பத்தாம் வகுப்பு பொது தேர்வில், தமிழ் வழி கல்வி பயிலாத மாணவர்களுக்கு,
தமிழ் மொழி பாடம் எழுத, மூன்று ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்க
பரிசீலிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை, படிப்படியாக தமிழ் மொழி பாடத்தை
கட்டாயமாக்கி, 2006ல், தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, 2016ல், பத்தாம்
வகுப்பு பொது தேர்வின் போது, தமிழ் மொழி பாடமும் கண்டிப்பாக எழுத வேண்டிய
நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மொழி சிறுபான்மை பள்ளிகளில் படித்த மாணவர்கள்,
பத்தாம் வகுப்பு பொது தேர்வில், தமிழ் மொழி பாடம் எழுத விலக்கு அளிக்க
கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் தாக்கல் செய்தனர்.
மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், விலக்கு அளிக்கும்படி இடைக்கால
உத்தரவிட்டது. இவ்வழக்கு, தலைமை நீதிபதி, எஸ்.கே.கவுல், நீதிபதி சுந்தர்
அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. மொழி
சிறுபான்மை பள்ளிகள் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், எம்.ரவீந்திரன்,
'பள்ளிகளில், தமிழ் ஆசிரியர்கள், இன்னும் முழுமையாக நியமிக்கப்படவில்லை;
அப்புறம் எப்படி மாணவர்களால், தமிழ் மொழி பாடத்தில் தேர்வு எழுத முடியும்'
என்றார்.
வழக்கை விசாரித்த, முதல் பெஞ்ச், பிறப்பித்த உத்தரவு: தமிழ் மொழி பாடத்தை
படிக்க வாய்ப்பில்லாத மாணவர்களுக்கு, மூன்று ஆண்டுகள் வரையாவது, பத்தாம்
வகுப்பு பொது தேர்வில், தமிழ் மொழி பாடம் எழுத விலக்கு அளிக்க, பரிசீலிக்க
வேண்டும்; அது தொடர்பாக, அரசுக்கு ஆலோசனை கூறுவதாக, அட்வகேட் ஜெனரல் உறுதி
அளித்துள்ளார். விசாரணை, ஜன., 3க்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு முதல்
பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...