பாரதியார் பல்கலை பணி நியமனத்தில், ஊழல் புகார் எழுந்துள்ள சூழலில், பதிவாளர் பொறுப்பு வகித்த மோகன், திடீரென அப்பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.
கோவை பாரதியார் பல்கலை பதிவாளராக இருந்த செந்தில்வாசன், பல்வேறு முறைகேடு புகார்கள் காரணமாக, ஏப்ரலில் பணி நீக்கம் செய்யப்பட்டார். ஜூலை, 29 முதல், வேதியியல் துறை தலைவர் பேராசிரியர் மோகன், பதிவாளர் பொறுப்பை தற்காலிகமாக ஏற்றார்.
இந்நிலையில், பதிவாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக, மோகன் அறிவித்துள்ளார். இதற்கான கடிதத்தை, துணைவேந்தர் கணபதியிடம் சமர்ப்பித்துள்ளார். பல்கலையில், 76 பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக, பெரும் சர்ச்சை வெடித்துள்ள நிலையில், இவரது ராஜினாமா, பல்கலை வட்டாரத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேராசிரியர் மோகன் கூறியதாவது:
கடந்த, 19ம் தேதி சிண்டிகேட் கூட்டம் நடத்தக்கூடாது என அரசு அனுப்பிய கடிதம், தாமதமாகவே பல்கலை நிர்வாகத்துக்கு கிடைத்தது. இக்கடிதம், துணைவேந்தருக்கு அனுப்பப்பட்டது. மேலும், தமிழக அரசு சார்பில், சிண்டிகேட் நடத்த கூடாது என்பது தொடர்பாக அனுப்பப்பட்ட, ’பேக்ஸ்’ உத்தரவும், துணைவேந்தர் அலுவலகத்தில் பெறப்பட்டுள்ளது.
ஆனால், இதை துணைவேந்தர் மறுத்து, ’அரசு அனுப்பிய கடிதம் கிடைக்கவில்லை’ என்று கூறுகிறார். தொடர்ந்து, 22ம் தேதி சிண்டிகேட் கூட்டம் நடத்த, அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை. ஆனால், துணைவேந்தர் மற்றும் பிற உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி, இக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
தற்போது, என் மீது தவறை திருப்பும் செயல்பாடுகளால், ராஜினாமா செய்துள்ளேன். இதற்கான கடிதத்தை துணைவேந்தரிடம் சமர்ப்பித்துள்ளேன். தொடர்ந்து, வேதியியல் துறைத் தலைவராக என் பணியைத் தொடர்கிறேன். இவ்வாறு, பேராசிரியர் மோகன் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...