தொடக்கப் பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், இரு ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்ததற்காக, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரைக் கண்டித்து, வரும் 18ம் தேதி, ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு தொடர்பாளர் ராஜசேகரன் வெளியிட்ட அறிக்கை: சூலுார் ஒன்றியத்தில், 80க்கும் மேற்பட்ட, தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின், ஊக்க உயர்வு நிலுவைப்பலன், 4 ஆண்டுகளுக்கும் மேலாக தரவில்லை. இதுகுறித்து கேட்க, சூலுார் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ரமேஷ்பாபுவின் அலுவலகத்திற்கு, கடந்த 28ம் தேதி, பள்ளி முடிந்த பின், ஆசிரியர்கள் சென்றனர். ஆசிரியர்கள் முற்றுகையிட்டதால், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் காந்திமதி, சம்பவ இடத்திற்கு வந்து, நவ., 10ம் தேதிக்குள், பணப்பலன் கிடைக்க, ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். இந்நிலையில், அடுத்த இரு நாட்களில், மாவட்ட ஆசிரியர் கூட்டணி சூலுார் வட்டார தலைவர் விஜயலட்சுமி, செயலர் ெஹன்ரி விக்டரை, பணி இடைநீக்கம் செய்வதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆணையில், போராட்டத்திற்கு துாண்டுதல், பள்ளி நேரத்தில் போராட்டம் நடத்திய காரணத்தால், 17இ விதிப்படி, சஸ்பெண்ட் செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதை கண்டித்து, தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், முதற்கட்ட கண்டன ஆர்ப்பாட்டம், வரும் 1ம் தேதி, டவுன்ஹால், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அலுவலகம் முன் நடக்கிறது. இவ்வாறு, அதில் குறிப்பிட்டுள்ளது. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் காந்திமதியிடம் கேட்டபோது, ''சூலுார் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்தில், பணி செய்ய விடாமல், முன்னறிவிப்பின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் தான், இரு ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கல்வித்துறை விதிகளின் படி நடவடிக்கை எடுத்துள்ளேன்,'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...