'பிளே ஸ்கூல்' என்ற மழலை பள்ளிகள், அங்கீகாரம் பெற விண்ணப்பிப்பதற்கான
காலக்கெடு, நேற்றுடன் முடிந்தது. விண்ணப்பிக்காத பள்ளிகளில், 'ரெய்டு'
நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில், அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு,
கல்வித் துறை அங்கீகாரம் வழங்குகிறது. அரசு பள்ளிகளுக்கான உள்கட்டமைப்பு
வசதிகள் மற்றும் அங்கீகார நடவடிக்கைகளை, கல்வித் துறை கவனித்து கொள்ளும்.
அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள், அங்கீகாரம் பெற
ஆண்டுதோறும் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழகத்தில், அங்கீகாரம் பெறாமல், 6,000க்கும் மேலான, மழலையர் பள்ளிகள்
செயல்படுகின்றன. 'இந்த பள்ளிகளில், உள்கட்டமைப்பு மற்றும் குழந்தைகளுக்கு
பாதுகாப்பான வசதிகள் இல்லை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு
தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'தமிழக பள்ளிக்கல்வித் துறை
இதற்கான விதிகளை உருவாக்கி, அங்கீகாரம் வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டது.
அதையேற்று, பிளே ஸ்கூல்களுக்கான விதிகளை உருவாக்கி, தமிழக பள்ளிக்கல்வித்
துறை அரசாணை வெளியிட்டது. அதன்படி, 'பிளே ஸ்கூல்கள் அங்கீகாரம் கேட்டு,
அக்., 31க்குள் விண்ணப்பிக்கலாம்' என, தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டது;
காலக்கெடு, நேற்றுடன் முடிந்தது. இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்கள்
பரிசீலிக்கப்பட்டு, மாவட்ட அதிகாரிகள் மூலம், அங்கீகாரம் வழங்கப்படும்.
அங்கீகாரம் கேட்டு விண்ணப்பிக்காத பள்ளிகளில், ரெய்டு நடத்த, மாவட்ட கல்வி
அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...