திருப்பூர் : மாவட்டத்தில் உள்ள, 7.50 லட்சத்துக்கும் அதிகமான ரேஷன்
கார்டுகளில், 48 சதவீத கார்டுகள் மட்டும்,"ஸ்மார்ட் கார்டு'க்கான தகுதியை
பெற்றுள்ளன.
ரேஷன் பொருள் வாங்க முடியாது என்பதால், விடுபட்டவர்கள், 30ம்
தேதிக்குள் ஆதார் விவரங்களை பதிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 1,135 ரேஷன் கடைகளில், ஏழு லட்சத்து, 50
ஆயிரத்து, 270 ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. மொத்தம், 25
லட்சத்துக்கும் அதிகமானவர்கள், ரேஷன் கடைகள் வாயிலாக அத்தியாவசிய பொருட்களை
பெற்று வருகின்றனர்."ஸ்மார்ட் கார்டு' வழங்க இருப்பதால், பொது வினியோக
திட்டம் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட உள்ளது. அதன் முன்னோட்டமாக, கடைகளுக்கு
"பாயின்ட் ஆப் சேல்' என்ற விற்பனை கருவி வழங்கப்பட்டுள்ளது. ரேஷன் கடை
பதிவேடு விவரங்களும், கார்டுதாரர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரம் அதில்
பதிவு செய்யப்படுகிறது.மாவட்ட அளவில், 24.11 லட்சத்துக்கும் அதிகமான
பயனாளிகளின் ஆதார் விவரத்தை பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த
இரண்டரை மாதங்களாக, ஆதார் கார்டு "ஸ்கேன்' செய்யும் பணி நடந்து வருகிறது.
மாவட்ட அளவில், 71 சதவீதம் அளவுக்கு ஆதார் "ஸ்கேனிங்' நிறைவு
பெற்றுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், 85 சதவீதம் பேர் மொபைல் எண்களையும்,
71 சதவீதம் பேர் ஆதர் விவரங்களையும் பதிவு செய்துள்ளனர். குடும்பத்தில்
உள்ள, ஐந்து வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆதார் பதிவு செய்துள்ளதால்,
அவர்களது ஆதார் அட்டை விவரங்களை, ரேஷன் கடையில் வழங்க வேண்டும்.
மாவட்டத்தில் இதுவரை, 48 சதவீதம் கார்டுகளில் மட்டும், 100 சதவீத குடும்ப
உறுப்பினர்கள் ஆதார் பதிவுசெய்துள்ளனர். மொத்தம், 1.16 லட்சம் பேர், ஆதார்
பதிவு செய்யாமல் இருக்கின்றனர்.தமிழக அரசு வழங்கிய அவகாசம், வரும், 30ம்
தேதியுடன் நிறைவடைய இருப்பதால், "ஸ்மார்ட் கார்டு' பெற வேண்டுமெனில், ஆதார்
விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெரும்பாலான ரேஷன் கார்டுகளில், குடும்ப தலைவர் அல்லது இரு நபர்கள் மட்டும்
ஆதார் பதிவு செய்துள்ளனர்; மற்ற உறுப்பினர்களின் விவரம் பதிவு
செய்யப்படவில்லை. சில கார்டுகள், ஒருவர் கூட ஆதார் பதியாத நிலையும்
உள்ளது.கார்டில் உள்ள யாரும் ஆதார் விவரத்தை பதியாமல் இருந்தால், வரும்
30ம் தேதிக்கு பிறகு அந்த கார்டுகள் தள்ளுபடி செய்யப்படும். எனவே,
விடுபட்டவர்கள் விரைவில் ஆதார் விவரத்தை பதிவு செய்ய வேண்டும் என,
அறிவிக்கப்பட்டுள்ளது.குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள்
கூறுகையில்,"திருப்பூர் மாவட்டத்தில், ஆதார் பதிவு மந்தமாக இருந்தாலும்,
ரேஷன் கடைகளில் ஸ்கேன் செய்வது வேகப்படுத்தப்பட்டுள்ளது. மொத்த
பயனாளிகளில், 71 சதவீதம் பேர் பதிவு செய்துள்ளனர். மொத்த கார்டுகளில், 48
சதவீத உறுப்பினர்கள் முழுமையாக பதிவு செய்துள்ளனர். அந்த கார்டுகளுக்கு
மட்டும்,"ஸ்மார்ட் கார்டு' கிடைக்கும். மற்றவர்களுக்கு "ஸ்மார்ட் கார்டு'
கிடைக்க தாமதமாகும். மேலும், ரேஷன் கார்டுகளில் உள்ள நபர் ஆதார் பதியாமல்
இருந்தால், அவர்களுக்கான பொருட்களை வழங்க முடியாது. ஆதார் எண்
கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், இம்மாத இறுதிக்குள் ஆதார் விவரத்தை "ஸ்கேன்'
செய்ய வேண்டும். இல்லாதபட்சத்தில், கார்டுகள் ரத்தாகும் அபாயம் உள்ளது,'
என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...