தது ஜெர்மனியில் என்பதால், ஜெர்மன் தவிர,
ஆங்கிலம், தமிழிலும் பேசுகிறார்.
சுருதி, 6 வயது முதல், சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். முதல் முறையாக,
லண்டனில் உள்ள பாலத்திற்கு வண்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டு, அதன் மூலம்
கிடைத்த வருமானத்தை, சமூக சேவைக்காக பயன்படுத்தினார். மேலும், தான்
உருவாக்கிய, செயற்கை நகைகளை விற்பனை செய்து, இந்திய மதிப்பின்படி, 60
ஆயிரம் ரூபாயை, லண்டனில் உள்ள கேன்சர் சென்டருக்கு நன்கொடையாக வழங்கி
உள்ளார். பொது சேவைக்கான, ஏழு சான்றிதழ்கள் பெற்றுள்ளார்.
இவர், கும்பகோணம் அரசு துவக்க பள்ளி மாணவர்களிடையே, சுத்தம் பற்றிய
விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.இது குறித்து, சுருதி கூறியதாவது: கடந்த முறை
இந்தியா வந்த போது, சாலையில் பள்ளி பிள்ளைகள், மிகவும் அழுக்காக சென்றதை
பார்த்து, மிகவும் வேதனை ஏற்பட்டது. இந்த குழந்தைகள் மத்தியில், சுத்தம்
பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என, பெற்றோரிடம் தெரிவித்தேன்.
இதன்படி, என் அம்மாவின் ஊரான கும்பகோணத்தில், நகராட்சி காமராஜ் துவக்க
பள்ளி மாணவர்கள் மத்தியில், சுத்தமாக தங்கள் உடலை வைத்து கொள்வது குறித்து,
விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். தினமும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதை
ஊக்கப்படுத்தும் விதமாக, பிரஷ், சோப், நகம் வெட்டும் கருவி உள்ளிட்டவை,
அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற சமூக சேவையை, முறையாக, பெரிதாக
செய்ய வேண்டும் என்பது தான் என் ஆசை.இவ்வாறு, அவர் கூறினார்.
நிகழ்ச்சிக்கு, கும்பகோணத்தைச் சேர்ந்த, 'தோழமை' அமைப்பு நிறுவனர் டாக்டர்
ராமசாமி, 'போர்ட் அனிமேஷன்' மற்றும், 'யாவரும் கேளிர்' தொண்டு நிறுவனங்கள்
ஏற்பாடு செய்திருந்தன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...