மாதவிடாய்
நாள்களில் பள்ளி, கல்லூரி மாணவிகள் பயன்படுத்தும் "சானிடரி நாப்கின்'களை
முறைப்படி அகற்றுவதற்கான அமைப்புகளை அனைத்து கல்வி நிறுவனங்களிலும்
ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் சுமார் 40 லட்சம் ஊரகப் பகுதி மாணவிகளுக்கு மாதவிடாய்க் காலங்களில் பயன்படுத்தும் "சானிடரி நாப்கின்'களை இலவசமாக வழங்கும் திட்டத்தை கடந்த 2012-ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார். வேறெந்த மாநிலத்திலும் இலவசமில்லை என்பது குறிப்பிட்டத்தக்கது.
10- 19 வயது வரையிலான, கிராமப்புற பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தேசிய ஊரக சுகாதாரத் திட்டம் மூலம் சுகாதாரத் துறை இந்த நாப்கின்களை வழங்குகிறது.
கிராமப்புற சிறுமிகளுக்கு அவற்றைப் பயன்படுத்தும் முறை குறித்தும் விளக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததை அடுத்து, அதற்கான கையேடுகளும் அச்சிடப்பட்டு, விநியோகிக்கப்படுகின்றன.
ஆனால், பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை முறையாக அகற்றும் ஏற்பாடுகள் எதுவும் முழுமையாகச் செய்து தரப்படவில்லை.
சராசரியாக ரூ. 25 ஆயிரம் வரை மதிப்புள்ள நவீன எரிப்பான்களும், ரூ. 5 ஆயிரத்துக்குள் கட்டி முடிக்கத்தக்க- கழிப்பறையுடன் இணைக்கப்பட்ட எளிய முறையிலான கான்கிரீட் அமைப்புகளும் இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டன.
யுனிசெப் உதவியுடன் மாநிலம் முழுவதும் சில தொண்டு நிறுவனங்கள் இதற்கான முன்முயற்சியை எடுத்தாலும், ஒரு கட்டத்தில் எரிக்கும் செயல்பாடு மத்திய சுற்றுச்சூழல் துறையால் அனுமதிக்கப்படவில்லை என்பதால் முடங்கியது என்கிறார் இந்தப் பணியில் ஈடுபட்ட பேராசிரியை ஒருவர்.
இதனால், இவ்விரு முறைகளையும் முழுமையாக மாநிலம் முழுவதும் கொண்டு செல்ல முடியவில்லை என அவர் கூறுகிறார். பரிசோதனை முயற்சியாக- மாதிரி முயற்சியாக மேற்கொள்ளப்பட்டவைகூட முறையான பராமரிப்பின்றி வீணாகி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
செலவு குறைவான கட்டுமான முறைப்படியான எரிப்பான்கள், மழைக் காலத்தில் பயன்படுத்த முடியாத நிலையை உருவாக்கும் என்பதுடன், அரசுப் பள்ளிகளில் கழிப்பறைகளைச் சுத்தம் செய்யவே ஆள் இல்லாத நிலை இருக்கும் போது, நாப்கின்களை எரிக்கும் பணியை யார் தொடர்ந்து செய்வது என்ற கேள்வியும் எழுகிறது.
மாதவிடாய்க் காலங்களில் பள்ளிச் சிறுமிகள் மிகப்பெரிய வேதனையை அனுபவித்து வருகிறார்கள் எனக் குறிப்பிடும் பள்ளித் தமிழாசிரியர் ஒருவர், பயன்படுத்திவிட்டு வீசி எறியப்படும் நிலையை மாற்ற அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோருகிறார்.
சூழலுக்கு கேடு விளைவிக்கும் பெரிய திட்டங்களுக்கெல்லாம் அனுமதி வழங்கிவிட்டு, பெண்களுக்கு பெரும் தொந்தரவாக இருக்கும் நாப்கின் எரிப்பதை அனுமதிக்க யோசிப்பது எந்தவிதத்திலும் நியாயமில்லை என்றும் அவர் கூறினார்.
கல்லூரிகளைப் பொருத்தவரை, பல்கலைக்கழகங்களில் செயல்பட்டு வரும் மகளிரியல் துறையின் தன்னார்வ முயற்சியில் ஆங்காங்கே ஓரிரு ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும், அவை முறையாகச் செயல்படவில்லை.
எனவே, மாநிலத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளி, கல்லூரிகளில் நாப்கின்களை முறையாக அப்புறப்படுத்த- தொடர் சாத்தியமுள்ள- ஏற்பாட்டை அரசு கண்டறிந்து செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக முன்வைக்கப்படுகிறது.
-சா. ஜெயப்பிரகாஷ்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...