வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் மக்களின் கூட்டத்தை
குறைப்பதற்கு குறைந்தது ரூ.10 லட்சம் கோடி புதிய ரூபாய் நோட்டுகள்
புழக்கத்துக்கு வந்தால்தான் நிலைமை சரியாகும் என்றும், அதிகளவிலான ரூ.500
நோட்டுகள் விநியாகிக்கப்பட வேண்டும் எனவும் எஸ்.பி.ஐ. வங்கியின் நிர்வாக
இயக்குநர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ஆம் தேதி நள்ளிரவு முதல்
புழக்கத்தில் இருந்த பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று
அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்த மதிப்பிழந்த இந்த நோட்டுகள் வங்கிகளில்
செலுத்தப்பட்டு வருகின்றன. மறுபுறம் புதிய ரூ.500 மற்றும் ரூ.2000
நோட்டுகள் வங்கிகளால் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. வங்கிகளிலும்
ஏ.டி.எம். மையங்களிலும் மக்கள் கூட்டம் இன்னும் குறையவில்லை. இதுகுறித்து
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப்
இந்தியாவின் (எஸ்.பி.ஐ) நிர்வாக இயக்குநர் ராஜ்னிஷ் குமார் கூறுகையில்,
“தற்போதைய நிலையில் மக்களின் பணத் தட்டுப்பாடைக் குறைக்க, குறைந்தது ரூ.10
லட்சம் கோடி மதிப்பிலான புதிய நோட்டுகள் புழக்கத்துக்கு வர வேண்டும். இதில்
பெரும்பாலான நோட்டுகள் ரூ.500 நோட்டுகளாக இருக்க வேண்டும். ஏனெனில் 2000
ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு பல்வேறு சிரமங்கள் மக்களுக்கு ஏற்படுகிறது.
மக்களின் சிரமங்களைப் போக்கும் வகையில் எங்களது எஸ்.பி.ஐ. வங்கியின் 49,000
ஏடி.எம்-களில் சுமார் 43,000 ஏ.டி.எம்-களை புதிய நோட்டுகள் வழங்குமாறு
மாற்றியமைத்துள்ளோம். எங்களது ஏ.டி.எம்-களில் தினசரி சராசரியாக ரூ.17,000
கோடி முதல் ரூ.19,000 கோடி வரையில் எடுக்கப்படுகின்றன” என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...