'அரசு பள்ளிகளில் கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகளை மேம்படுத்த எத்தகைய
உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்பது குறித்து, அரசு திட்ட அறிக்கை
தாக்கல் செய்ய வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உத்தரவிட்டுள்ளது.
மதுரை ஆனந்தராஜ் 2014ல் தாக்கல் செய்த மனு: 'தமிழகத்தில், 5,720 பள்ளி
களில் கழிப்பறை வசதி இல்லை' என, 2014 ஆக., 8 'தினமலர்' நாளிதழில் செய்தி
வெளியானது. திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்துவதால், மாணவர்களுக்கு
தொற்று நோய் பரவுகிறது. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கழிப்பறை வசதிகள்
செய்ய வேண்டும் என, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு
மனு செய்திருந்தார்.
நீதிபதிகள், 'அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு
தண்ணீர் வசதியுடன் கழிப்பறை ஏற்படுத்த வேண்டும். பராமரிக்க போதிய
பணியாளர்களை நியமிக்க வேண்டும். இதில் மேற்கொண்ட நடவடிக்கை, நிறைவேற்ற
எவ்வளவு கால அவகாசம் தேவை என்பது பற்றி தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய
வேண்டும்' என, 2014ல் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கை நேற்று, நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் அடங்கிய
அமர்வு விசாரித்தது. மூன்று மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வு
செய்ய அமைக்கப்பட்ட வழக்கறிஞர் கமிஷனர்கள் குழுவினர் நேற்று அறிக்கை
தாக்கல் செய்தனர். இதில், கழிப்பறைகள், தண்ணீர் வசதி, துப்புரவு
பணியாளர்கள் போதிய அளவு இல்லை. கழிப்பறைகள் மோசமான நிலையில் உள்ளன.
சில பள்ளி களில் மின் கட்டணத்தை ஆசிரியர்கள் சொந்த பணத்திலிருந்து
செலுத்துகின்றனர். அதை கல்வித்துறையே ஏற்று, மின்வாரியத்திற்கு
செலுத்தலாம். நாப்கின் வசதி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
நீதிபதிகள் உத்தரவில் கூறியதாவது: பல்வேறு குறைபாடுகள் அறிக்கையில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மூன்று மாவட்ட பள்ளிகளிலேயே இந்நிலை எனில்,
மற்ற மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் நிலை பற்றி உங்களுக்கே தெரியும்.
வழக்கறிஞர் கமிஷனர்கள் சுட்டிக்காட்டியுள்ள குறைகளை நிவர்த்தி செய்யவும்,
பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், எத்தகைய உறுதியான நடவடிக்கை
மேற்கொள்ளப்படும் என்பது பற்றி பள்ளிக் கல்வித்துறை செயலர் நவ., 8ல் திட்ட
அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறினர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...