மாணவர்கள்
கணினி அறிவைப் பெறும் வகையில், மடிக்கணினியை வழங்கிய தமிழக அரசு, கணினி
வழிக் கல்வியைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல்
இருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்புகின்றனர் பி.எட். முடித்து
வேலையில்லாமல் இருக்கும் கணினி அறிவியல் பட்டதாரிகள்.
அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், 2011-ஆம் ஆண்டில் தமிழகத்தில் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட போது, கணினி அறிவியல் பாடமும் அமல்படுத்தப்பட்டது.
6 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு கணினி அறிவியல் பாடப் புத்தகங்களும் வழங்கப்பட்டு படிப்பு கற்றுத் தரப்பட்ட நிலையில், அதற்கு அடுத்தாண்டில் பாடப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. ஆசிரியர்களும் நியமிக்கப்படவில்லை. சமச்சீர் கல்வி முறையில் வழங்கப்பட்ட பாடப் புத்தகங்களும் திரும்பப் பெறப்பட்டன.
பெற்றோர்- ஆசிரியர் கழகம் மூலம்... மாணவ, மாணவிகளுக்கு கணினி அறிவியல் பாடப் பிரிவைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற நோக்கில், அந்தந்தப் பள்ளிகளின் பெற்றோர்- ஆசிரியர் கழகங்கள் மூலம் நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களைக் கொண்டு வகுப்புகளை பல பள்ளிகள் நடத்தி வருகின்றன.
கடந்த 2005-ஆம் ஆண்டில் மாதம் ரூ. 4000 ஊதியத்தில் பகுதி நேரமாக நியமிக்கப்பட்ட 682 கணினி ஆசிரியர்களுக்குப் பிறகு நியமனம் கிடையாது. ஏற்கெனவே குறைந்த ஊதியத்தில் பணியில் நியமிக்கப்பட்டவர்கள் பல பள்ளிகளுக்கும் சென்று பணியாற்ற வேண்டிய நிலைதான் உள்ளது.
தொடர்ந்து நீதிமன்ற வழக்கு, பணி நியமனத்தில் இடஒதுக்கீடு முறை சரியாகப் பின்பற்றப்படவில்லை போன்ற காரணங்களால் பாதிப்புக்குள்ளாகினர் பி.எட். முடித்த கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள்.
வாழ்வாதாரமே இல்லை: ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது கணினி அறிவியலில் பி.எட். படிப்பு. மற்றப் பாடங்களைத் தேர்வு செய்து படித்தவர்கள் எல்லாம் ஆசிரியர் தகுதித் தேர்வு, டிஆர்பி தேர்வுகளில் பங்கேற்க முடியும். ஆனால், கணினி அறிவியலில் பி.எட். படித்தவர்களுக்கு அந்த வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது.
மாநிலம் முழுவதும் சுமார் 39,019 பேர் பி.எட். கணினி அறிவியல் படிப்பை முடித்து தற்போது வரை வேலையில்லாமல் உள்ளனர். இதுபோல, எம்.எஸ்ஸி. பி.எட். முடித்தவர்கள்எண்ணிக்கை 20,000-த்துக்கு மேல் உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக இந்த நிலையே உள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கி, அவர்களின் அறிவை மேம்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தமிழக அரசு, பள்ளிகளில் கணினிப் படிப்புகளுக்கான ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்கிறார் தமிழ்நாடு கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில துணை அமைப்பாளர் ஏ. முத்துவடிவேல்.
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கணினிக் கல்வி இல்லை: 2006-ஆம் ஆண்டுக்குப் பின்னர் தரம் உயர்த்தப்பட்ட அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமனம் இல்லை. ஏன், கடந்தாண்டுகூட 407 பள்ளிகள் மாநிலம் முழுவதும் தரம் உயர்த்தப்பட்டதாகக் கூறினாலும், ஒரு பள்ளியில்கூட கணினிக் கல்வியைக் கற்பிக்க ஆசிரியர் பணியிடம் இல்லை.
பி.எட். படிப்பில் கணினி அறிவியல் படிப்பை முடித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, ஜவுளி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலை பார்க்க வேண்டிய நிலை இருக்கிறது. பி.எட். முடித்து வேலையில்லாமல் இருக்கும் 39,019 பேரில் ஏறத்தாழ 27,000 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது என்றார் இந்தச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் குமரேசன்.
"மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம், சென்னையில் போராட்டம் எனப் பல்வேறு நிலைகளில் எங்களது கோரிக்கைகளை முன்னெடுத்துச் சென்றாலும் இதுவரையில் தீர்வு எட்டப்படவில்லை. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கூடுதலாக ஆசிரியர்கள் இருப்பதாகக் கூறி, அதுகுறித்த கண்கெடுப்பை அரசு மேற்கொள்கிறது. இந்த நிலையில், பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் இருந்தும், அதற்கான இடங்களில் ஆசிரியர்களை நியமிக்காமல் இருப்பது புதிராகத்தான் இருக்கிறது. பள்ளிக்கு ஓர் ஆசிரியரை நியமித்திருந்தால்கூட பாதிப் பேர் வேலை பெற்றிருப்பார்கள்' என்கின்றனர் வேலையில்லா கணினி அறிவியல் பி.எட். பட்டதாரி ஆசிரியர்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...