தென்மேற்கு
வங்கக் கடல் பகுதியான இலங்கை, தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த
காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவி வருவதால், தென்தமிழக கடலோர மாவட்டங்களில்
கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னையில் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கை, தமிழகம் ஒட்டியுள்ள பகுதிகள், வட தமிழக கடற்கரை வரையில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வருகிறது.இதன் காரணமாக, அடுத்து வரும் 24 மணி நேரத்துக்கு தமிழகம், புதுச்சேரியில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக் கூடும். இதேபோல், தமிழக உள்மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தென்தமிழக கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதேசமயம் நகரில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்றார்.
சென்னையில் மழை: சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6 முதல் 7 மணி வரையில் லேசான மழை பெய்தது. இதையடுத்து, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
அண்ணா நகர், அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயல் கொரட்டூர், தாம்பரம், பல்லாவரம், கிண்டி, பரங்கிமலை, ஆலந்தூர் ஆகிய இடங்களில் அதிகாலையில் மழை லேசாக தூறியது. இந்தப் பகுதிகளில் காலை 7 மணிக்கு இடி மின்னலுடன் அரை மணிநேரம் கனமழை பெய்தது.
மழை அளவு: இதில், அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் 80 மி.மீ. மழை பதிவானது.
இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை, திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி, சென்னை, கன்னியாகுமரியில் தலா 30 மி.மீ என மழை அளவு பதிவாகிள்ளது.
காரைக்கால், மரக்காணம், கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, காஞ்சிபுரம் மாவட்டம் கோலப்பாக்கம், தரமணி, திருவாரூர், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் தலா 20 மி.மீட்டரும், நாகர்கோவில், மயிலாடி, காஞ்சிபுரம் மாவட்டம் காட்டுக்குப்பம், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், பூதாப்பாண்டி (கன்னியாகுமரி), மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சிதம்பரம், ஆர்.எஸ்.மங்களம் உள்ளிட்ட பகுதிகளில் தலா 10 மி.மீட்டர் அளவும் மழை பதிவாகியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...