ரூபாய் நோட்டு ஒழிப்பு, அரசியல் சாசனப்படி செல்லத்தக்கதா என்பது பற்றி
சுப்ரீம் கோர்ட்டு டிசம்பர் 2-ந் தேதி விசாரணை நடத்துவதாக அறிவித்தது.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள்
ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த 8-ந் தேதி அதிரடியாக அறிவித்து, திரும்பப்பெற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தது. இந்த அறிவிப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உள்பட பல்வேறு தரப்பினரால் 14 பொது நல வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இதே போன்று நாட்டில் உள்ள பல்வேறு ஐகோர்ட்டுகளிலும் வழக்குகள் தாக்கலாகி உள்ளன.
சுப்ரீம் கோர்ட்டில் தாக்கலான வழக்குகள், ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் உத்தரவிட்டபடி, மத்திய அரசு நேற்று முன்தினம் பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தது.
விசாரணை
இந்த நிலையில், அந்த வழக்குகள் திட்டமிட்டிருந்தபடி நேற்று தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரை கொண்ட அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.
விசாரணையின் ஆரம்பத்தில், தனிநபர் ஒருவரின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், “மக்கள் சாலைகளில் பட்டினியால் தவிக்கின்றனர். அவர்களிடம் கையில் பணம் இல்லை. அத்தகைய ஒரு நிலையை என்ன செய்யப்போகிறீர்கள்?” என கேள்வி எழுப்பினார். மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி அதை மறுத்தார்.
4 வழக்குதாரர்களில் ஒருவரும், வக்கீலுமான எம்.எல். சர்மா, “மக்கள் ஒவ்வொரு நாளும் கஷ்டப்படுகிறார்கள். இந்த ரூபாய் நோட்டு ஒழிப்பு திட்டத்தினால் அரசியல் தலைவர்கள் யாரும் கஷ்டப்படவில்லை. அரசாங்கம், இப்படி ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என அறிவித்திருக்கக்கூடாது. தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு, கோர்ட்டு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
கூச்சல், குழப்பம்
தொடர்ந்து அவர் கூறிய ஒரு கருத்தால், கோர்ட்டு அறையில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. வக்கீல்கள் ஒருவருக்கொருவர் கைகளை உயர்த்தி கோஷமிட்டனர்.
அவர்களை தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் கண்டித்தார். கண்ணியத்தை அனைவரும் கடைப்பிடிக்காவிட்டால், வழக்கு விசாரணையை மேலும் 6 வாரத்துக்கு (கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்கு பின் விசாரிக்க) ஒத்திவைக்க நேரிடும் என எச்சரித்தார்.
டிசம்பர் 2-ந் தேதி விசாரணை
தொடர்ந்து அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, பிற கோர்ட்டுகளில் தாக்கலாகி உள்ள வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றக்கோரி தாக்கலான வழக்குகள் மீதான விசாரணை டிசம்பர் 2-ந் தேதிக்கு ஒத்திப்போடப்பட்டுள்ளதை நினைவுகூர்ந்து, எல்லா வழக்குகளையும் அதே நாளில் விசாரிக்கலாம் என யோசனை தெரிவித்தார்.
அதை தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வு ஏற்றுக்கொண்டது. இதுபற்றி நீதிபதிகள் குறிப்பிடுகையில், “இரண்டு அம்சங்கள் குறித்தும் (ரூபாய் நோட்டு ஒழிப்பு அறிவிப்பு அரசியல் சாசனத்தின்படி செல்லத்தக்கதா என்பது பற்றியும், இந்த நடவடிக்கையால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அவதிகள் குறித்தும்) வருகிற வெள்ளிக்கிழமை (டிசம்பர் 2-ந் தேதி) மதியம் 2 மணிக்கு விசாரிக்கப்படும்” என அறிவித்தனர்.
இந்த திட்டம் பற்றியும், அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகளை சமாளிக்க எடுக்கப்படுகிற நடவடிக்கைகள் குறித்தும் கூடுதலான பிரமாண பத்திரம் ஏதேனும் இருந்தால் அதை அந்த நாளில் அட்டார்னி ஜெனரல் தாக்கல் செய்யலாம் என நீதிபதிகள் கூறினர்.
எனவே ரூபாய் நோட்டு ஒழிப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அந்த நாளில் முழுமையான விசாரணை நடத்தும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...