தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் (டிஎன்பிஎஸ்சி) தொகுதி 4ல்
(குரூப்-4) அடங்கிய 5 ஆயிரத்து 451 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நாளை
மாநிலம் முழுவதும் உள்ள 301 தாலுகா மையங்களில் நடக்கிறது.
இத்தேர்விற்காக விண்ணப்பித்துள்ள 15 லட்சத்திற்கும்
கூடுதலான தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவு சீட்டு
தேர்வாணைய இணையதளமான www.tnpscல் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள
ஏதுவாக வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தேர்வர்கள்
தங்களின் விண்ணப்ப எண், பயனாளர் குறியீடு மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை
இணையதள பக்கத்தில் உள்ளீடு செய்து, பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால் அதற்கான
காரணத்தையும் அதே இணையதள பக்கத்தில் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள்
தங்களது கணினியில் பதிவிறக்கம் செய்யும் முன் பாப் அப் ப்ளாக் நிலையை
உபயோகப்படுத்தும்பட்சத்தில் அந்நிலையை மாற்றி தேர்வுக்கூட
நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்பதாரர்கள் தங்களது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை கண்டிப்பாக உடன்
எடுத்துவரவேண்டும். தேர்வுக்கூடத்திற்குள் நுழையும் போதும், அறை
கண்காணிப்பாளர் கேட்கும்போதும் காண்பிக்கவேண்டும்.
தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுடன் வரும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே தேர்வுக்கூட
வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர். உடன் வரும் பெற்றோர் உள்ளிட்ட
மற்றவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது. அகவி, செல்லிடத் தொலைபேசி,
கால்குலேட்டர் உள்ளிட்ட எந்தவித மின்னணு சாதனங்களையும் விண்ணப்பதாரர்
தேர்வுக்கூடத்திற்குள் எடுத்து வரவோ, வைத்திருக்கவோ கண்டிப்பாக அனுமதி
கிடையாது.
மீறி தேர்வுக்கூடத்தினுள் எந்த தேர்வரேனும் வைத்திருப்பது தெரியவரும்
பட்சத்தில் கடுமையான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். தேர்வு மையத்தை
மாற்றவோ, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் அச்சிடப்பட்டுள்ள விருப்பப் பாடத்தை
மாற்றி எழுதவோ கண்டிப்பாக அனுமதியில்லை. விண்ணப்பதாரர்களுக்கான தேர்வாணைய
அறிவுரைகளை தேர்விற்கு வரும் முன் கவனமாகப் படித்துவிட்டு வரும்படி
அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வாணைய அறிவுரைகளை மீறும் விண்ணப்பதாரர்கள்
மீது தேர்வாணைய அறிவுரைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என
எச்சரிக்கப்படுகிறார்கள் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின்
தேர்வுக் கட்டுப்பாடு அலுவலர் ஷோபனா வெளியிட்டுள்ள அறிவிப்பில்
தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...