Home »
» பேராசிரியர் பணிக்கு ரூ. 45 லட்சம் வரை பேரம்?
கோவை பாரதியார் பல்கலையில் பேராசிரியர், உதவிப் பேராசிரியர், இணைப்
பேராசிரியர்கள் பணி நியமனத்துக்கு, 35 முதல் 45 லட்சம் ரூபாய் வரை பேரம்
நடப்பதாக குமுறும் விண்ணப்பதாரர்கள், கவர்னரிடம் புகார் செய்ய
திட்டமிட்டுள்ளனர்.
தீர்வு கிடைக்காவிடில், கோர்ட்டில் முறையிடவும் முடிவு
செய்துள்ளனர்.
கோவை பாரதியார் பல்கலையில், 28 துறைகளில், காலியாக இருக்கும்
பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் உள்ளிட்ட 64
பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள், கடந்த ஜூலை, ஆகஸ்டில்
வெளியிடப்பட்டன. ஆயிரத்து 976 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 90 சதவீதத்தினர்
நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். கடந்த செப்., 8 முதல் நேர்காணல் நடப்பதாக
அறிவிக்கப்பட்டது. ஆனால், காரணம் தெரிவிக்கப்படாமல் திடீரென
நிறுத்தப்பட்டது. மீண்டும் அக்., 26 முதல் பணிகள் துவங்கின.
பெயரளவு நேர்காணல் : விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டு
சான்றிதழ் சரிபார்ப்பும், நேர்காணலும் நடந்து வருகிறது. பங்கேற்றவர்களிடம்
இரண்டு நிமிடங்கள் கூட நேர்காணல் நடத்தப்படவில்லை என கூறப்படுகிறது;
சிலரிடம், சுயவிபரம் மட்டும் கேட்டுள்ளனர்.
தேர்வு கமிட்டியில் கவர்னரால் நியமிக்கப்பட்ட ஒருவர்; அரசால்
நியமிக்கப்பட்ட நான்கு பேர்; பல்கலை சார்பில் துணைவேந்தர், பாட வல்லுநர்கள்
நான்கு பேர், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு சார்பில் ஒருவர்,
மாற்றுத்திறனாளிகள் சார்பில் ஒருவர் வீதம், 13 பேர் இருந்தும், பணி
நியமனத்துக்கான தகுதியான கேள்விகள் கேட்கப்படவில்லை என, நேர்காணலில்
பங்கேற்ற பலரும் குமுறுகின்றனர்.
கவர்னரிடம் புகார் : நேர்காணலில் பங்கேற்றவர்கள் கூறியதாவது: ஆசிரியர் பணி
என்பது, யார் அதிக லஞ்சம் தருகிறார்களோ, அரசியல் மற்றும் அதிகார
சிபாரிசுடன் வருகிறார்களோ, அவர்களை நியமிப்பது அல்ல. அது ஒரு புனிதமான பணி.
தகுதியான நபர்களை தேர்வு செய்யும் வகையில்தான், தேர்வுக்குழு செயல்பட
வேண்டும். நேர்காணலில் கேள்விகளும் எழுப்பப்பட வேண்டும். ஆனால், பாரதியார்
பல்கலை நேர்காணல் இதற்கு முற்றிலும் மாறாக உள்ளது. எங்களிடம் சுய விபரங்களை
மட்டுமே கேட்டனர். நாங்கள் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரைகள் குறித்து
கேட்கப்படவில்லை. நேர்காணலுக்குமுன், எங்களிடம் சிலர் பேரம் பேசினர்; 35 -
45 லட்சம் ரூபாய் வரை தருவீர்களா என்றெல்லாம் கேட்டனர். எனவே, பல்கலை பணி
நியமனத்தில் முறைகேடு நடக்க அதிக வாய்ப்புள்ளது. கவர்னரிடம் புகார்
செய்வோம். தீர்வு கிடைக்காவிடில், நீதிமன்றத்தில் முறையிடுவோம். இவ்வாறு,
நேர்காணலில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
துணைவேந்தர் விளக்கம் : முறைகேடு புகார் குறித்து துணைவேந்தர் கணபதி
கூறுகையில்,
''யு.ஜி.சி., விதிகளின்படியே, முறைகேடுகளுக்கு இடமளிக்காமல் பணிநியமன
வேலைகள் நடக்கின்றன; இதுதொடர்பான புகார்களில் உண்மை இல்லை,'' என்றார்.
தடுக்க வழியுண்டா : பல்கலை பேராசிரியர்கள் சங்க மாநில முன்னாள்
பொதுசெயலாளர் பிச்சாண்டி கூறுகையில், ''உதவி பேராசிரியர்கள் நியமனத்தில்
யு.ஜி.சி., விதிமுறைப்படி நெட், ஸ்லெட், பி.எச்டி., முடித்தவர்களும்;
இணைப்பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர் பணியிடங்களில் யு.ஜி.சி., ஊதிய
விகிதாச்சாரப்படி ஊதியம் மற்றும் தர ஊதியம் பெறுபவர்களும் மட்டுமே நியமனம்
பெற முடியும். ஆள் தேர்வுக்கான முடிவுகள் ஆட்சிக்குழுவின் (சிண்டிகேட்)
அனுமதிக்கு வைக்கப்படும்போது, உறுப்பினர்கள் முறையாக ஆய்வு செய்தால்,
முறைகேடுகளை தடுக்கலாம்,'' என்றார்.
கவர்னர் 'நாமினி' திடீர் மாற்றம் ஏன் : தேர்வுக் கமிட்டியில், 'கவர்னர்
நாமினி'யாக, முதலில், தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் ராமசாமி
நியமிக்கப்பட்டார். திடீரென அவர் நீக்கப்பட்டு, அன்னை தெரசா பல்கலை
முன்னாள் துணைவேந்தர் மணிமேகலை நியமிக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
முறைகேடுகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும் முயற்சியே இது என்ற
குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இது குறித்து ராமசாமியிடம் கேட்டபோது,
''கவர்னர் நாமினியாக என்னை நியமித்தது உண்மை; நானாக விலகவில்லை.
நீக்கியதற்கான காரணமும் எனக்குத் தெரியாது' என்றார்.
மற்றொருவர் மீதும் அதிருப்தி : தேர்வுக்குழுவில் அரசு 'நாமினி'யாக
நியமிக்கப்பட்டுள்ள பெரியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன், முன்பு,
பாரதியார் பல்கலை துணைவேந்தராக பணியாற்றியவர். அவர் இங்கு பதவி வகித்தபோது,
பணி நியமன முறைகேடுகள் செய்ததாக ஏற்கனவே புகார் எழுந்து, விசாரணையும்
நடந்தது. அவரை தேர்வுக்குழுவில் சேர்க்க வேண்டிய
அவசியம் என்ன என்றும் பல்கலை வட்டாரத்தில் சந்தேகம் கிளப்பப் படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...