வகுப்பறையில் நின்று கொண்டு, பாடம் நடத்த வேண்டுமென்பதால்,
ஆசிரியர்களுக்கான நாற்காலியை, அகற்ற வேண்டும் என்ற, கல்வித்துறை
உத்தரவுக்கு, எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், வகுப்பு நேரத்தில், ஆசிரியர்கள் மொபைல் போன்
பயன்படுத்திய விவகாரம், பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு பின், அனைத்து
மாவட்டங்களிலும், கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
வகுப்பு நேரத்தில், போனில் அரட்டை அடித்தல், சமூக வலைதளங்களில் கருத்துகளை
பரிமாறும் ஆசிரியர்களுக்கு, எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பள்ளி
வளாகத்திற்குள், மொபைல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
இதோடு, ஆசிரியர்களுக்கான சில விதிகளை, கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதை,
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வாயிலாக, பள்ளிகளில் நடைமுறைப்படுத்த
உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், அனைத்து அரசு, அரசு உதவி பெறும்
பள்ளிகளுக்கு, கல்வித்துறையின் உத்தரவு சுற்றறிக்கை வாயிலாக
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதில், பள்ளி வளாகத்திற்குள் மொபைல்போன் எடுத்துவரும் பட்சத்தில்,
தலைமையாசிரியர் வசம் ஒப்படைக்க வேண்டும். பள்ளி நேரத்தில், வகுப்பை
புறக்கணித்து, வெளியில் செல்லக்கூடாது என குறிப்பிட்டுள்ளது.
இதுதவிர, வகுப்பறையில் ஆசிரியர்கள் நின்று கொண்டு பாடம் நடத்த வேண்டும்
என்பதால், நாற்காலிகளை அகற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. இது,
ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், ’கற்பித்தல்
பணிகளில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, மொபைல்போன் பயன்படுத்த விதித்த தடை
உத்தரவு வரவேற்கத்தக்கது. ஆனால், வகுப்பறையில் ஆசிரியர்களுக்காக
ஒதுக்கப்படும் நாற்காலியை அகற்றுவது, ஏற்புடையதல்ல. ஒரு வகுப்பு, 45
நிமிடங்கள் நடக்கும்.
’இதில், 30 நிமிடங்கள், கற்பித்தல் பணிக்கும், 15 நிமிடங்கள், நடத்திய
பாடத்தில் வினாக்கள் கேட்டல், வாழ்வியல் கல்வி போதித்தலுக்கும்
ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நேரங்களில், ஆசிரியர்கள் உட்கார்ந்து,
மாணவர்களுடன் பேசுவதால், எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.
’உடல் நலக்குறைவு, மாதவிடாய் காலங்களில், பெண் ஆசிரியர்களால் நின்று
கொண்டே, பாடம் நடத்துவது இயலாது. எனவே, ஆசிரியர்கள் மீது திணிக்கப்படும்,
தேவையில்லாத உத்தரவுகளை, கல்வித்துறை மறு பரிசீலனை செய்ய வேண்டும்,’
என்றனர்.
உண்மையிலேயே, இது பரிசீலிக்கப்பட வேண்டிய உத்தரவு என்பதில், மாற்றுக்
கருத்தில்லை. வழக்கமாக, சரியாகப் படிக்காத அல்லது ஒழுங்கில்லாத மாணவர்களை
வகுப்பறையில் ஆசிரியர்கள் நிற்க வைப்பர்.
ஆனால், எப்போதுமே ஆசிரியர்கள் நின்று கொண்டு தான் பாடம் நடத்த வேண்டுமென்று
கூறுவது, ஆசிரியர்களுக்கே தண்டனை வழங்குவதாகவும், மனித நேயமற்ற செயலாகவும்
தெரிகிறது. கல்வித்துறை, கனிவோடு இதை அணுகுவதே நல்லது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...