சமீபத்தில் வெளியான ஒரு ஆராய்ச்சி முடிவு பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அலுவலக வேலையில் நீண்ட நேரம் சேரில் உட்கார்ந்திருப்பவர்களின் ஆயுள் குறைந்துவிடும் என்கிறது அந்த ஆராய்ச்சி. நம்ப முடியவில்லையா? உண்மை அதுதான்.
நீண்ட நேரம் நாற்காலியில் உட்காருவதாலும், அப்படி உட்காருகையில் பல வருடங்கள் தொடர்ந்து தவறான பொசிஷனின் உட்காருவதாலும் ‘பாஸ்சர்ஸ் ஸ்கோலியசிஸ்’ என்ற பிரச்னை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்கிறது அந்த ஆராய்ச்சி. இதனால் முதுகுத் தண்டு பாதிக்கப்பட்டு, முதுகுவலி வரும். கணினியின் முன்னால் நீண்ட நேரம் ஆடாமல், அசையாமல் ஏன் இமைக்காமல் கூட உட்கார்ந்தே இருப்பதால், ‘ரேடியேட்டிங் பெய்ன்‘ (ராடிகலோபதி) என்ற பாதிப்பும் ஏற்படக்கூடும் என்கிறார்கள் மருத்துவர்கள். தவிர, காலை தொங்கப் போட்டபடி உட்கார்ந்திருக்கும்போது, கால் வீக்கம், வலி, மறத்துப் போதல் போன்றவை ஏற்படலாம்.
ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கும் போது உடலில் எல்.டி.எல் என்ற கெட்ட கொழுப்பு அதிகமாகும்.
எட்டு மணி நேரம் நடமாட்டமே இல்லாமல் ஒரே இடத்தில் உட்காரும் போது உடலில் உள்ள தசைகளில் செயல்பாடுகள் குறைந்து இருக்கும். இதனால் தசைகள் இறுகத் தொடங்கும். கழுத்து வலி, முதுகு வலி, உடல் வலி, உடல் சூடு போன்று பல உபாதைகளுக்கு வழி வகுக்கும்.
நீண்ட நேரம் அமர்ந்தே இருப்பதால் நாளாவட்டத்தில் எலும்பு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படாமல் உடலில் தங்கிவிடும். இது தொடர்ந்தால் உடலில் க்ளுகோஸின் அளவு மாற்றம் அடைந்து டைப் 2 வகை சர்க்கரை நோய் வர அதிக வாய்ப்பு உருவாகிவிடும்.
உடல் உழைப்பு குறைவாக இருப்பதால் போன் மேரோ டென்சிட்டி மெல்ல குறைய ஆரம்பிக்கும். தவிர உடல் பருமனாகும்
அதிக நேரம் அமர்ந்து வேலை செய்யும் சூழலில், வேலை காரணமாக ஏற்படும் மன அழுத்தமானது சில தேவையற்ற ஹார்மோன்களை சுரக்கச் செய்யும். அத்தகைய ஹார்மோன்களில் ஒன்றான ‘கேட்டகோலமைன்’ சுரப்பு அதிகரித்தால் ‘கரோனரி ஹார்ட் டிசீஸ்’ என்ற இருதய சம்பந்தமான பிரச்னை வரலாம்.
இத்தகைய பிரச்னைகளுக்கு தீர்வு என்னவோ எளிமையானதுதான், அலட்சியப்படுத்தாமல் பின்பற்ற வேண்டும் அவ்வளவே.
நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் போது சில எளிய பயிற்சிகள் செய்யலாம். கைகளுக்கும் கால்களுக்கும் அசைவு கொடுக்கும்படியாக அப்பயிற்சிகள் இருப்பது நலம்.
தொடர்ந்து கணினித் திரையைப் பார்ப்பதால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும். தரமான கணினி திரை பயன்படுத்தவேண்டும். அடிக்கடி இமைக்க வேண்டும். அரை மணிக்கொரு முறை திரையிலிருந்து கண்களை விலக்கி விட வேண்டும். எளிய பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை சிறிது தூரமாவது நடக்க வேண்டும்.உட்கார்ந்தபடியே கால்களுக்கு அசைவு கொடுப்பதுபோல், எளிய பயிற்சிகள் செய்வது நலம்.மால்களில், தியேட்டர்களில், அலுவலகத்தில் அல்லது அபார்ட்மெண்ட்டில் என எங்கும் மின் தூக்கியைப் பயன்படுத்தாமல் படிக்கட்டுகளில் ஏறி இறங்க வேண்டும்.நடைப்பயிற்சியைப் போல் ஆரோக்கியத்துக்கு உதவும் பயிற்சி வேறு எதுவும் இல்லை எனவே, நடக்கக்கூடிய தூரத்தில் இருக்கும் இடங்களுக்கு இருசக்கர வாகனத்தில் போகாமல் நடந்து செல்வது நல்லது.வேலைக்கிடையில் சின்னதாக ஓய்வு எடுத்து வெளியில் சென்று தேனீர் அருந்துவிட்டு வரலாம். ஏஸி குளிரிலிருந்து விடுபடுவதுடன் வெளிக்காற்று, சூரியக்கதிர் உடம்பில் படுவது நல்லது.
கணினியின் முன்னால் நாற்காலியில் எப்படி அமர்ந்து கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதிகமான முன் பக்கத்தில் குனிந்தும் அல்லது அளவுக்கு அதிகமாக சாய்ந்து உட்காரக் கூடாது. முக்கியமாக முதுகுத் தண்டு வளையும்படி அமரக்கூடாது.
கணினித் திரை கண்களுக்கு எதிரே சரியான கோணத்தில் இருக்க வேண்டும்.நாற்காலியில் கோணலாக உட்காராமல், முதுகுத் தண்டு நேராக இருக்கும்படி உட்காரவேண்டும். தலை மற்றும் தோள்பட்டைகள் நேராக இருக்க வேண்டும்.
கைமுட்டி 90 டிகிரி வளைந்து இருக்க வேண்டும். அதற்கேற்றாற் போல கீபோர்டை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளவேண்டும்.கால் முட்டி 90 டிகிரி மடிப்பில் இருக்க வேண்டும்.
கால் மேல் கால் போட்டு உட்காரக் கூடாது. காலில் அதிக அழுத்தம் கொடுத்து உட்காரக் கூடாது. காலை குறுக்காக மடித்தோ, அதிகப்படியான அழுத்தம் கொடுத்தோ உட்காரக் கூடாது. கால் பாதம் தரையில் பதியும்படி சமமாக இருக்க வேண்டும்.
நம்முடைய உடலை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வரும் முன் காப்போம் என்பது தான் இக்காலகட்டத்தில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஆப்த வாக்கியம்.
படங்கள் - விக்கி ஹெள
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...