டிசம்பருக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை' என, ஐகோர்ட்டில்,
மாநில தேர்தல் கமிஷன் பதில் கூறியுள்ளதால், தேர்தல் பிரிவினருக்கு இடியாப்ப
சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், ஒரு மாநகராட்சி, ஒரு மாவட்ட ஊராட்சி, மூன்று நகராட்சி, 37 பேரூராட்சி, 228 ஊராட்சி, 12 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. மாநகராட்சியில், 100 வார்டுகள். மேட்டுப்பாளையம் நகராட்சியில், 33, பொள்ளாச்சியில், 36, வால்பாறையில், 21 வார்டுகள். பேரூராட்சிகளில், 585, ஊராட்சிகளில், 228 ஊராட்சி தலைவர் பதவி, 2,034 வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றியத்தில், 155, மாவட்ட ஊராட்சியில், 17 வார்டுகள் உள்ளன. மொத்தம், மாவட்ட அளவில், 3,209 பதவிகள் உள்ளன.
இப்பதவிகளுக்கு அக்., 17, 19ல் இரு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருந்தது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிட இருந்த நேரத்தில், எதிர்க்கட்சியினருக்கு போதிய அவகாசம் வழங்கவில்லை என கூறி, உள்ளாட்சி தேர்தலை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.
இவ்வழக்கு விசாரணையில், 'டிசம்பருக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வாய்ப்பில்லை' என, மாநில தேர்தல் கமிஷன் பதிலளித்துள்ளது. இது, தேர்தல் பிரிவினருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் பிரிவினர் கூறியதாவது:
இதுவரை செய்த தேர்தல் ஏற்பாடுகள் வீணாகி விட்டன. ஏனெனில், வார்டு வாரியாக பிரிக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல், டிச., 31ம் தேதியுடன் காலாவதியாகி விடும். 2017, ஜனவரியில், மத்திய தேர்தல் கமிஷன், புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடும். இதை ஆதாரமாகக் கொண்டு, மீண்டும் பட்டியல் தயாரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மாநில தேர்தல் கமிஷனின் மேல்முறையீடு மனு, டிச., 6ல் விசாரணைக்கு வருகிறது. வார்டு வரையறை மற்றும் இட ஒதுக்கீடு தொடர்பான மனுக்கள், ஜன., 3ல் விசாரிக்கப்படுகிறது.
அதனால், தேர்தல் தொடர்பான நிலைப்பாடு, ஜன.,யில்தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பு தனி அதிகாரிகளிடம் டிச., 30 வரை ஒப்படைக்கப்பட்டுள்ளது. டிசம்பருக்குள் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்பதால், பதவியை மீண்டும் நீட்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வார்டு வரையறை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால், மேலும் ஆறு மாதங்கள் தாமதமாகும்.
மார்ச், ஏப்., மாதங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறும் என்பதால், ஓட்டுச்சாவடிகளை தயார்படுத்துவதில் சிக்கல் ஏற்படும். புதிதாக வாக்காளர் பட்டியல் தயாரித்து, ஜன., - பிப்., மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும்; இல்லையெனில், மே மாதமாகி விடும். இதற்கு, ஐகோர்ட் மற்றும் மாநில தேர்தல் கமிஷனின் வழிகாட்டு நெறிமுறையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
பணம் திரும்ப கிடைக்குமா?
கவுன்சிலர் பதவிக்கு ஆசைப்பட்டு, 'சீட்' வாங்க ஏராளமானோர், லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ளனர். தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், பணத்தைத்திரும்ப கேட்டு, நிர்வாகிகளுக்குநெருக்கடி தரஆரம்பித்தனர். 'எப்போது தேர்தல் நடந்தாலும், உங்களுக்குத்தான் சீட்' எனக்கூறி, பணம் கொடுத்தவர்களை நிர்வாகிகள் சமாளித்து வருகின்றனர். வார்டுகளை மறுசீரமைப்பு செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டால், கவுன்சிலர் கனவு நிறைவேறாது என்பதால், கொடுத்த பணம் திரும்ப கிடைக்குமா என்ற ஏக்கத்தில் பணம் கொடுத்தோர் உள்ளனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...