இரண்டு ஆசிரியர்கள் உள்ள தொடக்க பள்ளிகளில், பெரும்பாலும் மாணவர்கள்
எண்ணிக்கை, குறைவாகவே உள்ளது.
எனவே, ஒருவருக்கு மூன்று நாள்,
இன்னொருவருக்கு இரண்டு நாள் வேலை என, ஆசிரியர்கள் பிரித்துக் கொள்கின்றனர்.
ஆனால், வருகை பதிவேட்டில், அனைத்து நாட்களுக்கும் கையெழுத்து போட்டு
விடுகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, அதிகாரிகள் முயன்றால்,
சங்கங்கள் போராட்டத்தில் குதிக்கின்றன. அதைப் பற்றி கவலைப்படாமல், கோவை
மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி காந்திமதி, சில நடவடிக்கைகளை மேற்கொண்டு
உள்ளார்.
திடீர் ஆய்வு :
தினமும் குறைந்தபட்சம், இரண்டு பள்ளிகளுக்கு, காலையில்
அதிரடியாக ஆய்வுக்கு செல்கிறார். உரிய நேரத்தில் வராத ஆசிரியர்களை
பிடித்து, அவர்களிடம் விளக்கம் கேட்கிறார்.காலை, 9:00 மணிக்கு பள்ளி
துவங்கும். தலைமை ஆசிரியர், 8:45க்கும், ஆசிரியர்கள், 9:00 மணிக்கும் வர
வேண்டும். பல பள்ளிகளில், 10:00 மணிக்கு மேல் தான் ஆசிரியர்கள்
வருகின்றனர். அதிலும், சில ஆசிரியர்கள் வாரத்திற்கு இரண்டு, மூன்று நாள்
மட்டுமே பணிக்கு வருகின்றனர்; பாதியில், 'கட்' அடித்து செல்கின்றனர்.
இதையெல்லாம், திடீர் ஆய்வில் காந்திமதி கண்டுபிடித்தார். அதனால், அவரே
பள்ளிக்கு சென்று பாடம் நடத்துகிறார். ஆசிரியர்கள் என்ன பாடம் நடத்தினர்
என்பதை, மாணவர்களிடம் விசாரிக்கிறார். பின், அந்த பாடத்திற்கு, உடனடி
தேர்வு வைக்கிறார்; அதன்மூலம், ஆசிரியர்களின் பாடம் நடத்தும் திறனை அறிந்து
கொள்கிறார்; அதில், பின்தங்கிய ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குகிறார்.
வரவேற்பு : இப்படி, கோவை மாவட்டத்தில் உள்ள, 1,100 தொடக்க பள்ளிகளில், 50
சதவீத பள்ளிகளில், இதுவரை நேரடி ஆய்வு நடத்தியுள்ளார். துணிச்சலான இவரது
நடவடிக்கைக்கு, பெற்றோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இவரை பார்த்து, மற்ற
மாவட்டங்களிலும் இதேபோல் அதிரடி ஆய்வு நடத்த, தொடக்க கல்வி இயக்குனரகம்
முடிவு செய்துள்ளது. அதனால், 'கட்' அடித்து விட்டு, ஊர் சுற்றும்
ஆசிரியர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...