நம் நாட்டில், பெரும்பாலானோர், அவசர தேவைக்கென கொஞ்சம் ரொக்க பணத்தை
வீட்டில் வைத்திருப்பது வாடிக்கை தான்.
இப்போது, அந்த பணத்தை என்ன செய்வது?
இந்த ஒரு மாதம், காய்கறி, பால், பூ, மளிகை பொருட்கள் போன்ற அன்றாட ரொக்கம்
சார்ந்த செலவுகளை எப்படி சமாளிப்பது? வருங்காலத்தில் என்ன
எதிர்பார்க்கலாம்? வழிகாட்டுகிறது மத்திய ரிசர்வ் வங்கி.
உங்கள் கையில் சேமிப்பு, வருமானம் என, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமாக உள்ளது என, வைத்துக்கொள்வோம்.
டிசம்பர், 30ம் தேதிக்குள், பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை
கொடுத்துவிட்டு புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளை பெறலாம்.உங்கள்
ஒரு லட்சத்தில், 4,000 ரூபாய் மதிப்பிலான ரொக்கத்தை மட்டும் வங்கி தரும்.
மீதமுள்ள 96 ஆயிரம் ரூபாயை உங்கள் கணக்கில் சேர்த்துவிடும்.
இப்படி பெறக்கூடிய அதிகபட்ச தொகை வாரத்திற்கு, 20 ஆயிரம் ரூபாய் என,
நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நவம்பர், 24 வரை இந்த கட்டுப்பாடு அமலில்
இருக்கும். அதற்குபின், புதிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம்.
வங்கியில் பணத்தை கொடுப்பதற்கு...
* நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் எந்த கிளையிலும் சென்று பணத்தை கொடுக்கலாம்
* வேறு வங்கிகளின் கிளைகளிலும் கொடுக்கலாம். அப்படி கொடுக்கும் போது,
உங்கள் வங்கி கணக்கின் முழு விபரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
முக்கியமாக உங்கள் வங்கி கணக்கு உள்ள கிளையின் ஐ.எப்.எஸ்.சி., எண்ணை
கொடுக்க வேண்டும். அப்போது தான், சம்பந்தப்பட்ட வங்கியால் உங்கள்
கணக்கிற்கு பணத்தை மாற்றிவிட முடியும்
* ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட்,
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அடையாள அட்டை, பான் கார்டு, அரசு துறைகள்
அல்லது நிறுவனங்கள் கொடுத்துள்ள அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின்
நகலை சமர்ப்பிக்க வேண்டும்.
வங்கியில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுக்கலாம். உங்கள் கணக்கில் வரவு
வைக்கப்படும். வருமான வரி துறை மற்றதை பார்த்துக்கொள்ளும்!உங்கள் கணக்கில்,
96 ஆயிரம் ரூபாய் சேர்ந்த பின், நீங்கள், வங்கியில் காசோலை (செக்) அல்லது
பணமெடுப்பு வரைத்தாள் (வித்ட்ராவல் ஸ்லிப்) கொடுத்து நாள் ஒன்றுக்கு
அதிகபட்சம், 10 ஆயிரம் ரூபாயை பெறலாம்.
வங்கியை தவிர வேறு எங்கெல்லாம் மாற்றிக்கொள்ளலாம்?
* மத்திய ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்கள்
* தலைமை அஞ்சல் அலுவலகம்
* கிளை அஞ்சல் அலுவலகங்கள்
உங்கள் வங்கி கணக்கில், 96 ஆயிரம் ரூபாய் சேர்ந்த பின், இன்று முதல், இந்த
மாதம், 19ம் தேதி வரை தினமும், 2,000ரூபாய் எடுத்துக்கொள்ளலாம்.19ம் தேதி
முதல் தினமும், 4,000ரூபாய் எடுத்துக் கொள்ளலாம்.
கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, காசோலை, வரைவோலை, இணையம் மூலம் பண
பரிவர்த்தனைக்கு எந்த விதமான தொகை உச்சவரம்பும் கிடையாது. வழக்கம் போல
நடத்திக்கொள்ளலாம்.
என்னால் இப்போது வங்கிக்கு போக முடியாது...என்ற நிலையில் நீங்கள்
உள்ளீர்கள் என்றால், வேறு ஒருவருக்கு, வங்கியில் உங்கள் பணத்தை செலுத்த
அதிகாரம் கொடுத்து ஒரு கடிதத்தை, அடையாள அட்டை அசல் மற்றும் நகல், வங்கி
கணக்கு விபரங்களோடு சேர்த்து கொடுக்க வேண்டும்.
அதையும் செய்ய முடியவில்லையே, நான் டிசம்பர், 30வரை வெளிநாட்டில் இருப்பேன்...
என்றால், மத்திய ரிசர்வ் வங்கியின், 19 அலுவலகங்களில் ஏதேனும் ஒன்றிற்கு
சென்று, அவர்கள் குறிப்பிடும் ஆவணங்களை கொடுத்தால், பணத்தை
மாற்றிக்கொள்ளலாம். அதிலும், தற்போது, வங்கிகளில் மாற்றிக்கொள்வது போல,
எவ்வளவு ரொக்க தொகை பெற முடியும் என்பதற்கு உச்ச வரம்பு இருக்கும்.
நான் வெளிநாட்டில் வாழும் இந்தியன், இங்கு என்.ஆர்.ஓ., கணக்கு
வைத்துள்ளேன்... சாதாரணமாக மற்றவர்கள் வங்கியில் மாற்றிக்கொள்வதை போல
மாற்றிக்கொள்ளலாம்.
11ம் தேதி இரவு, 12:00மணி வரை, மருத்துவ சேவைகள்,அரசு பேருந்து
சேவைகள்,ரயில்வே சேவைகள்,விமான சேவைகள்ஆகியவற்றுக்கு பழைய, 500மற்றும்
1,000ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...