தூத்துக்குடியில்
பள்ளி மாணவர்களிடையே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோதலில், பிளஸ் 1 மாணவர்கள்
இருவர் கத்தியால் குத்தப்பட்டனர்.
தூத்துக்குடி அருகேயுள்ள கோவங்காடு கிராமத்திலிருந்து தூத்துக்குடி நகருக்குள் செல்லும் அரசு நகரப் பேருந்தில் முள்ளக்காடு, முத்தையாபுரம், ராஜீவ் நகர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மாணவர், மாணவிகள் பள்ளிக்குச் செல்வது வழக்கம்.
வெள்ளிக்கிழமை வழக்கம்போல, தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளிகளில் பயிலும் 40-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் அந்தப் பேருந்தில் சென்றனர்.
முத்தையாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது பேருந்துக்குள் இருந்த இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில், தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வரும் கோவங்காடு பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ் மகன் பொன் திவாகர் (17), பாலகிருஷ்ணன் மகன் அரவிந்த்ராஜ் (17) ஆகியோர் கத்தியால் குத்தப்பட்டனர். இருவரையும் பேருந்தில் இருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக முத்தையாபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து, மாணவர்களை கத்தியால் குத்தியதாக அதே பேருந்தில் பயணம் செய்த, முள்ளக்காடு ராஜீவ் நகர் பகுதியைச் சேர்ந்த 4 மாணவர்களைக் கைது செய்தனர். இவர்கள் 4 பேரும் தனியார் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.
பேருந்தில் மோதிக்கொண்ட மாணவர்கள் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் கோவங்காடு, முள்ளக்காடு பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...